ஆசிரமங்களைத் தேடி ஏன் இளைஞர்கள் செல்கிறார்கள்..?



‘‘நான் ஒரு புறம்போக்கு; பரதேசி...’’ என்ற டெரர் வீடியோவை வெளியிட்டு மீண்டும் புளியமரம் ஏறியிருக்கிறார் ஒரு சாமியார். ஏற்கனவே நடிகையுடனான வீடியோ; இப்போது மை வைத்து மயக்கினார், 20 லட்ச ரூபாயை சுருட்டினார், பெண்களைக் கடத்தினார்... என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது.

இருந்தாலும் அவரைத் தேடி இளைய சமூகம் இன்னும் படையெடுக்கிறது. இதன் பின்னணிகள் குறித்து மதுரை மருத்துவக்கல்லூரியின் உளவியல் மருத்துவர் சஃபியிடம் பேசினோம்.‘‘இதை ஒரு தனித்த விஷயமாகப் பார்ப்பது சரியல்ல. அரசியல் கட்சி, மத நிறுவனம், சாதிக் கட்சி, நடிகர் சங்கங்கள் என எல்லாவற்றிலுமே ஆசிரமத்தின் கூறு இருப்பதாகவே நினைக்கிறேன்.

இதற்குக் காரணம் நவீன உலகம். முந்தைய நிலப்பிரபுத்துவக் காலத்தில் ஒரு கூட்டுவாழ்க்கை இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் எல்லா மனிதனுமே ஒரு தனித் தீவாக இருக்கிறான். இப்படி மனிதன் தனிமனிதனாக சுருங்கும்போது சிறு சிக்கல்கூட பெரும் பிரச்னையாக மாறலாம்.

எமிலி தர்கைம் என்ற அறிஞர் ‘கூட்டுவாழ்க்கையில் நிகழ்ந்த தற்கொலைகளைவிட தனிக்குடித்தன வாழ்க்கையில்தான் தற்கொலைகள் அதிகம்...’ என்கிறார்.

இன்று அன்பு, காமம், நட்பு, வேலை போன்றவை எல்லாம் சிக்கலான ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சிக்கல்களைச் சரிசெய்வதற்காகத்தான் இளைஞர்கள் இதுமாதிரியான ஆசிரமங்களிடம் சரணாகதியடைகிறார்கள்...’’ என்று ஆரம்பித்த அவரிடம், ‘ஆசிரமங்களை இளைஞர்கள் நம்புகிறார்கள். அது அவர்களின் பிரச்னைகளைச் சரிசெய்கிறதா..?’ என்றோம்.

‘‘ஒரு ஆசிரமத்துடன் தம்மை அடையாளப்படுத்தும்போது  தனிமனித அடையாளம் மறைந்து ஒரு பொது அடையாளம் அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த பொது அடையாளம் மூலம் தனி மனிதப் பிரச்னைகள் தீர்க்கப்படுவதாக இந்த இளைஞர்கள் நம்புகின்றனர்.

உளவியலின் நிபுணர் ஃபிராய்ட் இதை, ‘கலெக்டிவ் நார்சிசிஸம்’ என்கிறார். அதாவது கூட்டு சுயமோகம் அல்லது சுயகாதல். ‘ஒரு மாயையான ஆளுமையின் ஓர் அங்கமாக சேர்ந்து பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக போலியான சுகம் காண்பது’ என இதை வரையறை செய்கிறார் அவர். உண்மையில் இது ஒருவித பைத்தியக்காரத் தனம்தான் என்றும் ஃபிராய்ட் சொல்கிறார்.

தவிர, ஏழை, பணக்காரன் என எல்லோரும் ஆசிரமத்தை நோக்கிப் படையெடுக்கின்றனர். ஏனென்றால் மனதுக்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் கிடையாது. அதிலும் ஆசிரமங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறிய சூழ்நிலையில் மனப் பிரச்னைகள்கூட மிக மோசமான நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது...’’ என்றவரிடம் ‘சாமியார்கள் குறித்த பின்னணிகள் தெரிந்தபிறகும் பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளை ஆசிரமங்களுக்கு ஏன் அனுப்புகின்றனர்..?’ என்றோம்.

‘‘இதுவும் புதிராகத்தான் உள்ளது. சாமியார்களைப்பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தபின்னரும் கூட எப்படி இது நிகழ்கிறது என்பது ஆச்சர்யம்.
ஆனால், ஏ.கே.இராமானுஜம் என்ற அறிஞர் இதுகுறித்து சொல்லியது முக்கியமானது. அதாவது இந்திய மனம் என்பது எல்லா முரண்பாடுகளையும் மனதில் தனித்தனியாகப் பிரித்துப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதுதான் அது.

சாமியார்கள் முரண்பட்ட நபர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன்... ஆசிரமங்களுக்குச் செல்லும் இளைய சமூகத்துக்கும் தெரியும். ஆனாலும் செல்கிறார்கள். காரணம், அங்கு செல்பவர்கள் ஏற்கனவே பலவீனமானவர்கள். தனிமனித ரீதியில் குறையுடையவர்கள். ஆதலால் முரண்களை மூட்டை
கட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

தன்னிடமே முரண் இருக்கும்போது குருவுக்கு குறையிருப்பது ஒரு பிரச்னையாக அவர்களுக்குத் தெரிவதில்லை. பொதுவாக குருவுக்கு எல்லாம் தெரியும் என்பதுதான் குரு பற்றிய இந்தியப் பார்வை. இதனால்தான் இந்திய ஆன்மீகத்தில் குருவை கேள்வி கேட்பதில்லை. அப்படி கேள்வி கேட்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான் இந்திய குரு-சீட பரம்பரை சரித்திரத்தின் பாடம்...’’ என்ற சஃபி, புன்னகைத்துவிட்டு தொடர்ந்தார்:

