குண்டு



பயன்படுத்தாமல் கடற்கரையில் ஒதுங்கிய குண்டை முன்வைத்து உலக அரசியலோடு உள்ளூர் அரசியலையும் பேசினால் அதுவே ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.குண்டு பல கைகளுக்கு மாறி தினேஷ் ஓட்டிச் செல்லும் லாரிக்கு வருகிறது.
அபாயம் தெரியாமல் அவரும் முனீஸ்காந்தும் சேர்ந்தே பயணிக்கிறார்கள். துரத்துகிற போலீஸ், கிராமத்திலிருந்து ஆணவக் கொலையில் இருந்து தப்பிய ஆனந்தி, கொல்லத்துடிக்கிற ஆனந்தியின் அண்ணன் என எல்லோருக்கும் தினேஷ் இலக்காக, அவர் தப்பித்தாரா, குண்டு யாரிடம் சேர்ந்தது, அது சொல்லவரும் செய்தி என்ன என்பதே மீதிக் கதை.

காயலாங்கடையின் அசல் வாசனையோடு அறிமுகமாகிறார் தினேஷ். குடித்துவிட்டு முதலாளியை வார்த்தைகளால் விளாசி சலம்பும்போதும், குண்டு கையிலிருக்கும் பதட்ட நிமிடங்களிலும் மனிதர் பிரவாகமெடுக்கிறார். டிரைவராக முடியாமல் விரக்தியில் இருக்கும் முனீஸ்காந்த் சிறப்பு. சிரித்து சிரித்து காதலிக்கும் ஆனந்தி, படம் பேசும் தீவிர அரசியலுக்கிடையில் பெரும் ஆறுதல்.

இரும்புக் கழிவுகளுடன் இணைந்தே கிஷோரின் கேமரா உழைத்திருக்கிறது. அறிமுக இசையமைப்பாளர் டென்மா பெரும் பலம். ஒரே படத்தில் தெரிந்த அத்தனை அரசியலையும் சொல்லத் துடித்தது ஏன்? ஆனந்தியின் இத்தனை பலமான காதலுக்கு அடித்தளமே இல்லையே...இருந்தும் புதிய களம், தீராத அக்கறையில் இந்தக் குண்டு நம்மைக் கொல்லாமல் யோசிக்க வைக்கிறது.

குங்குமம் விமர்சனக் குழு