இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்க்கலாம்! மித்ரன் அதிரடி



‘‘எனக்கு ஒரு நல்ல அடையாளம் கொடுத்த படம், ‘இரும்புத்திரை’. நல்ல அபிப்பிராயம் கொண்டு வந்த படமும் கூட.
அதைக் காப்பாற்ற நினைத்தேன். அதுதான் கொஞ்சம் பொறுமையாக ஒன்றரை ஆண்டுகள் கதைக்கான ஆதாரங்களை சேகரிச்சு ‘ஹீரோ‘ படம் செய்திருக்கோம். மனசுக்குள் கதை ஓட ஆரம்பிச்சதும் கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும். அதில் கச்சிதமாக பொருந்திய முகம் சிவகார்த்திகேயன்.

‘ஹீரோ’ கிட்டத்தட்ட ரெடி. அருமையான இறுதிக்கட்டத்தில் இருக்கோம். படத்தில் எது வேணும் எது வேண்டாம்னு முடிவு எடுக்கிற நேரமில்லையா… அதுதான் இந்த பரபரப்பு…’’ சின்னதாகச் சிரிக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ‘இரும்புத்திரை’யின் நல்ல வெற்றியில் கவரப்பட்டு ஹீரோக்கள் பணிபுரிய ஆசைப்படுகிற இயக்குநர்.

இந்த காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கு…கல்வித்துறையின் முறைகேடுகளை, பஞ்சாயத்தை, அதன் உண்மை நிலைகளைப் பேசக்கூடிய படமா இருக்கும். பெற்றோர்களும், படிக்கிற குழந்தைகளும், மத்தவங்களும் தெரிஞ்சிக்கணும்… அசலாக இங்க என்னதான் நடக்குதுன்னு சொல்லப் போறதை எல்லோரும் நம்புகிற ஒருத்தர் சொன்னா ரொம்ப நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு பிடிச்சவரா இருந்தால் அதிகம் நல்லது.

அதற்கு சிவகார்த்திகேயன் பொருத்தமா இருப்பார். எப்பவும் ஒரு ஆர்ட்டிஸ்டை நான் உள்ளே நுழைக்கிறதில்ல. எல்லாத்துக்கும் ஒரு பதிலடி கொடுக்க, அதை திறம்பட செய்யவும் ஒருத்தர் வந்து இந்த ஸ்க்ரிப்ட்டில் உட்காரணும். நானும் சிவகார்த்திகேயனும் இதிலேயே ஒண்ணா இருந்து கதையின் பரப்புகளை அலசினோம். நாம மனசுல ஒண்ணு வெச்சிருப்போம். பல அம்சங்களைச் சுருக்கி தேர்ந்தெடுத்து நாலு வரி டயலாக் போட்டிருப்போம். அந்த டயலாக்கே சுண்டக் காய்ச்சின மாதிரி இருக்கும்.

அதை சிவகார்த்திகேயன் அவ்வளவு கவனமா, வகையா சொல்லும்போது சும்மா பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கும். அவரோட எக்ஸ்பிரஷனே பல செய்திகளைச் சொல்லுது. இந்த விஷயங்களை எடுத்துச் சொல்ற ஹீரோவுக்கு ஒரு நல்ல அறிமுகம் வேணும். சூப்பர் ஹீரோவாக அவர் நடிப்பில் அவ்வளவு தனித்தன்மை இருக்கு.

பல ஹீரோக்கள் கிட்ட நாம எதிர்பார்ப்போம். அது இரு மடங்காகும். சில சமயம் பல மடங்காகும். ஆனால் இவர்கிட்ட எதிர்பார்க்காத ஒண்ணு வருது. தனக்குள் இருக்கிற திறமையைக் கொண்டாடாமல் இருக்கிற மனிதரை நெனச்சா ஆச்சரியமா இருக்கு. ‘ஹீரோ’வில் நீங்கள் இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனைப் பார்க்கலாம்.

கல்வித்துறையில் இருக்கிற பிரச்னைகளை எடுத்து வைக்குமா?
அதைக் கேள்வி கேட்கிற படம். எல்லோரும் படிக்கிறோம். அதில் வாழ்வியல் சம்பந்தமாக நமக்கு நடப்புல பயன்படுகிற விஷயங்கள் எதாவது இருக்கா! படிக்கிறது வேற, கத்துக்கிறது வேறன்னு பல விஷயங்கள் இருக்கு.

