தனி மனிதனால் ஒரு தீவை வாங்கி தனி நாடு என அறிவிக்க முடியுமா..?



வேலை தேடி பக்கத்து மாவட்டத்துக்கு குடும்பத்ேதாடு இடம் பெயர்ந்தாலே புதிதாக குடியேறிய வீட்டின் முகவரிக்கு ரேஷன் கார்டில் அட்ரஸ் மாற்றுவது முதல் கேஸ் கனெக்‌ஷன் மாற்றுவது வரை பல வேலைகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் செய்து முடிப்பதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது.பிறகு வாக்காளர் அடையாள அட்டை தொடங்கி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகம், பான் கார்ட், ஆதார் அட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட், 100 நாள் திட்ட அட்டை, மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்ட், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஓய்வூதிய சான்று... என 11 வகையான ஆவணங்களிலும் அட்ரஸை மாற்ற வேண்டும்.

எதார்த்தம் இப்படியிருக்க பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தனித் தீவை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்து இதற்கு அங்கீகாரம் கோரி ஐநாவின் உதவியை நாட முடியுமா..? தனி நாடு கேட்டு எத்தனையோ இன மக்கள் காலம் காலமாக போராடி வரும் நிலையில், இன்றும் பல நாடுகளில் மக்கள் அகதிகளாகவும், சொந்த நாட்டிலேயே சிறை வைக்கப்பட்டும் வாழும் நிலையில்... இதெல்லாம் சாத்தியமா?

ஸ்பெயினின் கேட்டலோனியா, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சீனாவின் ஷின்ஜியாங், ஆப்கானிஸ்தானின் பக்தூனிஸ்தான், ஈராக்கின் குர்திஸ்தான், சீனாவின் திபெத், ரஷ்யாவின் செசென்யா, உக்ரேனின் கிழக்கு உக்ரேன், பிரிட்டனின் ஸ்காட்லாண்ட், இராக்கின் குர்த், இந்தியாவின் காஷ்மீர், இலங்கையின் ஈழம் என உலகெங்கிலும் பல்வேறு பிரதேசங்கள் சுதந்திரத்துக்காக போராடி வருகின்றன.

ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகள் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இல்லை. தங்களது நாட்டின் எல்லை, சர்வதேச வர்த்தகம், இயற்கை வளம், மக்களின்  பலம் என எல்லா வகையிலும் உலகளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள  வேண்டியிருக்கும் என்பதால், தங்கள் வசம் உள்ள நாடுகளைப்பிரித்துக் கொடுக்கவோ,  தனி நாடாக அறிவிக்கவோ இசைவு தெரிவிப்பதில்லை.

ஐ.நா-விடம் தனிநாடு கோரும்  அமைப்புகள் நியாயத்தை எடுத்துச் சென்றாலும், வல்லரசு நாடுகள் மூக்கை  நுழைத்து எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காதபடி பார்த்துக் கொள்கின்றன. இது ஒருபக்கம் என்றால்... பசிபிக் பெருங்கடலில் உள்ள போகெய்ன்வில்லே தீவு, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்ற சர்ச்சையும் அதைத் தீர்க்க நடந்த வாக்கெடுப்பும் மறுபக்கம்.  

உண்மை இப்படியிருக்க தனி மனிதர்கள் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அதனை நாடாக அறிவிக்க முடியுமா?
முடியாது. ஆனால், தனித் தீவை விலைக்கு வாங்க முடியும்!பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளில் சிலரும் இப்படி தங்களுக்கென ஒரு தீவை விலைக்கு வாங்குகின்றனர்; வாங்கியும் வருகின்றனர்.  அங்கு தேவையான வசதிகளை, அந்தத் தீவை விற்பனை செய்த நாடே செய்து தருகிறது.  சர்வதேச போலீஸ் கூட அந்த தீவுக்குள் செல்லாத அளவுக்குப்  பாதுகாப்பு  வழங்குகிறது. ஐநா சட்டம் கூட இதனை ஏற்கிறது.

