ரத்த மகுடம்-74



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

தன் மகன் விநயாதித்தன் குழந்தையாக இருந்தபோது கூட இந்தளவுக்கு அணைத்திருப்பாரா என்று தெரியாது. அந்தளவுக்கு சாளரத்தில் வந்து அமர்ந்த புறாவை எச்சரிக்கையுடன் தன் கையில் அள்ளி எடுத்து அணைத்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.அவசரப்படவே இல்லை. நிதானமாகவே இருந்தார். செய்தியை பார்ப்பதை விட, அச்செய்தியை சுமந்து வந்த புறாவுக்கு மரியாதை செலுத்துவதே மன்னரின் முதல் நோக்கமாக இருந்தது.

எனவே கையில் ஏந்திய புறாவின் தலையை ஆசை தீர முதலில் தடவினார். பிறகு புறாவின் உடலை குழந்தைகளுக்கு கால் பிடித்து விடுவதுபோல் பிடித்து விட்டார்.தன் கண்களை உயர்த்தி மன்னரைப் பார்த்தது அந்தப் புறா.புறாவின் எதிர்பார்ப்பு சாளுக்கிய மன்னருக்குப் புரிந்தது. எனவே அதை உயர்த்தி அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டார்.

‘கீச்...’ என குரல் எழுப்பி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அப்புறா, அவரது கைகளில் தவழ்ந்தபடியே தன் சிறகை அசைத்தது.
புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அதன் சிறகுகளை தன் விரல்களால் விரித்தார்.இலையின் காம்பு அளவுக்கு பட்டுத் துணி ஒன்று தென்பட்டது.
புறாவுக்கு வலிக்காதபடி அதை அதன் உடலில் இருந்து எடுத்தார்.

மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அப்புறா மீண்டும் ‘கீச்...’சிட்டது; திரும்பவும் தன் சிறகுகளை அசைத்தது.தன் மார்புடன் அப்புறாவை அணைத்து தன் கைகளை விரித்தார்.படபடவென சிறகுகளை அசைத்த அந்தப் புறா... மெல்ல அவரை வட்டமிட்டபடி பறந்தது; அவர் தோளில் அமர்ந்து தன் அலகால் அவர் கன்னத்தை முத்தமிட்டது!அடுத்த கணம் வந்த வழியே பறந்து சென்று மறைந்தது!இமைகளை மூடாமல் அதேநேரம் வியப்புடன் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும், கடிகை பாலகனும் இவற்றை எல்லாம் மவுனமாகப் பார்த்தார்கள்.

பறந்து சென்ற புறா மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னர், மலர்ச்சியுடன் சாளரத்தை விட்டுத் திரும்பி தன் முன்னால் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்தார்.கண்களைச் சிமிட்டி, ‘‘நம் சிவகாமிதான் செய்தி அனுப்பியிருக்கிறாள்; அதுவும் நாம் எதிர்பார்த்த தகவல்...’’ என்றபடி தன் கையில் சுருட்டப்பட்டிருந்த பட்டுத்துணியைப் பார்த்தார்.பிறகு அதை மெல்ல பிரித்தார்.

சுருட்டப்பட்ட நிலையில் இலையின் காம்பைப் போல் காணப்பட்ட அத்துணி, விரிக்க விரிக்க ஓராள் உயரத்துக்கு வளர்ந்தது!
‘‘சீனர்களின் திறமைக்கு இந்தப் பட்டே சாட்சி!’’ பொதுப்படையாக அறிவித்த மன்னர் வழக்கத்துக்கு மாறான நிதானத்துடன் அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தார். ஒரு முறையல்ல... இரு முறையல்ல... ஐந்து முறைகள்.

