ஜடா



பரபரப்பான கால்பந்து விளையாட்டில் பயமுறுத்தும் திரில்லரையும் சேர்த்தால் அதுவே ‘ஜடா’.வட சென்னையில் இருக்கிற கால்பந்தாட்டக் குழுக்களின் இறுதி ஆட்டம் கோச்சின் சொந்த ஊருக்குச் செல்கிறது. அங்கே நடக்கும் விளையாட்டு, பயம் காட்டுகிற அந்த ஊர், அச்சமூட்டும் இரவுகள் தொடர ஃபைனல் நடந்ததா, கதிர் அணி வெற்றி பெற்றதா என்பதே பரபரப்பான கிளைமாக்ஸ்.

கதிர் ‘பரியேறும் பெருமாளி’ன்அதே தீவிரத்தோடு இணைந்திருக்கிறார். மனதில் கனலும் கோபமும் உருகிக்கொண்டிருக்கும் காதலும் அவருக்கு நயமாகக் கலந்து வருகிறது.தேடிவந்து காதல் சொல்லும் ரோஷினி பிரகாஷ் நல்ல அறிமுகம். நெடுநெடு உயரத்தில் ஸ்லிம் ஸீரோ சைஸில் அசத்துகிறார்.

திரும்பித் திரும்பி பார்க்கலாம் எனத் தீர்மானித்தால் ஸ்போர்ட்ஸ் திரில்லர் பயங்கரத்தில் அவரைக் கைவிட்டு விடுகிறார்கள். யோகி பாபு சிரிப்பும் வராமல், குணச்சித்திரத்திலும் கால்வைக்காமல் தடுமாறுகிறார். கிஷோர் கண்டிப்பும் ஒழுங்குமான கோச். வில்லனாக ஏ.பி.தர் புதுமுகம் காட்டுகிறார்.

பின்னணி இசையில் சாம்.சி.எஸ் பாடுபட்டிருக்கிறார். கால்பந்தின் வேகத்திலேயே ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா களமிறங்கியிருக்கிறார். ஒரே படத்தில் விளையாட்டையும், வடசென்னை சூழலையும், திரில்லரையும் சேர்த்திருக்க வேண்டாமே... இதனால் கூர்மை குறைந்திருக்கிறது.
‘ஜடா’ உழைப்பைக் கொட்டியதால் ஒரு தடவை பார்க்கக் குறைவில்லாமல் இருக்கிறது.
    
குங்குமம் விமர்சனக் குழு