கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-46



தொலைத்ததை மீட்டுத் தரும் தாடாளன்!

தன்னிகரில்லா ஒரு மாலவன் அடியவரை அவமதித்ததோடு, அவரோடு போட்டியிடும்படி நிர்ப்பந்தித்த தனது சீடர்களுக்கு புத்தி புகட்ட எண்ணினார் ஞானசம்பந்தர். அவருக்கு எதிரே இருந்த திருமங்கை ஆழ்வாரோ, கண்களை மூடி தியானத்தில் இருந்தார். ‘‘தாடாளா! தாடாளா!’’ என்று அவரது இதழ்கள் இணையைப் பிரிந்த பெண் பறவையைப் போல சோகமாகப் புலம்பியது.

நேற்றைய தினம் தாடாள பெருமான் கோயில் காலப் போக்கில் அழிந்துவிட்ட செய்தி தெரிந்த உடன் பித்துப் பிடித்தவர் போல ஆனார் ஆழ்வார். உணவும் செல்லவில்லை, உறக்கம் கொள்ளவில்லை.‘‘தாடாளா! தாடாளா!’’ என்று ஒரே புலம்பல். ஒரு வழியாக நித்ரா தேவி, படாத பாடு பட்டு அவரை ஆட்கொண்டாள்.

கனவில் அந்த மாயக் கண்ணன் வந்தான். ‘‘கலியா! கவலை வேண்டாம்! நாளை நான் உனக்கு காட்சி தருவேன்! வருத்தம் வேண்டாம்!’’ வாய் மலர்ந்து அருளி மறைந்தான். திடுக்கிட்டு எழுந்தார் ஆழ்வார். கண்ணன் கருணையை வியந்தார். ‘‘எப்போ வருவாரோ எந்தன் கலி தீர!’’ என்று புலம்பிய படி ஒவ்வொரு நொடியையும் ஓட்டினார்.

இங்கு ஊரே சம்பந்தர் மற்றும் ஆழ்வாரின் வாதத்தை பார்க்க கூடி இருக்க, இவர் தாடாளனைக் காண தவம் கிடந்தார். வந்து பல  மணி நேரமாகியும் ஒரு வார்த்தையும் பேசாமல் மவுனமாக ஆழ்வார் தியானம் செய்வதைக் கண்டு சைவர்கள் துணுக்குற்றார்கள்.

‘‘போட்டியிட பயம் என்று சொல்லப் பயந்து தியானம் என்னும் நாடகம் ஆடுகிறார் இந்த நாலு கவி வித்வான்!’’ என்று சபை மரியாதையை உதறிவிட்டு கூவினார்கள்.

அவர்களை சம்பந்தர் ஏளனமாகப் பார்த்தார். அவர்களோ அதை சட்டை செய்யவில்லை.  அப்போது ‘‘ஒரு நிமிஷம்...’’ என்று ஒரு வயதான கிழவியின் குரல் ஒலித்தது. குரலுக்குரிய கிழவி கூட்டத்தின் நடுவில் வந்தாள். தலையில் சுமந்திருந்த பானையை பக்தி சிரத்தையாகக்கீழே வைத்தாள். தனது முந்தியால் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு தலையில் இருந்த சும்மாடைப் பிரித்தார். வயது எழுபது இருக்கும். ஒற்றை நாடி
சரீரம். நெற்றியில் ஒற்றைக் கோடாக திருநாம சின்னம். பார்வையில் அசாத்திய ஒளி. அவளைக் கண்ட யாவரும் ஒரு தெய்வீகத்தை உணர்ந்தார்கள். ஆகவே அவளைப் பேச விட்டார்கள். அவள் தொடர்ந்தாள்.

