நம்மால் முடியும்-மெய் வருத்தக் கூலி தரும்!



‘‘மனத் தடையை நீக்கிவிட்டால் இயங்குவது சுலபம்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் சரவணக்குமார் ஒரு வீல்சேர் யூசர்.‘‘இந்த சம்பவம் நடந்தது 1997ல். பத்தாவது தேர்வை முடித்த மகிழ்ச்சியில் நண்பர்களோடு மொட்டை மாடியில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அது இரண்டாவது தளம்.

விளையாட்டு ஆர்வத்தில் மாடியில் இருந்து பின்புறமாக கீழ்நோக்கி விழ, ஜன்னலின் மேல் இருக்கும் சன்ஷேட் மேல் விழுந்து முதுகு அடிபட்டு அதன் பிறகு தரையில் விழுந்தேன். என் நெஞ்சுக்கு நேர் பின்னால் ஸ்பைனல் கார்டு எலும்பு 3 மற்றும் 4ல் முறிவு ஏற்பட்டது.
நெஞ்சுக்குக் கீழே பேரலைஸ்ட் என சொல்லிவிட்டார்கள்...’’ என்று சொல்லும் சரவணன் இன்று அமெரிக்க, இங்கிலாந்து வாடிக்கையாளர்களை கைவசம் வைத்துக்கொண்டு மாதம்தோறும் லட்சங்களில் சம்பாதிப்பவர். தானாகவே காரை ஓட்டக் கூடியவர். நேஷனல் டேபிள் டென்னிஸ் கோல்டு வின்னர். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பவர்!

‘‘எனது ஊர் கோவை மாவட்டம் போத்தனூர். அப்பாவுக்கு இரயில்வேயில் மிகப் பெரிய பதவி. அம்மாவும் மத்திய அரசு ஊழியர். எனக்கு ஒரு தம்பி. படிப்பில் நான் படு சுட்டி. பத்தாவது வரை வகுப்பில் நான்தான் முதல். விளையாட்டும் எனக்குப் பிடித்த விஷயம். கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஃபுட்பால், பேட்மின்டன், அத்லெட்டிக்ஸ் என எதையும் விட்டுவைக்கவில்லை. பொறியியல் படித்து வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு சிவில் சர்வீஸ் கனவும் இருந்தது.

ஆனால், கீழே விழுந்து... இனி நான் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொன்ன பிறகு கொஞ்சம் ஆடித்தான் போனேன். வீட்டில் பதறிவிட்டார்கள். ஸ்பைனல்கார்டு இன்ஜுரி குறித்தும், ரீஹேப்ஸ் (rehabilitation) குறித்தும் பெரிதாக விழிப்புணர்வு இல்லாத காலம் அது. படுக்கையில் நான் திரும்ப வேண்டும் என்றாலும் இன்னொருவரின் உதவி தேவை. அம்மா எனக்காக தனது மத்திய அரசு வேலையை உதறினார்.

முதுகில் பிளேட் வைத்தார்கள். எனது இடது கை மட்டுமே இயங்கியது. எனக்கான வேலைகளை என் பெற்றோர்களே செய்தனர். 3 மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்தேன். படிக்க முடியாத நிலை மன அழுத்தத்துக்கு தள்ளியது. வாழவேண்டுமா என்ற எண்ணம் அடிக்கடி எட்டிப் பார்த்தது.கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இதே நிலைதான்.

இக்காலத்தில் சித்தி மற்றும் மாமா குழந்தைககளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. கூடவே பக்கத்துவீட்டுக் குழந்தைகளும் இணைந்தார்கள்.பாடத்தை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் முன், அந்தப் பாடத்தில் நான் தயாராவேன். எனக்கு கணக்கு நன்றாக வரும். அப்போது எம்.பி.ஏ. படித்த ஒருவரும் கணக்கிற்காக என்னிடத்தில் டியூஷன் வந்தார்.

சாதிக்க முடியும் என்ற விதை விழுந்தது. ஆனால், என்ன செய்யப் போகிறேன் என்பதில் தெளிவில்லை...’’ என்று சொல்லும் சரவணன் இந்த நேரத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘அன்பே சிவம்’ படத்தைப் பார்த்திருக்கிறார்.‘‘அப்படியே என்னைப் புரட்டிப் போட்ட படம் அது. கமல் ஏற்று நடித்த கேரக்டரை எனக்கான பாடமாக எடுத்துக் கொண்டேன். எது செய்தாலும் கரியரை அடிப்படையாக வைத்தே செய்ய வேண்டும் என்பது மனதில் பதிந்தது.

