நான்...ஹாக்கி பாஸ்கரன்



அப்பாவைப் பொறுத்தவரை நான் பிறந்தது 1976ல். ஒலிம்பிக் சென்று திரும்பிய வருடம் அது. என் அப்பா எனக்கு ஒரு டாலர் அன்பளிப்பாக கொடுத்தார். தேசியக் கொடி, குடும்பப் பெயரான கரன் வார்த்தை, மற்றும் ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் சின்னம்.

இதோ இப்போதும் என் கழுத்தில் இருக்கும் மிகப்பெரிய விருது அதுதான்.ரொம்ப ஸ்பெஷலாக அந்த டாலரை எனக்காக செய்து வாங்கினார். தன் மகனில் ஒருவனை ஒலிம்பியன் ஆக்குவதுதான் அவருடைய குறிக்கோள். செய்து காட்டிவிட்டார்.ஆரணிதான் சொந்த ஊர்.
1950, ஆகஸ்ட் 17ல் திருவண்ணாமலையில் பிறந்தேன். அம்மாவை டெலிவரிக்காக கொண்டு செல்கையில் காரிலேயே பிறந்து விட்டேன்.அப்பா வாசுதேவன். அம்மா பத்மாவதி. அப்பா இராணுவத்தில் இரண்டு வருடங்கள் இருந்தார். பிறகு ஹெச்.ஏ.எல் கம்பெனியில் வேலை. அப்பா பெங்களூர், அம்மா திருவண்ணாமலை.

எங்களை பஞ்சபாண்டவர்கள் என்பார்கள். ஐந்து சகோதரர்கள். கரன் பிரதர்ஸ். ஐவர் பெயருமே கரன் என முடியும். பிரபாகரன் 15 முறை தேசிய அளவில் மேட்ச் விளையாடியவர். எங்கள் ஐவரிலும் அதிகளவில் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியது பெரிய அண்ணன்தான்.

ராஜசேகரன் ஹாக்கி, கால்பந்து, தடகளம் என தடதடத்தவர். பிறகு நான். அடுத்து ஜெயசேகரன், வசீகரன். ஐவருமே தேசிய - உலக அளவிலான ஹாக்கி வீரர்கள்.

அம்மாவின் வீடே கரன் வில்லாஸ் என்றுதான் இருக்கும். அப்பாவுக்கு சூரியனை ரொம்பப் பிடிக்கும். அவரைப் போன்ற ஜென்டில்மேனைப் பார்த்ததே இல்லை. குழந்தை வளர்ப்பில் அவ்வளவு திட்டம், நேர்த்தி. காலை 5.30க்கு எங்கள் அனைவரையும் எழுப்பி குளிக்க வைத்து பயிற்சிக்காக மைதானத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்.படித்தது சென்னை வெஸ்லி ஆண்கள் பள்ளியில்.
இங்கு கல்வியுடன் தொழில் கல்வி, தோட்ட வேலை, தையல், கார்ப்பென்ட்ரி, நெசவு, என்.எஸ்.எஸ், விளையாட்டு... என சகலத்தையும் வாரம்தோறும் அட்டவணை போட்டு செய்ய வைப்பார்கள்.

பள்ளி முடிந்ததும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் மைதானத்துக்கு வந்துவிடுவார்கள். எங்களுடன் ஹாக்கி, கிரிக்கெட், கபடி, பேஸ்பால்... என விளையாடுவார்கள்.

ஹாக்கி மேட்ச் அன்று பள்ளியே அரைநாள்தான். அந்தளவுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தினார்கள். போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும் ஆட்டம் முடிந்ததும் எங்கள் பி.டி. மாஸ்டர் அனைவருக்கும் சாப்பாடு வாங்கித் தருவார். பள்ளி கொடுக்கும் தலைக்கு 54 பைசாவை விட அதிகம் செலவு செய்வார்.

எட்டு வீடுகள் கொண்ட காம்பவுண்டில் நாங்கள் வசித்தோம். பள்ளிக்கு அருகிலேயே வீடு. எட்டு வீட்டில் இருந்தவர்களும் மதம், மொழி, இனத்தால் வேறுபட்டவர்கள். ஆனாலும் ஒற்றுமையாக, உறவினர்களாகப் பழகினோம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒய்எம்சிஏ மைதானத்திலேயே பழியாகக் கிடப்போம்.