‘‘ஒரு ஆசிரமவாசி குருவுடன் மாத்திரமல்ல… அங்கிருக்கும் மற்ற ஆசிரமவாசிகளுடனும் தங்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே இவர்கள் இரண்டு அடையாளத்துடன் தொடர்ச்சியாக சமர் புரியவேண்டியிருக்கிறது. என்னதான் குருவின் முரண்கள் மூட்டை கட்டப்பட்டாலும் ஆசிரமத்தின் தினசரி வாழ்க்கை என்பது ஓர் ஆசிரமவாசிக்கு முக்கியம். ஆனால், இன்றைய கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிரமத்தில் அன்றாடம் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.

ஓஷோவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் டான்ஸ் தெரபி என்னும் நடனம் மூலம் சிகிச்சை என்றார். அது வெளிப்படையாக இருந்தது. அதேபோல் நிர்வாணமாக இருப்பது என்பதும் அவர் ஆசிரமத்தில்தான் இருந்தது. ஆனால், அங்கும் பிரச்னைகள் வந்தன. இது பலருக்குத் தெரியும்.
ஆனால், இன்றைய கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிரமத்தில் சாமியார்கள் வீடியோ வெளியிடுவதைத்தவிர அன்றாடம் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை ஆண் - பெண் சமத்துவம், உயர்வு - தாழ்வு பிரச்னைகள் மற்றும் ஒழுக்கம் - ஒழுக்கம் சாராத பிரச்னைகளும், முரண்களும் அங்கே தலைதூக்கலாம்.

முரண்கள் ஓர் எல்லையை மீறும்போதும் கேள்வி கேட்கும்போதும் வெளியேற்றம் இயற்கையாகவே நடக்கும். ஆனால், ஒரு ஆசிரமத்தின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றித் தெரியாதபோது ஒரு யூகமாக மட்டுமே இதைச் சொல்ல முடியும்...’’ என்றவரிடம் ‘ஆசிரமங்களில் மை வைத்து இளைஞர்களை வசியம் செய்வதாகச் சொல்கிறார்களே...’ என்று கேட்டோம்.

‘‘மை வசியம் என்பது  இந்திய சமூகத்தில் காலம் காலமாகப் பேசப்படும் விஷயம். தாசிகள் சோற்றில் மையைப் பிசைந்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்தார்கள், சொக்குப்பொடி போட்டார்கள் என்ற செய்திகள் எல்லாம் நாட்டுப்புற வடிவிலேயே நம்மிடம் புழங்கும் செய்தி.
இது எந்தளவுக்கு ஆசிரமங்களில் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. உளவியல் ரீதியாக நெற்றிப்பொட்டு, கண் என்பது எல்லாம் முக்கியமானதுதான்.

ஒருவரின் கண்ணைப் பார்த்து அவரை மயக்கும் முறை எல்லாம் உளவியல் மருத்துவத்திலேயே உண்டு. கிராமங்களில் அருள் வருவது எல்லாம் இதுமாதிரியான ஒரு மயக்கும் சக்திதான். மயக்கம் பலவேளைகளில் வெட்டு மாதிரியான ஒரு நிலைக்குக்கூட ஒருவரைத் தள்ளலாம்.
ஆனால், ஆசிரமங்களில் இந்த கிராமிய முறை எப்படி நவீன முறையில் செயல்படுகிறது என்பதுதான் இங்கே கேள்வி.

உளவியல் ரீதியாக ஒருவரை ஆசிரமங்களில் கட்டிப்போடலாம் என்றாலும் உளவியல் அடிப்படையில் இது சிகிச்சைக்காக பயன்படுகிறதா அல்லது போலியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஓர் ஆசிரமவாசி தெரிந்துகொள்ளும்போது அதிலிருந்து அவர் விடுபடுவது இயற்கையாகவே நடக்கும்’’ என்றவரிடம், ‘ஆசிரமங்களுக்கு என ஒரு நேர்மறையான செயல்பாடு கிடையாதா..?’ என்றோம்.

‘‘மெளன மடங்கள் என நம் நாட்டில் இருக்கின்றன. பெளத்தத்தில் ‘உன் துக்கத்துக்குக் காரணம் நீதான். அதைப் போக்கவேண்டிய பொறுப்பு உன்னுடையதுதான்’ என்று இருக்கிறது. இதை பெளத்த மடங்கள் செய்கின்றன. வள்ளுவரும்கூட ‘எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என புறநானூறும் சொல்கிறது. இது எல்லாம் இந்த ஆசிரமங்களில் கிடையாது.

ஆனால், இன்றைய காலத்தில் உன் பிரச்னைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. நம்மால் ஆனதை நாம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். தீராத போது பிறருடன் சேர்ந்து தீர்க்கவேண்டும். உண்மையில் நம் பிரச்னைகள் எல்லாமே நம் பிரச்னைகள் இல்லை. அது சமூகத்துடனும் ஒன்றியிருக்கிறது. சமூகத்துடன் சேர்ந்து பிரச்னைகளைக் களைய முயற்சிக்கும் போதுதான் தனிமனிதர்களின் பிரச்னையும் தீரும். இதுதான் இன்றைய தேவை...’’ என அழுத்தமாக முடித்தார் சஃபி.       

டி.ரஞ்சித்