மாற்றுத்திறனாளி சிவில் சர்வீஸ் எழுத என்னவெல்லாம் செய்ய வேண்டும் என கூகுளில் தேடினேன். டிகிரி முடித்தால்தான் சிவில் சர்வீஸ் எழுத முடியும் எனப் புரிய, திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் பிஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனை எடுத்து இணைந்தேன். கோவையில் ரீஹேப்ஸ் சென்டர் உள்ளதா என்பதையும் கூகுள் செய்து பார்த்து அங்கும் சென்றேன். என் கைகளை வலுவாக்க சில பயிற்சிகள் கொடுத்தனர். சின்னச் சின்ன டெக்னிக்ஸை சொல்லிக்கொடுத்தனர்.

வெறித்தனமாகப் பயிற்சி எடுத்ததில், என்னுடைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய முடிந்தது. வீட்டில் எனக்கு தனியாக அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். நானே படுக்கையில் இருந்து நகர்ந்து வீல்சேருக்கு மாறும் முயற்சிகளைச் செய்தேன். இடுப்பு சப்போர்ட்டுக்காக செஸ்ட் வரை இருக்கும் காலிபர் அணிந்து, வாக்கர் துணையோடு நடக்கும் அளவுக்கு முன்னேற்றிக்கொண்டேன்.

ஒரு நாள் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனை ‘நீயா நானா’ கோபி பேட்டி எடுக்க, அதில் அவர், ‘எப்பவும் பிளான் ‘ஏ’ மட்டும் பண்ணாதீங்க. பிளான் பி, சி, டி,இ என இசட் வரை பண்ணுங்க. ‘ஏ’ தோல்வி அடைந்தால் ‘பி’ எடுங்க. அதுவும் தோல்வி என்றால் ‘சி’ எடுங்க...’ என்றார்.
அவரது அந்தப் பேட்டி என்னை மாற்றியது. ‘ஏ’ முதல் ‘இசட்’ வரை என் இலக்கை தீர்மானித்தேன். Winners make plans and Losers make excuses என்பது பொன்மொழி அல்ல... அனுபவப் பாடம்...’’ சிரிக்கும் சரவணன், மூன்று ஆண்டு பட்டப் படிப்பின்போதே வேலை தேடும் முயற்சியிலும் இறங்கி
யிருக்கிறார்.

‘‘ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்திருந்ததால், சரளமாக ஆங்கிலம் பேசுவேன். வீட்டில் இருந்தபோது செய்தித்தாள்களைப் படித்து அறிவை விசாலப்படுத்தினேன். இணையமும் பரவலாக, கம்ப்யூட்டர் வாங்கும் எண்ணம் வந்தது. இணையத்தில் வேலை தேடியதில், ஆன்லைன் கன்டென்ட் ரைட்டிங் வேலைகள் நிறையக் கிடைத்தன.

ஆங்கில அறிவும் பொது அறிவும் இருந்ததால் விண்ணப்பித்தேன். அதில் தேர்வாகி, 2006ல் தொடங்கி இன்றுவரை பணி தொடர்கிறது. என் முதல் வருமானம் 15 ஆயிரத்தைத் தாண்ட, அம்மாவுக்கு சேலையும், வீட்டில் இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தேன்.
தொடர் முயற்சியில் எனக்கு யு.கே., யு.எஸ். என கிளையன்ட்ஸ் விரிவடையத் தொடங்கினர். வருகிற ஆர்டர்களை நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க, வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இன்று என்னிடம் 8 பேர் பணிபுரிகின்றனர்.

அதில் இருவர் மாற்றுத் திறனாளிகள்!’’ கண்கள் விரியச் சொல்லும் சரவணன், ரீேஹப்ஸ் குறித்த விழிப்புணர்வு சீக்கிரமே கிடைத்திருந்தால், இதைவிட முன்பாக வெளியில் வந்திருக்கலாம் என்கிறார். ‘‘வருமானம் தந்த நம்பிக்கையில், கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தில் பயணிக்க ஆரம்பித்தேன். காலிபரில் 10 மீட்டர்தூரம் மட்டுமே மருத்துவர்கள் நடக்கச் சொல்ல நான் 100 மீட்டர் நடந்தேன். 2007ல் நடந்த ஐபிஎல் மேட்ச்சைப் பார்க்க சென்னைக்கே வந்து சென்றேன்.   