‘‘இந்த ஊர் தாடாள பெருமாளை எல்லாரும் மறந்துட்டாங்க. அவர் கோயிலும் மறைஞ்சி போச்சி. அப்போ என் முன்னோர்கள் அந்தப் பெருமாளோட உற்சவ விக்கிரகத்தை வழி வழியா பராமரிச்சு வந்தாங்க. அந்த வகைல இத்தனை நாளா உங்க எல்லார் சார்பாகவும் இவரை நான் பார்த்துக்கிட்டேன். ஆனா, நேத்தி என் கனவுல பெருமாள் வந்தார். ‘நாளைக்கு திருமங்கை ஆழ்வார், சம்பந்தரோட வாதம் செய்யப் போறார். அவர் கிட்ட என்னை விட்டுடு. என்னைப் பார்த்தாதான் அவர் பாடுவாரு’னு சொன்னாரு.

நானும் அவர் சொன்ன மாரியே அவரை இந்த தவிட்டுப் பானைல வைச்சி இங்க கொண்டு வந்துட்டேன். பூஜை நேரம் போக மத்த நேரம் எல்லாம் இவரை நான் இந்த தவிட்டுப் பானைலதான் வைச்சிருப்பேன். இன்னிக்கும் அப்படியே கொண்டு வந்துட்டேன். இனிமே இவர் ஆழ்வாரோட பொறுப்பு!’’பேசி முடித்த மூதாட்டியின் குரலில் ஒரு பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷமும், பிரிவாற்றாமையும் சேர்ந்து ஒலித்தது.
அதைக் கேட்ட கூட்டம் மவுனம் சாதித்தது.

‘‘ம்... நல்லா இருக்கு உங்க நாடகம். இந்த ஆழ்வார் ஜெயிக்க இன்னும் என்ன என்ன நாடகம் ஆடப் போறீங்க?’’ என்று கொக்கறித்தான் சம்பந்தரின் தலைமை மாணவன். ஆடவிட்டு பின் அடக்குவோம், என்று சம்பந்தரும் மவுனமாக இருந்தார். நடந்தவற்றை திருமங்கை ஆழ்வாரிடம் தெரிவித்தான் அவரது தலைமை மெய்க் காப்பாளன்: அவரது தியானத்தைக் கலைத்துவிட்டுத்தான்.

விஷயம் அறிந்த ஆழ்வாரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தன. சட்டென தன் இரண்டு கைகளையும் நீட்டினார். தவழ்ந்து தன்னை நோக்கி வரும் குழந்தையை வாரியணைக்கும் தாயின் வாஞ்சை அதில் தெரிந்தது. ‘‘வெண்ணைத் தாழி கண்ணா வா வா! தவிட்டுப் பானை மணிவண்ணா வா! வா!’’ பக்தியால் விழிநீர் தாரை தாரையாக வழிய, பொங்கும் வாஞ்சையோடு அழைத்தார்.

அவர் அழைத்ததுதான் தாமதம். அந்த தவிட்டுப் பானையை மூடியிருந்த துணி அசைய ஆரம்பித்தது. உள்ளிருந்து யாரோ அதை அசைக்கிறார்கள் என்று நன்றாக அது உணர்த்தியது. அசைத்த வேகத்தில் மெல்ல அந்த துணியை பானையோடு பிடித்துக் கட்டியிருந்த கயிறின் பிடி தளர்ந்து, துணி விலகி பானை திறந்தது.

நொடியில் பானையிலிருந்து ஓர் உருவம் துள்ளிக் குதித்தது. அதற்கு சொல்லி வைத்தாற்போல நான்கு கைகள். சங்கும் சக்கரமும் அதை அணிசெய்தன. இடையில் மஞ்சள் பட்டு மின்ன, மார்பில் கவுஸ்துப மணியும், வைஜயந்தி மாலையும் அசைய, காலில் கட்டிய தண்டையணி, வெண்டையணி, கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு முதலிய அணிகள் ஜங்கார ஒலி எழுப்ப, தாடாளப் பெருமாள் ஓடோடி வந்து திருமங்கை மன்னன் மடியில் பரம கம்பீரமாக அமர்ந்து சிலையாக நொடியில் சமைந்து போனான்.

