#ME TOO ஓராண்டில் என்னதான் நடந்தது?



ஆமாம். கடந்த 2018 அக்டோபரில்  நடந்த நிகழ்ச்சி ஒன்று இந்தியாவில் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை அலறவிட்டது. பலரின் தூக்கத்தைக் கெடுத்து, பதவிகள் பறிபோய், கவுரவம், அந்தஸ்தெல்லாம் கெட்டு, குடும்பத்தைவிட்டே ஓடவிட்டது.
அது, #Metoo ஹேஷ்டேக்.ஓராண்டு முடிந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கால் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன... பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்களா?

இதற்கான விடையைப் பார்ப்பதற்கு முன் உலகளவில் இந்த ‘மீடூ’ பிரச்னையை முதன்முதலில் எடுத்துச் சென்ற ஒரு வழக்கைப் பார்த்துவிடலாம்.
சந்திரா முல்லர் என்ற பிரெஞ்சு பெண் பத்திரிகையாளர் 2017 அக்டோபரில் #balancetonporc (expose your pig) என்று பிரெஞ்சு மொழியில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உலகளவில் முதன்முதலில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கினார். திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டெய்ன் மீதும், அடுத்த சில மணி நேரங்களில் பிரெஞ்சு செய்தியாளர் பிரியான் மீதும் பாலியல் குற்றச்சாட்டை பதிவிட்டார்.

‘2012ல் கேன்ஸ் நிகழ்வின்போது, ‘உங்களுடைய.....
(சந்திரா முல்லரின் குறிப்பிட்ட உடல் பாகத்தை குறிப்பிட்டு) பெரிதாக உள்ளது. நான் விரும்புகிற பெண்ணாக உள்ளீர்; இரவு முழுவதும் உங்களை நான் மகிழ்வுடன் வைத்திருப்பேன்’ என்று பிரியான் கூறினார்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரியான், ‘முறையற்று பேசியதற்காக அடுத்த நாளே எஸ்எம்எஸ் மூலம் முல்லரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ஆனால், முல்லரின் இந்த பதிவு என்னை தவறாக சித்தரிக்கிறது. அதனால், என்னுடைய வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

அத்துடன் தன் பெயருக்கு ‘களங்கம்’ விளைவிக்க முயன்றதாகக் கூறி சந்திரா முல்லர் மீது பாரிஸ் நீதிமன்றத்தில் பிரியான் வழக்கும் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25 அன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்திரா முல்லர் 15,000 யூரோ அபராதம் செலுத்த வேண்டும். சர்ச்கைக்குரிய அந்த ட்வீட்டை அழிக்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட வேண்டும். மேலும், 2 ஊடகத்திலும் இந்த உத்தரவை வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது!

அதாவது, பாலியல் வன்மங்களை வெளிப்படுத்திய பிரியான் மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட, மன உளைச்சலுக்கு ஆளான முல்லருக்கு எதிராகத்தான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது! இந்நிலையில்தான் இந்திய அளவில் ‘மீடூ’ ஏற்படுத்திய தாக்கம் கடந்த ஓராண்டில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில் ஒரு விஷயம். கடந்த 2017 - 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2018 - 2019ம் ஆண்டில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பாலியல் சுரண்டலை இதுநாள்வரை செய்து வந்த பலரையும் சிக்கவைத்து அவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது.

குறிப்பாக பெண்கள் தங்கள் பணியிடத்தில் மேற்பார்வையாளர்கள், சகாக்கள் அல்லது அவர்கள் சந்தித்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை தைரியமாக பதிவிட்டு மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.இப்படி பெண்களின் ‘சைலன்ஸ் மோட்’ ஆங்காங்கே வெடித்து பிரச்னை பூதாகரமாக மாறியவுடன் மத்திய அரசு தன் பங்குக்கு 3 மத்திய அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ‘ஷி பாக்ஸ்’ மூலம் புகாரை ஆன்லைனில் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அளிக்கப்படும் புகார்களை ‘மீடூ’ போல் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டியதில்லை. புகார்கள் ரகசியமாக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தனியார் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் உள்ள 100 பெரும் நிறுவனங்களை தணிக்கை செய்தது. அதில் முந்தைய 2017 - 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2018 - 19ல் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

சர்வ நிச்சயமாக இது ‘மீடூ’ ஏற்படுத்திய தாக்கம்தான். தேசிய மகளிர் ஆணையத்திடம் பெண்கள் அளித்த புகார்கள் 2017ல் 570 ஆக இருந்து 2018ல் 965 ஆக அதிகரித்துள்ளது.

இணையதள போர்ட்டலான (ஆன்லைன்) ‘ஷி பாக்ஸ்’ முறையில் பணியிடத்தில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளிக்கலாம். இவை,
தொடர்புடைய மத்திய, மாநில அதிகாரிகளுக்கு நேரடியாகச்செல்லும். இதன் மீதான நடவடிக்கையை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நேரடியாகக் கண்காணிக்கும்.

கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தில், ‘ஷி பாக்ஸ்’ போர்ட்டலில் கடந்த 2017 முதல் 2019 ஜூலை வரை 612 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், 196 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பானவை. 103 புகார்கள் மாநில அரசுகள் மற்றும் 313 தனியார் நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தனியார் துறையைக் காட்டிலும் அரசு துறையில் அதிகப் புகார்கள் வந்துள்ளன.

கடந்த ஓராண்டில், நாடு முழுவதும் அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று 50க்கும் மேற்பட்டோர் மீது ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இதில் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சில வழக்குகள் தகுந்த ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. சிலர் பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ‘நான் யோக்கியன்’ என்று இன்றும் வாதிட்டு வருகின்றனர்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,‘மீடூ’ பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது புரியும். இனி வரும் காலங்களிலும் முழுவீச்சுடன் இது செயல்பட்டு பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும். அதைத்தான் மக்கள் விரும்புகின்றனர்!         

செ.அமிர்தலிங்கம்