கார் வாங்கும் ஆர்வம் வர, என் சேமிப்பில் 2012ல் பதினைந்து லட்சத்திற்கு கார் வாங்கி மாடிஃபை செய்து ஓட்டத் தொடங்கினேன். கார் ஓட்டத் தொடங்கியதில் எனது எல்லைகள் விரிவடைந்தன. இதுவரை 75 ஆயிரம் கிலோமீட்டரைக் கடந்திருக்கிறேன். யார் துணையும் இன்றி நான் இயங்குகிறேன்! என் குடும்பத்தினரையும் காரில் அழைத்துச் செல்கிறேன்!

நண்பர்களோடு பயணிக்கையில் வீல்சேரில் அமர்ந்தே சில விளையாட்டுகளை விளையாடினேன். அப்போது என் கவனம் டேபிள் டென்னிஸ் பக்கம் திரும்பியது. கூகுள் வழியே தேடி, பயிற்சியாளரை நியமித்துக் கொண்டேன். 2015ல் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பாரா ஸ்போர்ட்ஸ் நேஷனல் டேபிள் டென்னிஸ் போட்டியில் தகுதிச் சான்றிதழில் கிளாஸ் 3ல் தேர்வானேன். என் பிரிவில் இந்தியாவில் இருந்து 10 பேர் கலந்து கொள்ள, நான் வெற்றி பெற்று தங்கம் பெற்றேன்.

தொடர்ந்து டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா என்னைத் தேர்வு செய்து 2017ல் ஜோர்டானில் நிகழ்ந்த இன்டர்நேஷனல் போட்டிக்கு அனுப்பினர். அதில் 15 நாடுகள் பங்கேற்க, இந்தியாவில் இருந்து 7 பேர் கலந்து கொண்டோம்.

இதில் ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து வீரர்களோடு மோதினேன். முதல் முறையாக ஜோர்டானுக்கு தனியாகப் பயணித்தேன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்!’’ கட்டை விரலை உயர்த்திச் சொல்லும் சரவணன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கத் தொடங்கியிருக்கிறார்.
‘‘டிஸபிளிட்டி ஆக்ட்டில், மாற்றுத்திறனாளியின் கை நன்றாக வேலை செய்தால், ஒருசில பதவிகள் தவிர்த்து மற்ற சர்வீஸ்களுக்கு தேர்வெழுதலாம். இதில் 3% இட ஒதுக்கீடும் உண்டு. இலக்கை அடைய அதற்கான முயற்சியில் தேர்வு நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...’’ என்று சொல்லும் சரவணன்,சாஃப்ட்வேர் புரஃபஷனல் மைதிலியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

‘‘மேட்ரிமோனியல் சைட் வழியாகத்தான் மைதிலி அறிமுகம். என் நிலை அறிந்து விருப்பம் தெரிவித்தார். அவர் நார்மல் என்பதோடு, பெங்களுர் ஐபிஎம். நிறுவனத்திலும் பணியில் இருந்தார். இடையில் புராஜெக்ட் தொடர்பாக யு.எஸ். சென்று வந்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு அவரிடம் பேசினேன்.

இருவரது எண்ணமும் ஒரே அலைவரிசையில் இருப்பது புரிந்தது. நேரில் அவரைச் சந்திக்க தனியாக காலிபர் அணிந்து வீல்சேரில் சென்றேன். என்னைப் பார்த்த நிமிடம், எனது வீல்சேரைத் தள்ளியபடி பொதுவெளிகளில் என்னுடன் சங்கமித்தார். அந்த நொடிகளில் இருவரும் இணைந்துவிட்டோம்...’’ நெகிழும் சரவணன் தன் இரண்டு வயது மகள் ராகாவை அள்ளி முத்தமிட்டார்.

‘‘என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து மோட்டிவேட் செய்தும் வருகிறேன். எனது முயற்சிகளைப் பாராட்டி கோவையில் இயங்கும் ‘யு ஆர் லவ்ட்’ அமைப்பு இந்த ஆண்டுக்கான இன்ஸ்பிரேஷன் விருதை வழங்கி என்னை கௌரவித்தார்கள்!’’ என்கிறார் வெற்றிக் கோப்பையை உயர்த்திக் காட்டி.‘‘மாற்றுத் திறனாளிகளை நான்கு சுவர்களுக்குள் முடக்காமல், வெளியே அழைத்து வாருங்கள். எங்களைப் போன்றவர்களைப் பார்த்தாலே அவர்களும் இயங்க முயற்சிப்பார்கள்...’’ என்ற வேண்டுகோளை வைக்கிறார் சரவணன்.

மகேஸ்வரி

ஜெயக்குமாரன்