சில நொடிகளில் நடந்து விட்ட இந்த சம்பவத்தை நம்பமுடியாமல் அங்கிருந்த சைவர்களும் வைணவர்களும் பிரமித்துப் போய் நின்றார்கள்.
‘‘மாய வித்தை காட்டுகிறான் இவன். நம்ப வேண்டாம்!’’ என்ற சைவர்களின் கூக்குரலைக் கேட்டுதான் பலருக்கு சுயநினைவே வந்தது.
சம்பந்தர் முகத்திலும், ஆழ்வார் முகத்திலும் அதே ஏளனப் புன்னகை. உலகிற்கு நல்ல புத்தி அருள இந்த இருவரும், வாது புரிய ஆரம்பித்தார்கள்.
‘‘சொல்லுங்கள் ஆளுடை அடிகளே! உமையின் முலைப் பால் உண்ட மா மதலையே! நான் என்ன பாட வேண்டும்?’’ கம்பீரமாகக் கேட்டார் திருமங்கை ஆழ்வார்.

அதைக் கேட்டு சம்பந்தர் மர்மப் புன்னகை பூத்தார்: ‘‘சீர்காழி குறளைப் பாடும் நாலு கவி வித்தகரே!’’
வாது புரியாமலேயே ஆழ்வாரை நாலு கவி வித்தகர் என்று சொல்லி விட்டார் அந்த ஞானக் குழந்தை.
அவரது சொல்லின் பின் இருக்கும் மர்மத்தை ஆழ்வார் நொடியில் உணர்ந்தார். சற்றும் தாமதிக்காமல் வெண்கல மணிக் குரலில் பாட ஆரம்பித்தார்:

‘‘ஒரு குறள் ஆய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும்
ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியை
சிறையில் வைத்த
தடாளன் தாள்
அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்முகனும்
வேள்வி ஐந்தும் அங்கங்கள்
அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா
வளமும் சிறக்கும் காழி
சீராம விண்ணகரே சேர்மின் நீரே...’’

- என்று ஆழ்வார் பாடி முடித்ததுதான் தாமதம், ‘‘வென்றுவிட்டீர் ஆழ்வாரே, எம்மை வென்று விட்டீர்!’’ என்றபடி எழுந்து நின்று சம்பந்தர் கைகுவித்து ஆழ்வாருக்கு தண்டனிட்டார். அதைக் கண்ட சைவர்களின் கண்கள் சிவந்தன. ‘‘ஓய் ஆழ்வாரே! இவர் பாடச் சொன்னது இரண்டடி குறள் வெண்பாவை. நீர் பெரிய விருத்தமாக ஏதோ பாடி இந்த குழந்தையை ஏமாற்றி விட்டீர்! அவரும் ஏமாந்து விட்டார். ஆனால், நாங்கள் அப்படி இல்லை...’’ என்று கர்ஜித்தார்கள். அவை நடுவில் குருவான சம்பந்தரை, குழந்தை என்று அவமதித்து மீண்டும் தாங்கள் மதி இழந்துவிட்டதைக் காட்டினார்கள்.

இது எதையும் சம்பந்தர் சட்டை செய்யவே இல்லை. ‘‘சுவாமி நீங்களே விளக்கம் தந்துவிடுங்கள்!’’ கை குவித்தபடியே ஆழ்வாரை வேண்டினார்.
அவரது கூப்பிய கரங்களை வாஞ்சையோடு விலக்கிய படி ஆழ்வார் பதில் தந்தார்: ‘‘சீர்காழி குறளைப் பாடுங்கள் என்றார் சம்பந்தமூர்த்தி நாயனார். அதற்கு இரண்டு பொருள். ஒன்று சீர்காழியைப் பற்றி குறள் வெண்பா பாடு என்பது. மற்றொன்று, சீர்காழியில் கோயில் கொண்ட குறளனை, முன்பு வாமனனாக, குள்ளனாக வந்து, வையம் அளந்து நின்ற பரம்பொருளைப் பாடுங்கள் என்பது.

