Blue Piscean



உற்சாகத்தில் ஜொலி ஜொலிக்கிறார் ரிது வர்மா. டோலிவுட்டில் தேசிய விருது குவித்த ‘பெல்லி சூப்லு’வின் ஹீரோயின். தமிழில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’, துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...’ என ரிது நடித்து முடித்த படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்.  

இந்தப்  புத்தாண்டை கனடாவின் டொரொன்டோவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்… மீன ராசிக்கார ரிது.‘‘யெஸ். A True Blue Piscean. அதுல ஒரு சின்ன பெருமைதான். பூர்வீகம் மும்பை. இன்னமும் வீட்ல அப்பா அம்மாவோட இந்திலதான் பேசறேன்.
ஆனா, நான் பி.டெக் படிச்சது, வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத்துல. சின்ன வயசில இருந்தே, மியூசிக்ல ஆர்வம். பாடகியாகணும்னு விரும்பியிருக்கேன். ஆனா, அதுக்கான முறையான பயிற்சி எடுத்ததில்ல. காலேஜ் படிக்கும் போது மாடலிங்ல இறங்கினேன். அந்த டைம்லதான் ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிச்சேன்.

எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது, ‘அனுகோருந்தா’னு ஒரு குறும்படம். 48 மணிநேரத்துல எடுத்து முடிச்ச படம்னு ஸ்பெஷலான விருதை அது குவிச்சது. கேன்ஸ்ல நடந்த குறும்பட விழாவிலும் அது ஸ்கிரீன் ஆகியிருக்கு. தெலுங்கில் ஸ்ரீவிஷ்ணு ஜோடியா ‘பிரேம இஷ்க் காதல்’ல அறிமுகமானேன். டோலிவுட்ல் பெயர் வாங்கிக் கொடுத்தது நானியோட நடிச்ச ‘யவடே சுப்ரமணியம்’.

அப்புறம் விஜய் தேவரகொண்டா கூட நடிச்ச, ரொமாண்டிக் காமெடி படமான ‘பெல்லி சூப்லு’ என்னை கோலிவுட் வரை கொண்டு போயிடுச்சு.
தமிழ்ல்ல கலையரசன் நடிச்ச ‘சைனா’ல அறிமுகமானேன். இப்ப ‘துருவ நட்சத்திரம்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...’னு படங்கள் நடிச்சு முடிச்சிட்டேன்!’’ படபடவென பறக்கிறார் ரிது வர்மா.

‘துருவ நட்சத்திரம்’ல என்ன ஸ்பெஷல்..?

விக்ரம் சார், கவுதம் சார் காம்பினேஷன்னாலே ஸ்பெஷல்தான். என் கேரக்டர் பெயர் அனுபமா. விக்ரம் சார் பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. அவர் இந்தியா முழுக்க பெயர் வாங்கின ஒரு சிறந்த நடிகர். கடின உழைப்பாளி, சின்ஸியர் பர்சன். அமேஸிங் ரோல்ஸா செலக்ட் பண்ணி நடிக்கறார். அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. அதைப் போல கவுதம் சாரும், ரொம்ப பிடிச்ச இயக்குநர்கள்ல ஒருத்தர். அடுத்து ராஜமௌலி சார், மணிரத்னம் சார் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு.

என்ன சொல்றார் விஜய் தேவரகொண்டா..?

இந்த ஜெனரேஷன் ஹீரோஸ்ல அவர் அருமையான ஆக்டர். சில்லவுட் பர்சன். ஸ்பாட்ல அவர் இருந்தாலே கலகலனு இருக்கும். ‘பெல்லி சூப்லு’ல எங்க கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சுனு டோலிவுட்ல பாராட்டும் கிடைச்சிருக்கு.

 ட்ரீம் ரோல் எது.. ?

அப்படியெதுவும் இல்ல. ‘பெல்லி சூப்லு’ ஹிட் ஆனதும் ரொமாண்டிக் காமெடி படங்கள்ல ஒரு காதல் வந்துச்சு. ஆக்ட்ரஸா எல்லா ஜானர்லேயும் படங்கள் பண்ண விரும்பறேன். ட்ரீம் ரோல், ட்ரீம் கேரக்டர்னு எதையும் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கல.

ஆனா, ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகணும்னு சின்ன ஆசை இருக்கு. கன்னடத்துலயும் படங்கள் பண்ணணும். பாலிவுட்ல நடிக்கணும், பிசியாகணும்.
ரோல்மாடல்னா... அது மாதுரி தீக்‌ஷித்தும், தீபிகா படுகோனேவும். ஐ லவ் ஃபுட்ஸ். கன்னாபின்னானு சாப்பிட மாட்டேன். ஆனா, ரசனையா சரியான டைம்ல சாப்பிடுவேன்!      

மை.பாரதிராஜா