நான் சாலமன் பாப்பையா



பண்டிகை என்றாலே ஒவ்வொரு வீட்டிலும் நான் இருக்கேன். ஆனால், என் குழந்தைப்பருவத்தில இந்தப் பண்டிகைக்கு புத்தாடை கிடைக்குமா, இல்லை அந்தப் பண்டிகைக்காவது கிடைக்குமா என்கிற நிலையிலதான் குடும்பச் சூழல் இருந்தது.அப்பா சுந்தரராம், அம்மா பாக்கியம். ரெண்டு பேருமே ஆரப்பாளையம் பகுதி மில் தொழிலாளிக. அன்றாடம் சம்பாத்தியம். ஒன்பது பிள்ளைக. நான் அதுல ஒன்பதாவது. சாப்பாடு, காசு தட்டுப்பாடு இல்லாமலா இருக்கும்.

எனக்கு மூத்தவுக எல்லோருமே குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மில் வேலைக்கு போயிட்டாக. மூத்தார்கள் கிட்டேயிருந்து பெரிய உதவிகள் எதுவும் கிடையாது. அம்மாவுக்கும் மில் வேலை. தூசி காரணமா அன்றைய தேதிக்கு ராஜநோயா சொல்லப்பட்ட ஆஸ்துமா அவங்களைத் தாக்கி படுத்த படுக்கையாகிட்டாங்க. மருத்துவம் பார்க்க பண வசதி இல்லை.

உலக யுத்தம் முடிஞ்ச நேரம். அரிசி, விறகு, எல்லாமே தட்டுப்பாடு. அப்பாவுக்கு லைட்டா போட்டுக்கற மாதிரியான குடிப்பழக்கம் வேற... கேட்கணுமா? ஆனால், இதையெல்லாம் மீறி எனக்கு படிப்பு மேல ஒரு ஈடுபாடு. அப்பாவுக்கும் நான் படிக்கணும்னு ஆசை. முனிசிபாலிட்டி பள்ளில சேர்ந்துட்டேன். அண்ணன் டிரேட் பள்ளியில படிக்கிறார். அடுத்து தனியார் பள்ளி. அது அமெரிக்கன் கல்லூரிக்கு பாத்தியப்பட்ட பள்ளி. அங்கே ரூ.2.50 பள்ளிக் கட்டணம்.

என் படிப்பையே தீர்மானிச்சது அந்த ரூ.2.50தான். என் வாழ்க்கையில நான் கடவுளைப் பார்த்ததில்லை. நண்பர்களைத்தான் கடவுள் வடிவத்துல பார்த்திருக்கேன். துவண்டு போறப்ப எல்லாம் நண்பர்கள் கைகொடுப்பாக. தியாகராஜன், வாசுதேவன்... இருவருமே கொஞ்சம் வசதியானவங்க. இன்னைக்கு ஆளாகி நிற்கறேன்னா அந்த ரெண்டு பேரும்தான் காரணம். எப்படியாவது பணம் கொண்டு வருவாங்க.

அடுத்து கல்லூரி. நம்ம கிட்ட எங்க பணமிருக்கு? என்னடா செய்யறதுன்னு இருந்தப்ப என் வாத்தியாரு ஒருத்தர் திடீர்னு வந்து என்னைக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடெல்லாம் போட்டு கல்லூரியில விண்ணப்பமும் வாங்கிக் கொடுத்து ‘படிக்கணும்டா... படிப்புதான் எல்லாம்’ அப்படின்னாரு. நம்ம மனசுக்குள்ள ஒரு கேள்வி. இந்த பீஸ் நாம கட்டணுமா இல்லை இவரு கட்டுவாரா?

திரும்பப் பணப் பிரச்னை. என் பெரியப்பா கிட்ட போய் நின்னா, இதோ வரேன்பா அப்படினு சொல்லிட்டு போனவரு இப்ப வரை வரவே இல்லை. அப்பறம் என் இன்னொரு நண்பர் எனக்குப் பணம் கொடுத்து படிக்க உதவினார். எங்க அம்மாவுக்கு யோசனை... ‘காலேஜா... கஷ்டமாச்சேப்பா. எப்படி படிக்கப் போறே’ன்னு கேட்கறாக. நான் சொல்றேன் ‘இல்லங்கம்மா படிச்சா நல்லதுதானே’ன்னு. அம்மாவை நீ, வா,போனுதான் கூப்பிடுவேன். முதல்முறையா நீங்க வாங்கனு சொல்லவும் கண்ணீர் விட்டு பேச ஆரம்பிச்சாக. ‘என்னையவா நீங்கனு சொன்ன’... ‘ஆமாம்மா. என் ஸ்நேகிதங்க வீடுகள்ல அவுக அம்மாவை அப்படிதான் கூப்பிடுறாக’னு சொன்னேன். அப்படி ஒரு ஆனந்தம் என் அம்மாவுக்கு.

