இந்தக் குகைக்கு வயது 50 லட்சம்!



ஐம்பது மாடிகள் கொண்ட ஓர் அடுக்குமாடி கட்டடத்தை உள்ளே ஒளித்து வைக்க முடியும். ஏன், ஒரு தெருவையே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கலாம். அந்த அளவுக்கு பெரியது ஹாங் சன் டூங் குகை. வியட்நாமில் டோங்ஹாய் நகர் அருகே உள்ள  ஃபோங் நா - கே பாங் தேசிய பூங்காவின் மத்தியில் அமர்ந்திருக்கிறது இந்தக் குகை.

இதன் உயரம் 200 மீட்டர். நீளம் 9 கிலோ மீட்டர். சுமார் 50 லட்ச ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.ஆனால், 1991ம் ஆண்டுதான் ஹோகான் என்பவர் இந்தக் குகையைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார்.

அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், நதியைக் கடந்துதான் குகையின் நுழைவாயிலை அடைய முடியும். தவிர, குகைக்குள் நுழைய வியட்நாம் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். வருடத்துக்கு 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. குகையைப் பார்க்க இரண்டு வருடமாக காத்திருப்பவர்கள்கூட உண்டு!

த.சக்திவேல்