‘‘எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடக்கின்றன...’’ ராமபுண்ய வல்லபரைப் பார்த்து விக்கிரமாதித்தர் சொன்னார். ‘‘திட்டமிட்டது நீங்கள் அல்லவா... எப்படி பிசகும்..?’’ தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் போர் அமைச்சர்.அதை ஆமோதிக்கும் விதமாக கடிகை பாலகன் லையசைத்தான்.‘‘திட்டமிட்டது நாமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துவது சிவகாமிதானே... எனவே பெருமை அனைத்தும் அவளைத்தான் போய்ச் சேரவேண்டும்... அவளது தியாகத்துக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியாது ராமபுண்ய வல்லபரே...’’ பெருமூச்சு விட்ட சாளுக்கிய மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தார்.

‘‘சிவகாமி உருவத்தில் சென்றிருப்பவள் நம்மால் அனுப்பப்பட்டவள் என்பதை கரிகாலன் உணர்ந்துவிட்டான்... ஆனால், அதை நிரூபிக்க சரியான ருசு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு வலுவான பச்சிலை தைலத்தை நமது தலைமை மருத்துவர் மூன்று அடுக்குகளாக பூசியிருக்கிறார்... எனவே, காயம்பட்ட சிவகாமியை சிகிச்சை செய்த பல்லவ மருத்துவன், அவள் மீது தைலம் பூசப்பட்டிருப்பதைத்தெரிந்துகொண்டபோதும்... பூசிய தைலத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டபோதும்... அவளது உண்மை ஸ்வரூபம் வெளிப்படவே இல்லை! சட்டையை உரித்த பாம்பு மீண்டும் வேறொரு சட்டையை அணிந்து கொள்வதுபோல் சிவகாமி, சிவகாமியாகவே காட்சி அளிக்கிறாளாம்!’’

‘‘பலே! பலே!’’ தன்னை மறந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராமபுண்ய வல்லபர். ‘‘நம் தலைமை மருத்துவர் தைல காப்பில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்!’’‘‘உண்மைதான் அமைச்சரே!’’ ஆமோதித்த மன்னர், ‘‘எனவே சிவகாமி சுதந்திரமாகவே பல்லவர்களின் படையில் நடமாடுகிறாளாம். அவ்வப்போது கரிகாலனுடன் கொஞ்சவும் அவள் தவறவில்லையாம். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் மத்தியில் கரிகாலன் ஊசல் ஆடுகிறானாம்! சிவகாமியை விட்டுப் பிரியவும் முடியாமல் அவளைச் சிறை செய்யவும் இயலாமல் தவிக்கிறானாம்!’’ புன்னகைத்தார் விக்கிரமாதித்தர்.

‘‘தேகத்தின் இசையில் மயங்காத ஆணும் உண்டோ!’’ சிரித்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘இதன்பிறகு பல்லவர்களின் யானைப் படை, குதிரைப்படை, காலாட் படை குறித்த விவரங்களை பட்டியலிட்டிருக்கிறாள்... அவை இருக்கும் இடங்களையும் குறிப்பிட்டிருக்கிறாள்... அவை எல்லாம் உங்களுக்கு உதவும்! இந்தாருங்கள் அவள் அனுப்பிய செய்தி. கவனமாகப் படித்து அதற்கு ஏற்றபடி நம் படைகளை வழிநடத்துங்கள்!’’

மன்னர் கொடுத்த பட்டுச் சீலையை பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட ராமபுண்ய வல்லபர், அதை பத்திரமாக தன் இடுப்பில் செருகி வைத்துக் கொண்டார்.கடிகை பாலகன் அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் பார்வையை விக்கிரமாதித்தர் கவனித்தார்.‘‘ஏன் அமைதியாக இருக்கிறாய்...?’’ சாளுக்கிய மன்னர் வாஞ்சையுடன் கேட்டார்.‘‘ஒன்றுமில்லை மன்னா...’’ தயக்கத்துடன் பாலகன் பதில் அளித்தான்.