நான் ரெண்டாம் வருஷம் கல்லூரி படிக்கும்போது இறந்துட்டாக. அப்ப அடக்க செலவுக்குக் கூட பணமில்லை. அந்த சூழல்ல வேற வழியில்லாம என் நண்பன் வீட்டுக்குப் போறேன். அவனைப் பார்த்ததுமே எனக்கு கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சது. தகவலைச் சொன்னேன்.
அந்த சமயம் என் நண்பன் எதைப்பத்தியும் யோசிக்கலை. கையில இருந்த மொத்தப் பணத்தையும் கொடுத்து ‘நீ கிளம்புடா மொதல்ல ஊருக்கு’ன்னு சொன்னான்.

அம்மா இழப்பை கடக்க முடியாம கடந்தா... அடுத்து பிஏ அமெரிக்கன் கல்லூரில. எங்க அண்ணி - அண்ணன் மனைவி - தன் நகையை வைச்சு பணம் கொடுத்தாக. படிச்சாச்சு. நடுவுல சர்வீஸ் கமிஷன் எழுதி அந்த வேலையும் வருது. ஆனா, என் சிந்தனை எம்.ஏ தமிழ் தியாகராயா கல்லூரில.
எங்கயும் தமிழ் கிடையாது. முதல் முறையா எனக்காகவே தமிழ் வந்தமாதிரி ஆனந்தம். அவ்வளவு சந்தோஷம்.

ரூ.96 வேணும். எல்லா பணம் வர்ற கதவுகளையும் தட்டி வாங்கியாச்சு... இனி எங்க போறதுன்னு யோசிக்கும்போதுதான் அப்பா மில் வேலை சர்வீஸ் முடிஞ்சு வந்தாரு. அப்போ கொஞ்சம் காசு வந்துச்சு. கடன்லாம் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு படிப்புக்கு பணம் கட்டினேன்.
அடுத்து பரீட்சை எழுத பணம் வேணும். எங்கே கேட்கறதுனு தெரியாம நண்பன் தியாகராஜனுக்கு கடிதம் எழுதினேன். அவன் தன் சைக்கிளை வித்து எனக்கு பணம் அனுப்பினான்!

இடையில சர்வீஸ் கமிஷன் எழுதினதுல எனக்கு செங்கல்பட்டுல வேலை கிடைச்சது. போக மனமில்லை. ஆனா, ‘பையன் எம்,ஏ படிச்சிட்டான்... கலெக்டரே வந்து கூட்டிட்டு போயிடுவாரு’னு வீட்ல நினைக்கறாக. நமக்குத்தானே நிலவரம் தெரியும்!

சொந்த ஊரை விட்டு எதுக்கு அங்கே வேலைன்னு ஒரு டுடோரியல் கல்லூரியில் சேர்ந்தேன். இருபது நாளுதான். அதுக்குள்ள அடுத்த வேலை விளம்பரம் வருது. மேலூர் கல்லூரியில தமிழ் வாத்தியார் வேலை.அங்கேதான் முத்தமிழ் விழா எல்லாம் ஆரம்பிச்சு பிள்ளைக மத்தியிலேயும் செல்வாக்கு. சம்பளம் நூத்தி அஞ்சு ரூவா. சாப்பாடு, தங்க இப்படி இந்தக் காச வெச்சுகிட்டு ரொம்ப சிரமம். திருச்சி வந்துதான் மேலூர் வரணும்.

அமெரிக்கன் கல்லூரியில வாத்தியார் வேலை இருந்தது. பயன்படுத்திக்கிட்டேன். சம்பளம் ரூ.145. கொஞ்சம் கடனெல்லாம் அடைக்க ஆரம்பிச்ச நேரம். 1963ல அப்பா கல்யாணப் பேச்சு எடுத்தார். ‘வரதட்சணை வாங்கக் கூடாது’ன்னு சொன்னேன். எங்க அப்பா, ‘நாம கேட்க வேண்டாம்டா... அவுகளா கொடுத்தா வாங்கிப்போம்’னு சொன்னாரு.

