தனுசு ராசி நேயர்களே



ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள ஹரீஷ் கல்யாணின் வாழ்க்கையில் நடக்கும் காதல் அமளி துமளியே ‘தனுசு ராசி நேயர்களே’.
தனுசு ராசிக்காரரான ஹரீஷ், கன்னி ராசிப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என ஜோதிடர் சொன்னதை நம்புகிறார். கடைசியாக தன் பழைய காதலி ரெபாவின் தோழியான டிகங்கனா கன்னி ராசி என அறிய உடனே காதல் பிறக்கிறது. செவ்வாய்க்கு செல்லும் லட்சியத்தில் இருக்கும் அந்தப் பெண்ணோ ஹரீஷை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அதன் பின்னான சுவாரசியங்களே மீதிக்கதை.

புதிதாக சொல்ல முயன்று அறிமுகம் ஆகியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி. ஹரீஷ் கல்யாண் மிகவும் நம்பகமான வளர்ச்சி. கலகலப்பாக சற்றே காமெடியுடன் பக்குவத்தில் முன்னேறியிருக்கிறார். இன்னும் பக்குவப்பட்டால் அடுத்த இளைய வரிசை காத்திருக்கிறது.

அறிமுகமாக டிகங்கனா வசீகரம். அவ்வப்போது அடுத்து நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி யோகி பாபு ரன்னிங் கமெண்ட்ரி கொடுப்பது சுவாரஸ்யம். பாண்டியராஜன், மயில்சாமி, சார்லி என எல்லோரும் அவ்வப்போது சிரிப்பு மூட்டுகிறார்கள்.ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இரண்டு ஈர்க்கிறது. சுலமாக சென்றுவிடக்கூடிய கதைக்கு அவ்வப்போது ‘பச்சை’ வசனம் கலந்திருப்பது ஏன்? அதனால் நெளிவது குறைந்திருக்குமே!
பொழுதுபோக்க ரசிகர்கள் நம்பலாம்.  

குங்குமம் விமர்சனக் குழு