முகம் மறுமுகம்- பாக்ஸிங் ரெஸ்டாரண்ட்டில் அசத்தும் பெசன்ட் ரவி!



சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை கடந்துவிட்டார் ரஃப் அண்ட் டஃப் பெசன்ட் ரவி. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை முரட்டு வில்லன், அடியாள், ஃபைட்டர், ரவுடி, காமெடியன் என தன் ஓங்குதாங்கான உயரத்திற்கேற்ப தேடி வரும் கேரக்டர்களில் எல்லாம் அடித்து நொறுக்கி அப்ளாஸ் அள்ளியவர் இவர். கார்த்திக்கின் ‘லக்கி மேனி’ல் சோலோ ஃபைட்டாக தமிழுக்கு வந்தவர் ஷங்கரின் ‘முதல்வனி’ல் அர்ஜுனுடன் மோதும் சீனில் கவனம் ஈர்த்தார்.

இப்போது இந்தி முதல் பெங்காலி வரை நடித்துக் கொண்டிருக்கும் ரவி, பாடிபில்டிங் மற்றும் பாக்ஸிங்கில் கில்லாடி கிங். தமிழ்நாடு பாக்ஸிங் அசோசியேஷனின் துணைத் தலைவராகவும் அசத்துகிறார். தொழிலதிபராகவும் புன்னகைக்கிறார்.
பெசன்ட் நகரில் இவர் நடத்தி வரும் ‘செஃப் அட்ரியான்ஸ் கிரேட் வால்’ சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுக்கு சூர்யாவில் இருந்து ப்ரியா ஆனந்த் வரை நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் ரெகுலர் கஸ்டமர்ஸ். ‘‘ஒரு காலத்துல பாக்ஸிங்னாலே அது ரவுடிஸம் கேம்னு எண்ணம் இருந்தது. மூக்கை உடைச்சிடுவாங்க, முகத்தை பெயர்த்திடுவாங்கனு சொல்லி இதை விளையாடவே பயப்படுவாங்க.

ஆனா, இப்ப பாக்ஸிங் ஹெல்த்தியான ஸ்போர்ட்ஸ்! கத்துக்க வர்றவங்களும் ரொம்ப தெளிவா இருக்காங்க. அப்ப இருக்கற பாக்ஸிங்கிற்கும் இப்ப உள்ள பாக்ஸிங்கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. ரூல்ஸ் எல்லாம் நிறையவே மாறியிருக்கு. ஒருத்தரை நீங்க அடிக்கணும் என்பதை விட, ஒருத்தர் உங்கள அடிக்க வந்தால் அவர்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதற்கு இந்த பாக்ஸிங் உதவும்.

இப்ப ஐடில ஒர்க் பண்ற பலரும் பாக்ஸிங்கை விரும்பறாங்க. பாக்ஸிங் தெரிஞ்சா, நமக்குனு ஒரு ஸ்டைல் இருக்கும். நடிகர்கள்ல பிரபு சாருக்கு பாக்ஸிங் தெரியும். அவரது படங்கள்ல வர்ற ஃபைட்டை கவனிச்சா அவருக்குனு தனி ஸ்ட்ரோக் இருக்கறது புரியும். எனக்கும் சினிமால இந்த பாக்ஸிங் கைகொடுக்குது. ‘பூலோகம்’ல பாக்ஸரா வருவேன். இதை கத்துக்கிட்டு சினிமால ஃபைட் பண்ணினா, ஒரு பன்ச் பண்ணும் போது ஃபினிஷிங் நல்லா வரும். கைக்கு அவ்ளோ வலு சேர்க்கும்...’’ பாக்ஸிங் ப்ராக்டீஸுக்கு நடுவே, மென்மையாக பேசும் பெசன்ட் ரவி, ஆரம்பகாலங்களில் பைக் மெக்கானிக்காக இருந்தவர்.  

‘‘பெசன்ட் நகர் ஏரியால மெக்கானிக் ரவினாதான் என்னைத் தெரியும். எல்லாரும் சினிமா சான்ஸ் தேடி கோடம்பாக்கம் போவாங்க. ஆனா, கோலிவுட்டே எங்க பெசன்ட் நகரைத் தேடி வரும்!எங்க ஏரியாவுல நடக்கற எல்லா சினிமா படப்பிடிப்புகளுக்கும் நான் எதாவது ஓர் உதவி பண்ணிடுவேன். அப்பவெல்லாம் இந்திப் பட ஷூட்டிங், இங்க நிறைய நடக்கும். தமிழுக்கு வர்றதுக்கு முன்னாடியே... அதாவது நடிப்பு, சினிமான்னா என்னானு தெரியறதுக்கு முன்னாடியே... இந்தில நடிக்க ஆரம்பிச்சிட்டேன்!