எனக்கும் எங்க அப்பாவுக்கும் பெரிய போராட்டம். அந்தக் காலத்து மனுஷன். நம்மாள எதிர்த்துப் பேச முடியுமா? அந்த விஷயத்துல மட்டும் நான் தோத்துப் போயிட்டேன். சங்கடமா இருந்துச்சு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது. அந்தம்மா வந்தபிறகுதான் வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சது. என்னை ஆளாக்கினது அவுகதான். திருமதி ஜெயபாய் என் வீட்டம்மா. ஒரு பொண்ணு விமலா. ஜப்பான்ல படிச்சு முடிச்சாக. திருமணமாச்சு. ஒரு பையன். என் ஸ்நேகிதர்கள் தியாகராஜன், ராமமூர்த்தி ரெண்டு பேர் பேரையும் சேர்த்து தியாகமூர்த்தினு பையனுக்கு பேரு வைச்சேன். அவரு சொந்தமா பிரியா கம்ப்யூட்டர்னு வெச்சுருக்காரு.

எனக்கும் இந்த மேடைப் பேச்சுக்கும் அம்புட்டு ஒண்ணும் தொடர்பு கிடையாது. அதுல பெரிய விருப்பமும் இல்ல. அடிப்படையில பேச்சாளனும் கிடையாது. ஆனா, எனக்கு ஒரு வேகம் வந்தா வார்த்தைகள் துள்ளி விழும். அதனால அப்படின்னு ஒரு பேரு. பரிசுகளும் கூட பள்ளிக் காலத்துலயே கிடைச்சது. வாத்தியார் ஆனதும் பேச்சுத் திறமை இன்னும் நல்லாவே வளர்ந்திடுச்சு. பேசத் தெரியாதவன் வாத்தியாரே கிடையாது. பேசலைன்னா பயலுகளை வகுப்பறையில கட்டி வைக்கவே முடியாது. அதிலும் தமிழ் ஆசிரியர்னா கேட்கவே வேண்டாம். இருக்கற எல்லா கலகமும் தமிழ் வகுப்புலதான் செய்வாய்ங்க!

பயலுகளை கொஞ்சம் கட்டிப்போட அதிகம் பேசுவேன். அப்பறம் என்ன... என் வகுப்புன்னா ஆசையா வர ஆரம்பிச்சாய்ங்க. அதுவும் சிலருக்குப் பிடிக்காம போட்டுக் கொடுக்கற வேலையெல்லாம் நடந்துச்சு. அதையெல்லாம் கல்லூரி மேலாளர் கண்டுக்கவே இல்லை. அப்பதான் எட்டையபுரத்துல பாரதியார் விழா. அங்க நான் பேசினேன். அடுத்து கல்கத்தாவுல பாரதியார் விழா. அங்க பேசினேன். பத்து நாட்கள் பல கூட்டங்கள். தினசரி பேச்சுதான். அப்படியே பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்ல பேச ஆரம்பிச்சேன். அப்பதான் இந்த பட்டிமன்றங்கள் பிரபலமாகுது.

தவத்திரு குன்றக்குடிகள் ஐயா கூட பேச ஆறு பேர் வேணும். அதுல நான் ஒருத்தனா சேர்ந்தேன். கோயில்கள், வீதிகள்னு இலக்கிய பட்டிமன்றங்கள். ஆனால் இலக்கியம் பெரிய அளவுல மக்கள்கிட்ட போகலை. பாமரனுக்கு என்னத்த தெரியும் இலக்கியம்? ஆனாலும் நடத்துவோம்.
‘சிறந்த தம்பி கும்பகர்ணனா, இல்லை இலக்குமணனா’னு பேசுவோம். சின்னப் பயலுகளாம் முன்னாடி உக்காந்துக்கிட்டு ஒரு கல்லை விட்டு எறிஞ்சு சிரிப்பாய்ங்க.

இதுல இங்க இலக்குமணன்னு பேசினா அங்கிட்டு அந்தக் கோயில்ல போயி கும்பகர்ணன்னு பேசுறது. அப்ப பக்தியே இங்கே பொய்யாகிடுமேன்னு அரசாங்கமே கோயில்கள்ல பட்டிமன்றங்கள் கூடாதுன்னு அறிவிச்சிட்டாங்க. வீதியிலதான் பட்டிமன்றம். எங்க பேச்செல்லாம் வீணாகும். காசும் வராது. துண்டு ஒண்ணு போடுவாக. சாப்பாடும் கிடைக்காது. என் வீட்டம்மா சங்கடப்பட்டாக ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக்குறீகன்னு. ‘இல்லம்மா சம்பளத்தை உன் கிட்ட கொடுத்திடுறேன். இப்படி மேடைகள்ல ஒரு அஞ்சு ரூவா வந்தா புத்தகம் வாங்கிப்பேன்’னு சொன்னேன்.

