எழுதப் படிக்கத் தெரியாத தலித் பெண்கள் தனியார் சேனல்களுக்கு டாக்குமெண்ட்ரி எடுக்கின்றனர்!



தெலுங்கானா மாநிலம். நல்லமலா காட்டை அடுத்த அப்பப்பூர் பென்டா என்ற கிராமம். அங்குள்ள செஞ்சு பழங்குடியின பெண்கள் விவசாயம் செய்ய தயாராகின்றனர். பெண்கள் விவசாயம் செய்வது இயல்பானதுதான். ஆனால், இந்த கிராமத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. குழுவின் பாதிப் பேர் விவசாயம் செய்ய மண்வெட்டி, அரிவாள் என நிலத்தில் இறங்க... இன்னொரு குழு கேமரா, ட்ரைபாட், மைக் எனத் தயாராக நிற்கின்றனர்!

நிலத்தில் இறங்கிய பெண்கள் விவசாய முறைகளையும், விதை வங்கி பற்றியும் விளக்கிக்கொண்டே விவசாயம் செய்ய அதை நம் கேமரா பெண்கள் படம் பிடிக்கின்றனர்!Deccan Development Society (DDS) என்ற அமைப்பு 30 ஆண்டு காலமாக தலித் பெண்களுக்கும் பிற ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த பெண்களின் நலனுக்காகவும் இயங்கி வருகிறது.

தெலுங்கானாவிலிருக்கும் 75 கிராமங்களில் ‘சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டு வறுமையில் வாடும் ஐயாயிரம் பெண்களை இணைக்கும் புள்ளியாக இருக்கிறது. சங்கம் குழுவின் உறுப்பினர்கள்தான் இந்தப் பெண்கள். இப்பெண்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாதவர்கள்!கிராமப்புறங்களில் கல்வியறிவில்லாத திறமையான மக்களே அதிகம் வாழ்கின்றனர். ஆனால், படிப்பறிவை மட்டும்தான் நாம் அங்கீகரிக்கிறோம்.

பல திறமைகள் கொண்ட மனிதனிடம், உனக்குப் படிப்பறிவு இல்லை என்று நிராகரித்து விடுகிறோம். இதை கவனித்த DDS அமைப்பு, விவசாயப் பெண்களின் அறிவை மக்களுக்கு நிரூபிக்கவும், அவர்கள் மூலம் விவசாயத்தை மற்ற பெண்களுக்குக் கற்பிக்கவும் இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. இதனால் கல்வியறிவில்லாத மக்களுக்கும் சிறந்த வேளாண் யுக்திகளையும், செயல்முறையையும் கற்றுத்தரலாம்.

பதினொரு வருடங்களுக்கு முன் அக்டோபர் 18, 2008 அன்று சங்கம் வானொலி மக்னூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் கிராமப்புற சமூக வானொலியும், ஆசியாவிலேயே முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் வானொலி நிலையமும் ஆகும்.  இந்த நிலையம், முற்றிலுமாக, கிராமப்புறத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, அவர்களுக்கே சொந்தமாகவும் இருக்கிறது.

சங்கம் ரேடியோ, சுமார் 100 கிராமங்களை உள்ளடக்கி, 50,000 மக்களிடம் சென்றடைகிறது. இந்த வானொலி மூலம் பெண்கள், அழிந்து வரும் தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் மீட்டெடுத்திருக்கின்றனர். மேலும், வேளாண் சார்ந்த திட்டங்களையும், தங்கள் கிராமத்தில் நிலவும் பிரச்னைகளையும் விவாதித்து, மக்களிடம் கொண்டு சேர்த்து, தீர்வு கண்டிருக்கின்றனர். பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதும் இவர்களின் முக்கிய திட்டமாக இருந்திருக்கிறது.

வானொலியைத் தொடர்ந்து இப்போது உருவாக்கப்பட்டதுதான் இந்த காணொலி நிகழ்ச்சிகள்.  இந்த ஊடகத்தில் 20 பெண்கள் வேலை செய்கின்றனர். இதிலும் பெண்களே கேமரா, லைட், மைக், ரெகார்டிங் என அனைத்து வேலையும் செய்கின்றனர். முதலில் DDS அமைப்பு பயிற்சி வழங்கியதும், பெண்களே விவசாயம் சார்ந்த ஒரு சிறிய காணொலியைத் தயாரித்து, அதை தூர்தர்சன் தொலைக்காட்சி சேனலுக்கு அனுப்பினர். அது ஒளிபரப்பானதும், இப்போது தைரியமாக முன்வந்து பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து  வருகின்றனர்.

தூர்தர்சனுடன், தனியார் சேனலும் மாதம் ஒரு முறை இவர்களது கரிம வேளாண்மை குறித்த காணொளியை ஒளிபரப்பு செய்கிறது.கேமராவை எப்படி இயக்குவது, ஒரு நிகழ்ச்சியை எப்படித் தயாரிப்பது, அதை எப்படி எடிட் செய்வது என அனைத்து விவரங்களையும் DDS அமைப்பு இவர்களுக்கு ஒரு மாதத்தில் கற்றுக்கொடுத்திருக்கிறது. குறிப்பாக சில தொழில்நுட்பம் சார்ந்த சொற்களை, இவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, அதை இவர்களுடைய பேச்சுவழக்கில் எளிமையாக்கி கற்பித்திருக்கின்றனர்.

லக்சம்மா, மொல்லம்மா மற்றும் சந்திரம்மா ஆகிய மூன்று பெண் பத்திரிகையாளர்கள் இதில் முக்கியமானவர்கள். மூவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான். லக்சம்மா முதலில் தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார். இப்போது சங்கம் அமைப்பில் இணைந்தபின் 15 நாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் சென்று வந்திருக்கிறார். ஊடகம் மூலம் பெண்கள் அவர்களது திறமையை உணர்ந்திருக்கின்றனர். சுயமாக தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

‘‘எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், கேமராவைக் கையாண்டு தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். ஐம்பது வயதைக் கடந்த பெண்கள் கூட அருமையாக வீடியோ எடுக்கின்றனர். இதன் மூலம் வெளியுலகத்துடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். அரசாங்கமும், பிற அதிகாரிகளும் முறையாக வீடியோ பயன்பாட்டை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தினால் வளர்ச்சி அதிகரிக்கும்.

இப்படி பெண்கள் தங்களுடைய பாணியில் அவர்களுடைய மக்களுக்கு தகவல்களைக் கூறும்போது, அது மேலும் ஆழமாக மக்களிடம் சென்றடைகிறது...” என்கிறது DDS அமைப்பு. வீடியோ மூலம் சங்கம் பெண்கள் தங்கள் முயற்சிகளை ஆவணப்படுத்தி வருவதால் ஐநா அமைப்பு இவர்களை அங்கீகரித்து செப்டம்பர் 24, 2019 அன்று சங்கம் அமைப்பைச் சேர்ந்த தலித் பெண்களுக்கு பெருமைக்குரிய ‘Equator’ விருதை வழங்கியிருக்கிறது!  

30 வருடங்களுக்கு முன், சாதாரணமாக பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள், இப்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் வேளாண்மை, சுகாதாரம், தாவர மரபணு வளங்களின் பாதுகாப்பு எனப் பல பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இயக்கமாக மாறியிருக்கிறது. முதலில் தங்கள் சொந்த பிரச்சனையைப் போக்க முயன்ற பெண்கள், தற்போது கிராமத்தின் பிரச்சனைகளையும், விவசாயிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.              

ஸ்வேதா கண்ணன்