இது வெறித்தனமான ஜெனரேஷன்! த்ருவ் துறுதுறு



‘‘நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான் அருமையான நேரம்னு நினைக்கிறேன்...’’  மென் புன்னகையில் மிளிர்கிறார் த்ருவ் விக்ரம். இன்றைய தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் த்ருவ்தான். ‘ஆதித்ய வர்மா’ டிரெய்லர் பார்த்து குவிந்த பாராட்டுகளும் ஆச்சரியங்களும் அவரை மேற்கொண்டு சாந்தப்படுத்தி வைத்திருக்கிறது.
‘‘கேட்டதைவிட, நினைச்சதைவிட எல்லாமே அதிசயமா அடுத்தடுத்து நடந்துகிட்டே இருக்கு. என்னை இப்போ எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இதிலிருந்து இனி இறங்கக்கூடாது.

என் நண்பர்களைத் தவிர்த்து எல்லோருக்கும் நான் விக்ரமின் மகன்தான். ஏதோ ஒரு சிரிப்பில், ஒரு பாவனையில், பேச்சில் என்னைக் கண்டு மக்கள் ஒரு கணம் நின்று போவதை பார்த்திருக்கிறேன். இப்போ ‘த்ருவ்’னு ஆர்ப்பரிக்கிறாங்க. எல்லாத்துக்கும் அப்பாதான் காரணம்.
அவர் ‘ஆதித்ய வர்மா’எனக்கு சரியான இடத்தைப் பெற்றுத்தரும்னு நினைச்சதுதான் பெரிய விஷயம். ஷூட்டிங்கில் எல்லாமே சுமுகமா நடக்கும். ஒன்பது மாசமா அப்பா எனக்காக எல்லாத்தையும் தள்ளி வெச்சார். கூட இருந்து பார்த்துக்கிட்டார்.

என்னிடம் மட்டுமல்ல, எல்லார்கிட்டேயும் நடிப்பில் நடந்த நல்ல மாற்றங்களுக்கு அவரே காரணமா இருந்திருக்கிறார். எல்லோரும் அவர் செய்து காட்டுவதைப் பார்த்து புருவம் உயர்த்துவதை கண்டும் காணாத மாதிரி பார்த்துட்டிருப்பேன்.

நானே இதைச் செய்ய முடியும்னு அப்பா நினைச்சதுதான் என்மேல் வெச்சிருக்கிற அன்பு. இதை தெலுங்கில் செய்யும்போது விஜய் தேவரகொண்டாவுக்கு 28 வயசு ஆகியிருந்தது. இந்தியில் செய்த ஷாகித் கபூருக்கு 37 வயது. என் வயசுக்கு இதைச் செய்ய முடியும்னு எனக்கே நம்பிக்கை கொடுத்தவரும் அப்பாதான்...’’ உரையாடலைத் தொடக்குகிறார் த்ருவ்.

படம் தயாராகி பார்த்ததும் எப்படி இருந்தது..?
நிச்சயம் தமிழ் ஆடியன்ஸுக்கு போய்ச் சேரும். சின்னச் சின்ன மாற்றங்களில் இன்னும் மெருகேத்தினது கூட நடந்திருக்கு. முதலில் இந்தப்படத்தை நான் செய்யமுடியாதோன்னு கூட பயந்தேன்.

ஆனா, இதுல எல்லாமே இருக்குன்னு பிறகுதான் புரிஞ்சுது. ஒரு நடிகன் தன்னை கனிஞ்சு போய் காட்றதுக்கு இது நல்ல படம்னு நடிக்க ஆரம்பிச்ச உடனே உணர்ந்துட்டேன். காலேஜ் வாழ்க்கை, லவ் ஆரம்பிக்கறது, அது உடையறது, சட்டுனு போதைக்கு அடிமை ஆகறது, அப்புறம் வெறிபிடிச்ச மாதிரி எல்லாத்தையும் கையாள ஆரம்பிச்சு, கடைசியில் தன்னை உணர்றதுன்னு இதில் என்னதான் இல்லைன்னு படத்துக்குள்ள ஆழமா போயிட்டேன்.

இப்ப பார்க்கும்போது சந்தோஷமா, திருப்தியா இருக்கு. நான் இப்படி பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அந்த திருப்தியோட விளைவுதான்.
விக்ரமின் மகனா இருந்து சினிமாவைப் பார்த்ததுக்கும், நீங்களே நடிகனா மாறுனதுக்கும் இடையில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்..?
விக்ரமின் மகன் என்பது எனக்குப் பெருமைதான்.

அப்பாவே ஓர் இடத்துக்குப் போய் த்ருவ்வோட அப்பான்னு சொன்னாக்கூட அவர் என்னைவிட ரொம்பப் பெருமைப்படுவார். அந்த மனசு எனக்குத் தெரியும். அப்படி நடக்கணும்னு கூட ஆசைப்படறேன். அவரே ஒரு நல்ல நடிகர். நானும் அந்த வழியில் நல்லா நடிப்பேன்னு மக்கள் நம்பறது நல்ல விஷயம்தானே. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலே இப்போதைக்கு போதும்.

