சென்னையில் இனி தமிழ் சினிமா ஷூட்டிங் எடுக்க முடியாதா..?



இன்றைக்கு சமூகத்தின் பெரிய அங்கம் சினிமாதான். மக்களின் கஷ்டங்களின் ஊடே அவர்களை சினிமா பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
முன்னொரு காலத்தில் கன்னடம், தெலுங்குப் படங்களின் அனேக படப்பிடிப்புகள் சென்னையிலேயே நடந்தன. இங்கே ஏராளமாக இருந்த ஸ்டுடியோக்களே அதற்கு சாட்சி. நடிகர்கள் ஸ்டூடியோ விட்டு ஸ்டூடியோவுக்கு காரில் சென்று ஷூட்டிங்கில் கலந்துகொள்வதை மக்கள் பெருமைபட பேசிக்கொண்ட காலம் இருந்தது.

சென்னை கோடம்பாக்கத்தில் இன்னமும் என்டிஆர் வாழ்ந்த வீடு அடையாளமாக இருக்கிறது. கன்னட ராஜ்குமார் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் வெகு எளிமையாக அருகிலிருக்கிற ஹாலிவுட் ஹோட்டலுக்கு தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வந்து போவதை சாலையில் செல்பவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துப் போவார்கள்.

இன்னமும் மோகன்லாலுக்கு எக்மோரில் சொந்த வீடு இருப்பதை மலையாள ரசிகர்கள் ‘தரிசித்து’ச்செல்கிறார்கள். இப்படி சினிமாவின் சொர்க்கமாக இருந்த சென்னை, இப்போது தயாரிப்புகளுக்குக் கடினமான ஒரு இடமாக மாறிவிட்டது என திரையுலகினர் கவலைப்படுகிறார்கள்.

அண்டை மாநிலங்களில் சினிமாவிற்கு சகல வசதியும் செய்து கொடுக்கும்போது, இங்கே ஏன் இந்த நிலைமை என்ற கேள்வி சினிமாக்காரர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. யாரும் வெளியிலிருந்து இங்கே வந்து படமெடுப்பது என்பது அனேகமாக இல்லையென்றாகிவிட்டது.
விதிகள் கடினமாக, அதற்கான கட்டணங்கள் பெரும் அளவில் அதிகமாக, வசதி யுடைய தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்திற்கும், வசதி குறைந்தவர்கள் பாண்டிச்சேரிக்கும் பயணமாகிறார்கள்.

இதனால் பட்ஜெட் நினைத்ததற்கும் மாறாக எகிற, தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்திருப்பது உண்மை. இயக்குநர் சுப்பிரமணிய சிவாவிடம் பேசினால் தமிழ் சினிமாவின் சில நிஜங்களை பட்டவர்த்தனமாக எடுத்து வைக்கிறார்:‘‘முன்பு சினிமாக்களில் ஹீரோக்கள் சென்னையில் நுழைவதை அண்ணா சாலையின் எல்ஐசி கட்டிடம் அல்லது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அல்லது சிலம்பை கோபத்துடன் வீசும் கண்ணகி சிலை மற்றும் உழைப்பாளர் சிலையோடு காட்டி முடிவடையும்.

இப்போது அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. அப்படியே நிதானித்து அனுமதி வாங்கினாலும் இரவு 11 மணிக்கு மேல்தான் பெர்மிஷன் கிடைக்கிறது. அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே கிடைக்கிறது. பகலில் அதுவும் சாத்தியமில்லை. ஆனால், மும்பையில் அப்படியில்லை. அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்துவிட்டால் சிறப்பு அனுமதி கொடுக்கிறார்கள். இங்கே என்ன சிரமம் என எனக்குத் தெரியவில்லை. பெரிய ஹீரோ என்றால் தயாரிப்புச் செலவு கட்டுப்படியாகிறது. ஆனால், சிறிய ஹீரோக்களுக்கு செலவுகள் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறுகிறார்கள்.

இதற்கு மாற்றாக நல்ல விஷயங்களை அரசு சிரமேற் கொள்ள வேண்டும். இப்போது ‘வெப்’ சீரியல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதனால் சினிமாவின் ஆதிக்கம் குறையும் என்கிறார்கள். அதெல்லாம் இல்லை. சினிமா பார்ப்பது கூடிப்பார்ப்பது. அதில்தான் சினிமாவின் ரகசியம் அடங்கிக் கிடக்கிறது.

இப்போது ஒரு படம் ஓடுவது மூணு நாள் விஷயம் என்றான பிறகு நிறைய சிறு படங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. முன்பு, ‘பாலைவனச்சோலை’, ‘ஒரு தலை ராகம்’ ரிலீசானபோது முதல் வாரம் தியேட்டர்களில் காற்றாடியது. அப்புறம் திடீரென்று வெளிவந்த வாய்ப் பேச்சிற்குப் பிறகு அந்த இரண்டு படங்களும் ஓடிய விதமும், வசூலும் வரலாறு.