மிதுன் சக்ரவர்த்தி, ஜாக்கி செராஃப்னு பலர் கூட சோலோ ஃபைட் பண்ணியிருக்கேன். ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸி’ல் நல்ல பெயர் கிடைச்சது. இப்பகூட ‘தபாங் 3’ பண்ணியிருக்கேன்.பூர்வீகம் வடசென்னை ராயபுரம்னாலும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெசன்ட் நகர்லதான். முழுப்பெயர் ரவிக்குமார். பைக் மெக்கானிக் ஆகத்தான் என் கரியர் ஆரம்பிச்சது. அப்பா அரசு உத்தியோகம்னாலும், எனக்கு கவர்மென்ட் வேலைல ஈடுபாடு இல்ல. வீட்ல எங்க அப்பா ‘படி... படி’னு சொல்வார். ‘விளையாடு... விளையாடு’னு சொல்வார்.

ஆனா, என்ன படிக்கணும்... என்ன விளையாடணும்னு கேட்டா, அவருக்கு சரியா சொல்லத் தெரியாது. இப்ப மாதிரி வாய்ப்பு வசதிகள் அப்ப இல்ல.
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம். அப்பவும் ஹைட் அண்ட் வெயிட்டா இருப்பேன். என்னுடைய உடலமைப்புக்கேத்த ‘கேமா’ பாடிபில்டிங் செட் ஆச்சு. எங்க ஏரியாவில் இருந்த பவர் ஜிம்ல தவம் கிடப்பேன். ஆணழகனுக்கான பாடிபில்டிங் வரை ஒர்க் அவுட் பண்ணினேன்.
அதன்பிறகும் ஃபிட்னஸ்ல என்னோட தேடல் இருந்தது. மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்க விரும்பினேன்.

நண்பர்கள் பலரும் குங்ஃபூ கிளாஸ் போனாங்க. ஆனா, எனக்கு பாக்ஸிங் மேல லவ். இது எப்படி... ஏன் வந்துச்சுனு கேட்டா என்கிட்ட பதில் இல்ல. ஆனா, பாக்ஸிங் மேல அவ்வளவு ஈடுபாடு. இப்ப பாக்ஸிங் கத்துக்கறது ஈஸி. ஆனா, இருபது வருஷங்களுக்கு முன்னாடி, ஒருத்தர்கிட்ட போய் பாக்ஸிங் கத்துக்கறது அவ்ளோ ஈஸியா கிடையாது. தனிப்பட்ட ஆர்வத்தால கஷ்டத்தைப் பார்க்காம பாக்ஸிங் கத்துக்கிட்டேன்.

பாக்ஸிங் கிளாஸ்ல என்னை பார்க்கறவங்க, ‘நீங்க பொன்னம்பலம் மாதிரி இருக்கீங்க... நீங்களும் சினிமால நடிக்கறீங்களா’னு விசாரிப்பாங்க! இதுவே சினிமா ஆசையை எனக்குள்ளயும் விதைச்சது...’’ சிரிக்கும் பெசன்ட் ரவி, பாடி பில்டிங், பாக்ஸிங் தனக்குத் தெரிந்திருந்தாலும் முறைப்படி சினிமா ஃபைட்டும் கற்க வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

‘‘பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட போய் சினிமாட்டிக் ஃபைட்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து படங்கள் தேடி வர, கன்னடம், மலையாளம், தெலுங்குனு பிசியாகிட்டேன். எல்லா லாங்குவேஜிலும் நடிக்கறதுல தனி சந்தோஷமிருக்கு. இதுவரை 250 படங்களுக்கு மேல பண்ணிட்டேன். ரொம்ப பெரிய ரோல்களா இல்லேனாலும் கூட, எல்லா படங்கள்லயும் இருக்கறேன் என்பதே ஒரு சந்தோஷம்தான்...’’ பூரிக்கும் ரவியின் பேச்சு, பிசினஸ் பக்கம் திரும்பியது.

‘‘ஒரே இடத்துல தேங்காம நதி போல ஓடிட்டிருக்க ரொம்ப பிடிக்கும். ‘அடுத்து என்ன’ என்கிற ஒரு தேடல் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும்.
என் மைத்துனர் பாஸ்கர், வீட்டு உபயோகப் பொருட்களின் டிஸ்ட்ரிபியூஷன்ல ரொம்ப ஸ்டிராங்கான ஆள். அவர் ஐடியா கொடுக்க, ‘ரோஷன் எண்டர்பிரைஸஸ்’னு ஒரு டிஸ்ட்ரிபியூஷன் ஆரம்பிச்சு, பெரிய பிராண்ட்ஸின் டிவி. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்னு ஹோம் அப்ளையன்ஸஸ் டிஸ்ட்ரிபியூஷன்ல இறங்கினேன்.

பதினைஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச விஷயம், இப்பவும் சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு. ஃப்ரீ டைம் கிடைக்கிறப்ப ரோஷன் பக்கம் கவனம் செலுத்துவேன்.ஒருநாள் என்னோட பால்ய நண்பன் அட்ரினை சந்திச்சேன். அவர் சைனீஸ் ஃபுட்ல அசத்துறசெஃப்பா அமெரிக்கா பக்கம் ஒரு தீவுல தனி ஆளா கலக்கிட்டிருந்தார். நானும் நல்ல foodie. குறிப்பா, சைனீஸ் ஃபுட் ரொம்ப பிடிக்கும்.

அட்ரினை ஒருநாள் சந்திச்சப்ப ‘நாம ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்போமா’னு கேட்டேன். அவருக்கும் அதுல சந்தோஷம். எனக்கு ரொம்பவும் பிடிச்ச பெசன்ட் நகர் ஏரியாலயே ‘செஃப் அட்ரியன் கிரேட் வால்’னு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சேன். எங்களோடதுல டயட் ஃபுட்ஸ் ரொம்ப ஸ்பெஷல். சூர்யா சார், சீதா மேடம், ரேகா மேடம், ப்ரியா ஆனந்த், யோகிபாபுனு பலரும் என் ரெஸ்டாரண்ட் வந்திருக்காங்க. சமீபத்துல ஷங்கர் சாருக்கு ஒரு டிஷ் கொண்டு போய் கொடுத்துட்டு வந்தேன். அவரும் குட்னு சர்டிபிகேட் கொடுத்தார்.

நண்பர் அட்ரின் ஃபுட் குவாலிட்டியை பார்த்துக்கறார். சினிமா ஸ்டார்ஸ் பலருக்கும் ரெஸ்டாரண்ட் நடத்தணும்னு ஆசை இருக்கு. அவங்க எல்லாருமே என்கிட்ட ஆர்வமா கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. ஃபுட்டும் நல்லா இருக்கறதால, பிரபலங்கள் தொடர்ந்து ரெஸ்டாரண்ட் தேடி வர்றாங்க...’’ என குஷியானவர், பாக்ஸிங்கில் கோச் ஆகவும் புன்னகைக்கிறார்.

‘‘சினிமா, பிசினஸ்னு பிசியா இருந்தாலும் என்னை சந்தோஷப்படுத்துறது பாடிபில்டிங்கும், பாக்ஸிங்கும்தான். இந்த ஃபிட்னஸ் இருக்கறதால எப்பவும் எனர்ஜியா இருக்க முடியுது. தமிழ்நாடு பாக்ஸிங் அசோசிேயஷன்ல துணைத்தலைவராவும் இருக்கேன். சங்கத்தின் சார்பில் சமீபத்துல கூட ‘மெட்ரோ டிராஃபி’னு ஒரு பாக்ஸிங் டோர்னமெண்ட் நடத்தினோம். நல்ல வரவேற்பு.

சினிமாவில் நான் இருக்கறதால என்னால பாக்ஸிங் போட்டிகள்ல பங்கேற்க முடியாது. அது பெரிய ரிஸ்க். ஏன்னா, நடிகனுக்கு முகம் முக்கியம். போட்டிகள்ல கலந்துக்கிட்டா உடல் இழப்புகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். என்னுடைய இழப்பு சினிமாவில் இருந்தால் இன்னும் சந்தோஷமா உணர்வேன்!

இப்ப பாடிபில்டிங்கிலும் ஃபிட்னஸ் விஷயங்களைத்தான் ஃபாலோ பண்றேன். என்னோட டிரெயினர் முரளி மோசஸ் எப்பவும் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். புரொஃபஷனல் பாடிபில்டிங் அவ்ளோ ஈஸியான விஷயம் கிடையாது. அதுக்கு இன்னும் உழைக்கணும்.  அதைப்போல பாக்ஸிங்ல கிக்ஸ் பிடிக்கும். டைம் கிடைக்கும் போது கோச் ஆகவும் மாறி பலருக்கு ஃபிட்னஸ் டிரெயினிங்
ப்ளஸ் கைடா இருக்கேன்.

சினிமால சின்னச் சின்ன கேரக்டர்ஸ்லதான் வந்துட்டிருக்கேன். அதுல வருத்தமே இல்ல. இப்ப ஒரு படத்துல லீட் ரோலும் பண்றேன். 26 வருஷமா சினிமால பயணிக்கறேன் என்பதே சாதனைதானே!சென்னைல மிகப்பெரிய, மிகச்சிறந்த ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஒண்ணு தொடங்கணும், இது என் கனவு. எதிர்கால லட்சியமும் இதுதான்...’’ சொல்லும்போதே பெசன்ட் ரவியின் கண்கள் ஒளிர்கின்றன!

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்