ஆனால், நான் அதைத் தாண்டியும் வரணும். த்ருவ்னு தனியா சொல்ற மாதிரியும் வரணும். நினைச்சுப் பார்த்தா அதற்கு என்ன அவசரம்! இப்ப இந்த அளவு போதுமே… பின்னாடி நான் உண்மையா உழைச்சா இன்னும் மேலே போகலாமே… அதுவும் நடக்கட்டும்.

முதல் அடி எடுத்து வைக்கும் போதே பெரிய ஆசைகள் வேண்டாம்… படிப்படியா எதுவும் நடக்கட்டும்… அதுதான் பார்க்கறதுக்கு நல்லா இருக்கும்.
ஒரு நடிகனா உங்கள எப்படி பார்ப்பீங்க..?

இப்ப எங்கே போய் நின்னாலும் ஆக்டர்னு சொல்லும்போது சந்தோஷமே. ஒவ்வொரு தடவையும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கும்போது ‘நீ எப்போ படிக்கப்போற த்ருவ்’னு அம்மா கேட்டுட்டே இருப்பாங்க. இப்ப எனக்கும் ஒரு தொழில், கடமை, பொறுப்புன்னு வந்துடிச்சி. அதுவே ஒரு நல்ல ஃபீலிங். உங்களையும் மதிச்சி ஆக்டர்னு அழைக்கும்போது ஏதோ ஒரு வேலையை நல்லா பண்ணியிருக்கேன்னு மகிழ்ச்சி. நான் படத்தில் ஏதாவது ஒன்றிரண்டு தவறுகள் செய்திருந்தாலும் அதைப் பாடமாகத்தான் எடுத்துக்குவேன்.

நோ பெயின், நோ கெயின்னு உடற்பயிற்சி செய்யறவங்களுக்கு ஒரு விஷயம் இருக்கு. அந்த விஷயத்தை நானும் உணர்ந்திருக்கேன். அப்பாவின் இடம் அப்படித்தான். ஓவர் நைட்டுல இந்த இடத்துக்கு அவர் வரல. அவர் வந்தது பூப் பாதையும் இல்லை. நீண்ட பயணம், இடைஞ்சல்னு எல்லாத்தையும் முறியடிச்சு அப்பா இப்போ ஒரு நல்ல இடத்துல இருக்கார்.

இப்ப அப்பா கை கொடுத்து நான் வந்ததால் அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னும் அர்த்தம் இல்ல. மக்களை ஏமாத்தவே முடியாது. எது நியாயமோ அத மக்கள் கொடுத்தே ஆவாங்க. அப்பாவுக்கு கிடைச்ச அங்கீகாரம் அப்படித்தான். என் திறமைக்கு என்ன இடம் வேண்டும்னு இருக்கோ, அதற்கான முயற்சியில் நான் தொடர்ந்து இருப்பேன்.

இத்தனை இளமையில் உங்களோட போட்டி போட இங்க ஆளே இல்லை…நான் தனியா வர்றதுதான் பயம். சீனியர்கூட கம்பேர் பண்ணினா கூட பெருமைதான். இப்பகூட ‘கைதி’யில அன்பு கேரக்டர் பண்ணினார் ஒருத்தர். அப்படியே அதகளமா இருந்தது. யாருடான்னு கவனிக்க வெச்சார்.

இப்போ இருக்குற ஜெனரேஷன் எல்லாம் சும்மா வெறித்தனம்தான். நீங்க ‘அலைபாயுதே’ மாதவன் மாதிரி கேரக்டர்ல வந்தா நல்லா இருக்குமேன்னு என்கிட்டேயே கேட்கிறாங்க. அந்தப் படம் ஏதோ ஒரு மேஜிக் மியூசிக்ல ஏதோ பண்ணியிருக்கு இல்லையா… அது மாதிரியே ‘ஆதித்ய வர்மா’வுலயும் மேஜிக் இருக்குன்னு நிச்சயம் நம்பறேன்.

உங்களுக்கு டைரக்‌ஷன்ல ஈடுபாடு இருக்குல்ல...யெஸ். ரொம்ப ஆர்வம். கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கேன். ஒரு நடிகரா இன்னும் ஆறேழு வருஷம் போய்க்கலாம். அப்புறமும் நடிகரா இருந்துட்டு இறங்கலாமே…சிம்புவெல்லாம் ‘வல்லவன்’, ‘மன்மதன்’னு நடிச்சுகிட்டே டைரக்‌ஷன் பண்ணதெல்லாம் இங்கே நடந்திருக்கு. எனக்கும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும். எங்கே போயிடப்போறோம் சொல்லுங்க…

இருக்குற நடிகர்களில் யாரைப் பிடிக்குது…ஆரம்பத்திலேருந்தே அப்பா, தளபதி விஜய்யோட ரசிகன் நான். விஜய் சேதுபதி நடிப்பில் வேறுவிதமா செய்வது பிடிக்கும். ‘அசுரனை’ப் பார்த்தால் தனுஷ்கிட்டே அவ்வளவு விஷயங்கள் இருக்குன்னு படுது. ஆனால், எல்லாத்துக்கும் மேல, எல்லாத்துக்கும் மேல அப்பாதான் ஃபேவரைட்!    

நா.கதிர்வேலன்