இப்போது மூன்றே நாட்களில் வசூல் தீர்மானம் ஆவதால் படம் நன்றாக இருந்தாலும் மறுபடியும் திரையிட வாய்ப்பே இல்லை. ‘அன்னக்கிளி’ தியேட்டரை விட்டு வெளியேறி, பின்பு திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்டது உண்மை.

இப்பவும் சினிமா பார்ப்பது குடும்ப மனநிலையை ஒட்டித்தான் அமைகிறது. ஒருநாள் மதிய உணவு, தொடர்ந்து பெரிய கதாநாயகர்கள் நடிக்கின்ற படம் பார்ப்பது என்று நிறைவு கொள்கிறார்கள். ரஜினி, விஜய், அஜித் நடிக்கிற படங்கள் பெரும் வெற்றியைத் தொடுவது இவ்வாறே.

இப்போது டெக்னாலஜி, மல்டி கேமிராக்கள் வந்து சாதாரண சினிமாவை அதிஅற்புதமாக மாற்றிவிட்டது. ஹீரோத்தனத்தோடு இவையும் சேர்ந்து கொள்ள மக்கள் டெக்னாலஜி வசம் போய்விட்டார்கள். இந்தியில் ‘பாகுபலி’ வந்த சமயத்தில் ‘சஞ்சு’ என்ற படம் வந்தது. நாலைந்து கதாபாத்திரங்கள் மட்டுமே. நடிப்பில் அத்தனை பேரும் பிரமாதமாக செய்திருந்தார்கள். ஆனால், ‘பாகுபலி’யின் பிரம்மாண்டத்தின் முன் அந்தப்படம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இப்போது ரசிகர்கள் தேர்ந்தெடுப்பதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், அதே நேரம் நல்ல படங்கள் கவனத்திற்கு வராமல் போய்விடுகின்றன.
அப்புறம் தியேட்டர்கள் மல்டிப்ளெக்ஸ் கட்டிடங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவது யார் கையிலும் இல்லை. தனி தியேட்டர்களுக்கு இப்போது மவுசு இல்லை...’’ என ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணிய சிவா.

இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத படத்தயாரிப்பு மேலாளர் ஒருவரிடம் பேசியபோது கோபமாக கொந்தளித்தார்: ‘‘‘முதல்வன்’, ‘டும் டும் டும்’ போன்ற படங்கள் மவுண்ட் ரோட்டில் எடுத்த காலங்கள் உண்டு. இப்போது அதற்கான சாத்தியங்கள் இல்லை. மேலும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினாலும் எந்த நேரமும் அனுமதி திரும்பப் பெறலாம். அதிலும் பணம் திரும்பத் தரப்படாது என்ற நிபந்தனையுடனே கொடுக்கிறார்கள்.

அதனால், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பாண்டிச்சேரி போய் விடுகிறோம். அங்கே சகாயமாகவும், நல்ல பாதுகாப்போடும் வசதி செய்து தருகிறார்கள். இன்னொருபுறம், கஷ்டப்பட்டு நிறைய முன்பணம் செலுத்தி ரயில்வே பெர்மிஷன் வாங்கினால் அங்கே வந்துதான் சீன்களை மாற்றி அமைக்கிறார்கள் இயக்குநர்கள், அல்லது யோசிக்கிறார்கள்.

என் சர்வீஸில் நான் பார்த்தது வரைக்கும் இயக்குநர்கள் வேண்டிய நேரம், வேண்டிய விதத்தில் தயாராவதில்லை என்பதுதான் உண்மை.
மேலும் வீடு வைத்திருப்பவர்கள் அந்த வீட்டிற்கு செல்லுபடியாகும் தொகையைவிட அதிகம் கேட்கிறார்கள். கிடைக்கும் வீடுகளை சாமர்த்தியமாக எடுத்து இயக்குநர்கள் சமாளிக்கலாம்தான். ஆனால், அவர்களும் அதே வீடுதான் தேவை என நினைக்கிறார்கள்.

இங்கே இருக்கிற ஃபிலிம் சிட்டியும் எதற்கும் உதவுவது இல்லை. இதனால் நிறைய செலவு செய்து ஹைதராபாத் போக வேண்டியிருக்கிறது. அங்கே இருக்கிற ஃபிலிம் சிட்டிகளில் நல்ல வசதியும், தாராள இடமும் கிடைக்கிறது. ஆனால், அங்கே யூனிட் தங்குகிற செலவு தயாரிப்பாளர்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது.

தவிர இங்கே கூடி விடுகிற கூட்டம் அதிகம். ஷூட்டிங் பார்ப்பதில் தமிழக மக்களுக்கு இருக்கிற ஆர்வம் எல்லை கடந்தது. ஆனால், மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் பார்த்துவிட்டு உடனே அடுத்த வேலையை கவனிக்கப் போய்விடுகிறார்கள்...’’ என்கிறார் அவர்.நல்ல வருமானமும், வரிவிதிப்பில் பணமும் கொட்டுகிற தமிழ் சினிமாவிற்கு வேண்டிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என திரையுலகம் நினைக்கிறது.   
     
நா.கதிர்வேலன்