இந்தியே இந்தியாவுக்கு எதிரி



மோஹன் ராம் என்று ஓர் ஆங்கில மொழிப் பத்திரிகையாளர். அவர் ‘Hindi Against India: The meaning of the DMK’ என்ற சிறு நூலை 1968ம் ஆண்டு எழுதினார். மோஹன் ராம் திமுக ஆதரவாளர் அல்ல. திமுக-வை கடுமையாக விமர்சிக்கிறார். ஆயினும் அவர் அந்த நூலில் சுட்டிக்காட்டும் ஒரு பிரச்னை முக்கியமானது.

வடநாட்டில் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் நலன்களைச் சார்ந்து அரசியல் செய்த தலைவர் ராம் மனோஹர் லோஹியா, இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் நெடுங்காலமாக அந்நியர்களுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பாலும், காலனிய தாக்கத்திற்கு ஆட்பட்டதாலும் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தன; ஆனால், மத்திய இந்தியாவின் இந்தி பேசும் பகுதிகள் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியிலும் சரி, நவீன சமூக உருவாக்கத்திலும் சரி பின்தங்கிவிட்டன என்று கருதியதை சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், இந்த வாதம் மத்திய இந்தி பேசும் பகுதிகளையும் எப்படி முற்போக்கான வளர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்பதான கேள்விகளாக அமையாமல், அவர்களுடைய பிற்போக்குச் சிந்தனைகளை பிறர்மீதும் திணிப்பதாக மாறும் போக்கை இந்துத்துவ அமைப்புகள் முன்னெடுத்தன என்கிறார் மோஹன் ராம்.

அதன் பகுதியாகவே இந்தி மொழியை நாட்டின் பொது மொழியாக, குறைந்தபட்சம் ஒரே ஆட்சி மொழியாக மாற்றும் கோரிக்கைகள் வலுத்தன. இந்தியா முழுவதும் மத்திய அரசின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மாறினால், அந்த அலுவலகங்களில் பணியாற்ற விரும்பும் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.

அப்போது இந்தி பேசும் மாநில மக்கள் வேறு எந்த மொழியும் கற்க அவசியமின்றி மத்திய அரசு அலுவலகங்களில், துறைகளில் பணி செய்வதும், பிற மாநில மக்கள் தாய்மொழியல்லாத இந்தி கற்றே மத்திய அரசுப் பணி செய்யவேண்டும் என்பதுமான நிலை ஏற்பட்டால் இந்தி பேசுபவர்கள் முதல்தர குடிமக்களாகவும், பிறர் இரண்டாம் தர குடிமக்களாகவும் மாறிவிடுவார்கள் அல்லவா?

இதுதான் பிரச்னையின் மூலாதாரம். மோஹன்ராம் இத்தகைய முயற்சி இந்தியாவை பிளவுபடுத்துவதில், பல்வேறு மாநிலங்களும் பிரிந்துபோவதில்தான் போய் முடியும் என்று கருதினார். அதனால்தான் ‘இந்தி இந்தியாவுக்கு எதிரி’ என்று தன் நூலுக்கு பெயர் வைத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகான புதிய இந்திய தேசிய அரசின் சிக்கலாக காலனிய அரசின் மொழியான ஆங்கிலத்தையே எப்படி ஆட்சி மொழியாகத் தொடர்வது என்ற கேள்வி எழுந்தது. அரசியல் நிர்ணய சபை இந்த விஷயத்தில் திட்டவட்டமான முடிவை எடுக்காமல் 15 ஆண்டுகளுக்குள் அனைத்து மாகாணங்களையும் இந்தி கற்கச்சொல்லி கோருவோம். அதுவரை ஆங்கிலமும்  கூடுதல் ஆட்சி மொழியாக நீடிக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

பதினைந்து ஆண்டுகள் நிறைவடையும் சமயம் தமிழகத்திலும், வங்காளம். ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கிளர்ச்சிகள் துவங்கின. தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி வெடித்தது. பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் கணக்கற்றவர்கள் உயிரிழந்தனர். அதனையொட்டி ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இன்றுவரை அதுதான் நிலை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழி ஆட்சிமொழியாக விளங்குவதும், மாநிலங்களுக்கு இடையிலான, மத்திய அரசுடனான தொடர்பிற்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதுமே அறிவுடைமை. இதற்கு முக்கியமான தேவை அதிகாரப் பரவலாக்கம். எல்லா முடிவுகளையும் மத்தியில் எடுக்கும்படி அதிகாரத்தைக் குவிப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் மொழிப் பிரச்னை என்பது அதிகாரக் குவிப்பின் குறியீடு என்பதை சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கலாசார ரீதியாக  இந்தி பேசும் பகுதிகளின் வரலாற்றுரீதியான பிற்போக்கு மனநிலையை, மதவாத நோக்குகளை அனைவருக்கும் பொதுவாக்குவது, பெரும்பான்மை வாதத்தின் துணையுடன் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தி மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது என்பதே இந்தி மொழிப் பிரச்னையின் உட்கிடக்கை.

உருதுவே ஆட்சிமொழியென்றதால் பாகிஸ்தான் இரண்டாகப் பிளந்து கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாக மாறியது. சிங்களமே ஆட்சிமொழி என்றதால் இலங்கை மிகப்பெரிய உள்நாட்டு யுத்தத்தை சந்தித்தது. மோஹன் ராம் கூறியது போல இந்தியாவுக்கு ஆதரவாக சிந்திப்பவர்கள் யாரும் இந்தியே ஆட்சிமொழியெனும் போக்கை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவுக்கு எதிராகச் சிந்திப்பவர்கள்தான் இந்தி மொழி ஆதிக்கத்தை, அது ஒற்றை ஆட்சிமொழியாக மாறுவதை வலியுறுத்துவார்கள்.                

ராஜன் குறை