அப்பதான் மேடைகள்ல கொஞ்சம் இறங்கி கலோக்கியல் தமிழை மேடைக்குக் கொண்டு வர நினைச்சேன். எனக்கு இலக்கிய பட்டிமன்றங்கள் கொஞ்சம் நெருக்கடியா தெரிய ஆரம்பிச்சது. அப்படிப்பட்ட வேளையிலதான் என் நண்பர் தமிழாசிரியர் ஒருத்தர் மில் தொழிலாளிகளுக்காக ஒரு பட்டிமன்றம் போடணும்னு சொல்லி சங்கடப்பட்டு ‘குடும்பத்தின் பெருமையைப் பாதுகாத்து உயர்த்துவது கணவனா? மனைவியா?’னு தலைப்பு சொன்னாரு.

எனக்குள்ள ஒரு பொறி. ஆனா, என் குழு மக்கள் ‘யாரும் வரமுடியாது’ன்னு சொல்லிப்புட்டாக. கம்பராமாயணம், சிலப்பதிகாரம்னு பேசிட்டு இந்தத் தலைப்பான்னு சண்டை பிடிச்சாங்க. நான் கைய பிடிச்சிக்கிட்டு கெஞ்சினேன். ‘சரி தொலையுங்க என்னத்தையாவது பேசு
வோம்’னு காந்திமதி அம்மாவெல்லாம் முணுமுணுத்துக்கிட்டே வந்தாங்க.  ‘இதுதான் கடைசி’னு சொல்லி மன்னிப்பெல்லாம் கேட்டேன். பெரிய கூட்டம். பெண்கள் கூட்டமெல்லாம் இருந்தது ஆச்சர்யம்.

அங்கே வீடுகள்ல மனைவி மார்கள் படுகிற கஷ்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடோடிப் பாட்டெல்லாம் பாடி தீர்ப்பு சொன்னேன். ‘அறியாத ஊருலயும் தெரியாம வாக்கப்பட்டேன்!அடிக்காதிக பிடிக்காதிக விடியமுன்ன ஓடிப்போயிடறேன்...’அடுத்து போற வழியில இந்த நாத்து நடவு செய்யற மக்களைப் பாத்து பாடுறா, ‘ஒத்தைப் பனையோரம் உழுகுற நியான்மாரேகத்திக்கிட்டே போறாள்னு என் கணவன்கிட்ட சொல்லிருங்க!’
நாங்க பேசப் பேச கண்ணீர் மல்குறாக. திரும்பிப் பார்த்தா என் மேடையில இருக்கவகளும் அழுகுறாக.

பெரிய சக்ஸஸ் ஆகிப்போச்சு. எங்க எல்லாருக்கும் சம்பளம் மொத்தமா ரூ.300. என் குழுவே ‘இனிமே இதுதான்ங்கய்யா பட்டிமன்றம்’னு சொன்னாக. அதே தலைப்பு மதுரை முழுக்க பிரபலம் ஆகிப்போச்சு. டிடி தொலைக்காட்சியில அதே பட்டிமன்றம். இப்படியான வேளையிலதான் 90களுக்கு அப்பறம் சுதந்திர தின சிறப்பா சன் தொலைக்காட்சியில ரெண்டு வருஷம் பட்டி மன்றம் செய்தோம். அப்பறம் திருக்குறள் விளக்கம் சொல்லணும்னு கேட்டாக. அவ்வளவுதான் இந்த சாலமன் பாப்பையா பாப்புலர் ஆகிட்டான்!

தமிழை இப்படியும் வளர்க்க முடியும்னு செய்து காமிச்சாக சன் தொலைக்காட்சி. பட்டிமன்றங்கள் இறங்குபாதையில போனதை தூக்கி நிறுத்தி உலகம் முழுக்க கொண்டு போனது சன் தொலைக்காட்சிதான். பட்டிமன்றம் வளர இன்னும் துறை சார்ந்த நிறைய விஷயங்கள் பேசணும். ஒவ்வொரு கலைக்கும் தன்னை எப்படி வளர்த்துக்கணும்னு அதுக்கே தெரியும். பட்டிமன்றமும் அப்படித்தான் தன்னைத்தானே வளர்த்துக்க அதுவே நிறைய பாதைகளை அமைக்கும், அமைச்சிருக்கு. அடுத்து வருகிற சந்ததியும் அமைக்கும்னு நம்புறேன்!       

ஷாலினி நியூட்டன்

டி.ஏ.அருள்ராஜ்