தீவிர வைணவன் நான், அந்த மாயனைத் தவிர யாரையும் புகழவும், பாடவும் மாட்டேன். என்னை, சீர்காழி நகரை பாடச் சொல்லி சம்பந்தர் சொன்னால் நான் செய்ய மாட்டேன் என்று அவர் நன்கு அறிவார். ஆகவே,அவர் குறள் என்று குறிப்பால் உணர்த்தியது குறள் வெண்பாவை இல்லை. இந்தக் குறளனை!’’ தன் கையில் இருந்த தாடாளனை சுட்டிக் காட்டி சொன்னார் ஆழ்வார்.

‘‘நான் மறைத்துச் சொன்ன பொருளை நொடியில் உணர்ந்ததால் இவர் வென்று விட்டார் என்று நான் அறிவித்தேன்...’’ ஆழ்வார் விட்டதை சம்பந்தர் முடித்தார். தலை குனிந்து நின்றார்கள் ஆணவம் கொண்ட அவரது சீடர்கள். அதைக் கண்ட சம்பந்தர் மன நிறைவு அடைந்தார்.
பின் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்: ‘‘இனி நீர் நாலு கவி பெருமான் என்று அழைக்கப்படுவீர். என்னை வென்றதன் அடையாளமாக இதோ இந்த வேலை வைத்துக் கொள்ளுங்கள்...’’ என்றபடி நவரத்தினம் பதித்த தங்க வேலை ஆழ்வாருக்கு தந்தார் சம்பந்தர்.
அதைப் பெற்றுக் கொண்டு சம்பந்தரை மார்போடு அணைத்தார் ஆழ்வார்: ‘‘வென்று விட்டோம் சுவாமி! ஆணவம் ஒழிந்தது...’’ என்று சம்பந்தர் காதில் அவர் கிசுகிசுத்தார். அவரும் ஆமோதிப்பாக சிரத்தை அசைத்தார்.

‘‘இப்படி பெருமாளே தொலைஞ்சு போனப்பவும் உண்மையான பக்தியோடு அவரை சரண்புகுந்தார் ஆழ்வார். அவருக்காக மறைஞ்சிருந்த பெருமாள் ஓடோடி வந்தார். அதனாலதான் உன் மகளைத் திருப்பி தரச் சொல்லி அவரை வேண்டிக்க சொன்னேன்...’’ தழுதழுத்தபடி சொன்னார் நாகராஜன்.
தங்களை மறந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த அனைவரும்.‘‘Unbelievable...’’ மடியில் இருந்த பவித்ராவை அணைத்தபடி தன்னை மீறி சொன்னாள் பத்மினி.

‘‘மேல சொல்லுங்க தாத்தா...’’ என நாகராஜனைப் பார்த்துக் கேட்டாள் பவித்ரா.‘‘தாத்தா சொல்லாம விட்டத நீயே புரிஞ்சுக்கணும் பவித்ரா... அந்த தாடாள பெருமான்தானே ஆழ்வாரை வாதத்துல ஜெயிக்க வைச்சார்..! அதுமாதிரி தன்னை வணங்கற எல்லாரையும், எல்லா போட்டிகள்லயும் அவர் ஜெயிக்க வைப்பார்! இதைத்தான் தாத்தா சொல்ல வர்றார்...’’ தன் கணவர் நாகராஜன் சார்பாக சொன்னாள் ஆனந்தவல்லி.

‘‘எல்லாம் சரி... தாடாள பெருமான் இன்னொரு முறை காணாமப் போனார்னு சொன்னீங்களே... அதைப்பத்தி சொல்லுங்க...’’ அதுவரை அமைதியாக இருந்த கண்ணன், ஆர்வம் தாங்காமல் கேட்டான். நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்