ஆனால்,  விலைக்கு வாங்கிய தீவை, தனி நாடாக அறிவித்து மக்களைக் குடியேற வைத்து,  ஏதாவது சர்வதேச சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்டால், அவ்வளவுதான். எல்லாம்  கதம்... கதம்...ஐநாவின் சட்டம் என்ன சொல்கிறது..? நேரடியாக ஒரு தீவையோ, நாட்டையோ அங்கீகரிக்க முடியாது. ஐநா உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவை அவை பெறவேண்டும்.

இதற்கு புதியதாக நாட்டை அறிவித்தவர் ஐநா-வின் நம்பகத்தன்மைையப் பெறவேண்டும். மேலும், அங்கு வசிக்கும் மக்களின் நிலை, இயற்கை பாதுகாப்பு வழிமுறைகள், சர்வதேச சட்டங்கள் கடைபிடிப்பு, மக்களுக்கான பாதுகாப்பு... உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதெல்லாம் நடந்தால், தனி நாடு அறிவிப்பை ஐநா வெளியிடும்.

பொதுவாக, யார் வேண்டுமானாலும் தாங்கள் வசிக்கும் இடத்தை ‘தனி நாடு’ என்று ஒரு பெயரை வைத்து அறிவிக்கலாம். இதற்கெல்லாம் ஐநா-வின் சட்டத்தில் தடை ஏதுமில்லை. ஆனால், சர்வதேச பிரச்னைகள் என்று வரும்போது, தனி நாடு என்று அறிவித்தவர்கள் நிலைமை மோசமாக மாறிவிடும்.

2017 - 18ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பதல்கடி என்ற இயக்கத்தினர், தங்கள் கிராமங்களுக்கு வெளியே நடப்பட்ட கல் பெயர்ப் பலகையில், தங்களது கிராம சபையே ஒட்டுமொத்த அதிகாரம் பெற்ற அமைப்பாக அறிவித்து, மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

சோமாலியாவில் 1991ம் ஆண்டு முதல் சோமாலிலாந்து தன்னை ஒரு தனி நாடு என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வேறு யாரும் அதனை அங்கீகரிக்கவில்லை. செர்பியாவில் உள்ள கொசோவோ 2008ல் சுதந்திரத்தை அறிவித்தது. சில நாடுகள் மட்டுமே அதை அங்கீகரிக்கின்றன.

கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து, 2008ல் சர்வதேச நீதிமன்றத்தில் செர்பியா வழக்குத் தொடுத்தது. ‘இதில் தவறில்லை’ என தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், ‘எந்தவொரு நாடும் சுதந்திர நாடாக தங்களை அறிவித்துக் கொள்ளமுடியும்; இது சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது இல்லை’ என்று கூறிவிட்டது. ஆனாலும் ஐநா இன்னமும் கொசோவோவை அங்கீகரிக்கவில்லை.

ஐநா-வில் உறுப்பினராக இல்லாத நாடு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் கடன் வாங்கமுடியாது. அந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்காது. சர்வதேச வர்த்தக சட்டங்களின் பயன்களையும் பெறமுடியாது; பிற நாடுகளுடன் வர்த்தம் செய்வதும் சுலபமல்ல.

இப்படி சோமாலிலாந்து போல, உலகில் சுமார் ஒரு டஜன் நாடுகள் முறையாக அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வருகின்றன. ஆக, தனி நாடாக சுயாட்சி நடத்துவதற்கு தேவை இரண்டு அம்சங்களே. ஒன்று, அதிகாரம் கொண்ட உலக நாடுகளின் ஆதரவு; மற்றொன்று, ஐநா-வின் அங்கீகாரம்.
இது இரண்டும் இல்லாதபட்சத்தில் தனி நாடு என்ற அறிவிப்பு வெறும் காமெடிதான்!         

செ.அமிர்தலிங்கம்