எட்டாவது வகுப்பு கெமிஸ்ட்ரியைப் பத்தி இன்னைக்கு கேட்டா தெரியுமா! படிச்ச படிப்பெல்லாம் எங்க காணாம போச்சு! ஏன் அது இப்ப வரைக்கும் உபயோகப்படல..? மனப்பாடம் செஞ்சு பாஸ் செய்ததில் நடந்தது என்ன? இதையெல்லாம் கண்டு கேட்டு தெளிந்து நிறைய கல்வியாளர்களை சந்தித்து நிஜம் புரிந்து எடுக்கிற படம். உங்களுக்கு புத்திமதியெல்லாம் அடுக்கிவெச்சு

சொல்லல. நாட்டில் கல்வியில் இருக்கிற விஷயங்களை பேசியிருக்கோம். அதையெல்லாம் சரியா எடுத்து வைக்கவும், உரையாடவும் ஒரு ஸ்பேஸ் நம்மகிட்ட நிச்சயமா இருக்கு. அந்த இடத்தில இந்தப் படம் நிக்கும்.பிரியதர்ஷன் - லிஸி வாரிசு எப்படி இருக்காங்க?

நடிப்பு கல்யாணிகிட்ட இயல்பாவே இருக்கு. இந்தப் பக்கமே அதிகமா இருந்திருக்காங்க. அதனால் தமிழை புரிஞ்சிக்கிறதில், தெரிஞ்சிக்கிறதில் அவங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. அவங்க வீட்டுக்கு வேண்டுமானால் செல்லப் பிள்ளையா இருக்கலாம். ஆனால், படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட தாமதமாக வந்தது கிடையாது. செட்டுக்கு வந்து அரட்டை அடிச்சது கிடையாது.

அடுத்த டேக்குன்னு சொன்னால் முகத்த சுழிக்கிறதும் கிடையாது. டைரக்டர் ஃபேமிலியில் இருந்து வந்ததால் இதிலுள்ள கஷ்டம் நஷ்டம் புரிஞ்சிருக்கு. எல்லாத்துக்கும் மேல கேரக்டர உணர்ந்து நல்லா நடிச்சாங்க.அர்ஜுனை மீண்டும் கொண்டு வந்துட்டீங்க…இதுல முக்கியமான ஒரு பாஸிட்டிவ் கேரக்டர் இருக்கு. அடுத்த கட்டத்தை அதுதான் நகர்த்தும். அப்படிப்பட்ட இடத்துக்கு அவர்தான் சரியா இருப்பார்.

‘என்னப்பா, ‘இரும்புத்திரை’யில நம்மள வில்லனா காண்பிச்சிட்டியே’னு என்னை எங்க பார்த்தாலும் சிரிச்சிகிட்டே கேட்பார். இதுல இந்த கேரக்டருக்கு வாங்கன்னு சொல்லி ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் கொடுத்தேன். அனுபவம் என்கிற விஷயம் சும்மா கிடையாது. அருமையா நடிச்சுக் கொடுத்தார். இவ்வளவு அனுபவத்தை சேர்த்து வைத்ததுக்கு எப்படியோ இருக்கலாம்.

ஆனால், அவ்வளவு எளிமை. ஏதோ இப்பதான் முதல் படத்துக்கு வந்து நிக்கறவர் மாதிரி நிக்கிறார். எங்க சுறுசுறுப்பை மிஞ்சி ஆக்டிவா இருப்பார். தூய மனசு. இந்தியிலிருந்து அபய் தியோல் முதல் தடவையா வந்து இறங்கி ஸ்டைலில் பின்னி எடுக்கிறார்.   பாடல்கள் சிறப்பா இருக்கு…

யுவன்தான் மியூஸிக். நான்கு பாடல்கள். இன்னைக்கும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கார். அவரை சுலபமா அணுகலாம். பாடல்கள்தான் முதல்வரிசை ரசிகனையும் ரசனையால் மனசைத் தொட வைக்கணும். அப்படி இதில் தொட்டும் இருக்கு.

பா.விஜய் மாதிரி உணர்ந்து எழுதுகிற கவிஞனின் பாடல் வரிகளும், நல்ல மனநிலையில் இருக்கிற இசையமைப்பாளரும் ஒரே நேர்க்கோட்டில் இணைஞ்சா அந்தப் பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி எங்களுக்கும் நடந்தது. ஜார்ஜ் வில்லியம்ஸ்தான் எங்கள் கேமராமேன். என் மனசில் இருப்பதை கையப் புடிச்சி வெளியே கூட்டிட்டு வர்ற ஆளு.எல்லாம் நல்லபடியாகஅமைந்தால் நம் எண்ணங்களை நெனச்சபடி கொண்டுவர எந்தப் பிரச்னையும் கிடையாது. அப்படி வந்திருக்கு படம்!            

நா.கதிர்வேலன்