‘‘பரவாயில்லை... மனதில் தோன்றுவதை வெளிப்படையாகச்சொல்...’’ என்றபடி தன் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தார் விக்கிரமாதித்தர்.
‘‘வேறென்ன சொல்லப் போகிறான்..? வியப்பைத்தான் வெளிப்படுத்தப் போகிறான்... அப்படித்தானே..?’’ ராமபுண்ய வல்லபர் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.‘‘வியப்பைப் போல் தெரியவில்லை அமைச்சரே...’’ பதில் அளித்த மன்னர், பாலகனை அன்பு தவழ ஏறிட்டார்.

‘‘அச்சப்படத் தேவையில்லை... சொல்...’’ஒரு கணம் பாலகன் தயங்கினான். மறுகணம் அம்பென தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினான். ‘‘இந்தச் செய்தியே பொய்யாக இருக்கும் என்று தோன்றுகிறது மன்னா...’’அதிர்ந்து போனார் ராமபுண்ய வல்லபர். கண்கள் சிவக்க பதில் சொல்ல முற்பட்டார்.

தன் கரங்களை உயர்த்தி அவரைத் தடுத்த விக்கிரமாதித்தர், எந்த உணர்ச்சியும் இன்றி பாலகனிடம் கேட்டார். ‘‘எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்..?’’

‘‘கரிகாலனின் திறமையை வைத்து மன்னா...’’‘‘சற்று விளக்க முடியுமா..?’’‘‘கரிகாலனை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் இதை உறுதியாகச் சொல்கிறேன் மன்னா...

நிச்சயம் இதில் ஏதோ சூது இருக்கிறது...’’‘‘எந்த வகையில்..?’’‘‘ஒன்று இந்தச் செய்தியை கரிகாலனே அனுப்பியிருக்க வேண்டும்...’’
‘‘அதற்கு வாய்ப்பில்லை பாலகனே... எனக்கும் சிவகாமிக்கும் மட்டுமே தெரிந்த சங்கேத மொழியில் சில பகுதிகளை இதில் அவள் எழுதியிருக்கிறாள். எனவே இதை தன் கைப்பட எழுதியவள் சிவகாமிதான்...’’ விக்கிரமாதித்தர் நிதானமாகச் சொன்னார்.

‘‘அப்படியானால் இதை அனுப்பிய சிவகாமி நீங்கள் ஏற்பாடு செய்த சிவகாமியாக இருக்க வாய்ப்பில்லை...’’ துணிவுடன் சொன்னான் பாலகன்.
‘‘உளறாதே!’’ ராமபுண்ய வல்லபர் சீறினார்.‘‘பொறுங்கள் அமைச்சரே...’’ அவரைத் தடுத்துவிட்டு பாலகனின் நயனங்களை உற்று நோக்கினார் சாளுக்கிய மன்னர். ‘‘எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தாய்..?’’ ‘‘மன்னா! நம் அனுபவங்களைக் கேள்வி கேட்டு நம் திறமையை சந்தேகப்படும் அளவுக்கு இந்தப் பாலகன் முக்கியமானவனா..?’’ உதடுகள் துடிக்க ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘ஆம் அமைச்சரே!’’‘‘அப்படியானால் மன்னா... இந்தப் பாலகன் யார்..?’’‘‘வேளிர்களின் தலைவன்!’’ அழுத்தம்திருத்தமாக கஜ சாஸ்திரியிடம் சொன்னான் கரிகாலன். கஜ சாஸ்திரி எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.கணங்கள் கடந்தன.

சட்டென கஜ சாஸ்திரி நிமிர்ந்தான். ‘‘வா கரிகாலா! இப்போது சிவகாமியின் விசாரணை நமக்காகக் காத்திருக்கிறது!’’மவுனமாக இருவரும் வனத்துக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்தார்கள்.

சட்டென வெட்ட வெளி கண்ணில் பட்டது.பல்லவ வீரர்கள் அமர்ந்திருக்க... சங்கிலியால் பிணைக்கப்பட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி சிவகாமி நின்று கொண்டிருந்தாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்