சீனியர்களுக்கு அவ்வளவு மரியாதை அளிப்போம். அவர்கள் பின்னாலேயே சுற்றுவோம். அவர்களும் நிதானமாக எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
எங்கள் பள்ளி அளவுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்கூலைப் பார்க்கவே முடியாது. அதனாலேயே என்னை 8வது ஃபெயில் ஆக்கினார்கள்! உயர்நிலைக்கு நான் சென்றுவிட்டால் ஜூனியர் டீம் பலமிழந்துவிடும் என்பதால் என் அப்பாவின் ஒப்புதலுடன் தேர்வில் என்னை தோல்வி அடைய வைத்தார்கள்!

பதினோரு வயதில் ஹாக்கி மீது காதல் வந்தது. முழுமையாக ஹாக்கி பக்கம் வந்துவிட்டேன். ஜூனியர் ஸ்கூல் மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்தேன். எப்போதும் பயிற்சி. அப்பாவும் அம்மாவும் முழுமையாக ஊக்கப்படுத்தினார்கள்.ஹாக்கி என்றால் ஹாக்கி மட்டுமில்லை. கூடவே ஓட்டம், கால்பந்து எல்லாமே. இரவு 9 மணிக்கு ரேடியோவில் ஆங்கிலச் செய்தி. அதைக் கேட்டுவிட்டு 9.30க்கு உறங்கச் சென்றுவிடுவோம்.
அப்பாவின் கட்டளை.

கடவுள் நம்பிக்கையும் எங்களுக்கு அதிகம் உண்டு. பைபிள், சண்டே கிளாஸ் என அதையும் விடுவதில்லை.நினைத்து நினைத்துப் பேசும் அளவுக்கு அற்புதமான குழந்தைப் பருவம் எனக்கு அமைந்தது. வெற்றிக்கான ஏக்கமோ தோல்விக்கான பயமோ மனதில் எப்பொழுதும் இருந்ததில்லை. செல்வோம், விளையாடுவோம், சிறந்ததைக் கொடுப்போம். அவ்வளவுதான். இதனாலேயே மாநில, தேசிய போட்டிகளுக்கான தேர்வின்போது படபடப்பு ஏற்பட்டதே இல்லை. தன்னம்பிக்கைதான் அதிகம் இருந்தது; இருக்கிறது.

இன்று போல் அன்று குழந்தை வளர்ப்பு கமர்ஷியலாக இல்லை. பாஸ் செய்தால் போதும் என்றுதான் அன்றைய பெற்றோர்கள் சொன்னார்கள். இன்றுபோல் மதிப்பெண் இலக்கை எல்லாம் வைக்கவில்லை.லயோலாவில் கல்லூரி. அந்த வயதுக்குரிய அனைத்தையும் அனுபவித்தேன். எம்ஜிஆர் படத்துக்கு முதல் நாளே சென்றோம். கரும்பு லாரியை துரத்திச் சென்று கரும்பை இழுத்து கடித்தோம். இதற்காக அடியும் வாங்கி இருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து செய்தோம்!

கல்லூரியில் உடன் படித்த 27 மாணவர்களும் இன்றும் தொடர்பில் இருக்கிறோம்! போலவே வெஸ்லி ஸ்கூல் அலம்னியிலும் பயணிக்கிறோம்!இன்று கிரிக்கெட் எப்படியோ அப்படி அன்று ஹாக்கி அப்படியொரு பைத்தியமான விளையாட்டு! நாடு முழுக்க அதற்கான தேர்வுகள், போட்டிகள் என களை கட்டிய நேரம்.உடனே அப்படி பிரபலமாக இருந்த ஹாக்கி இன்று ஏன் பின்னோக்கிச் சென்றது... பின்னால் இருந்த கிரிக்கெட் எப்படி முன்னால் வந்தது என்ற கேள்வி எழும்.

இதற்கான விடை சிம்பிள். ஒவ்வொரு விளையாட்டும் கமர்ஷியலாக வளர்ச்சி பெற அந்தத் துறை சார்ந்த மக்கள் ஏதோ ஒரு வழியில் போராடியிருக்கிறார்கள். அந்தப் போராட்டம் என்ன என்று புரிந்து கொண்டாலே இந்தக் கேள்விக்கான விடை கிடைத்துவிடும். ஏன்... இப்போது கபடி பிரபலமாகி வருகிறதே... எப்படி?

ஆக, பக்கத்து வீட்டைப் பார்த்து பொறாமைப்படாமல் நம் வீட்டின் முன்னேற்றத்துக்கு திட்டமிட்டாலே போதும்!

சரி... ஹாக்கிக்கு வருகிறேன். பெரிய பெரிய ஹாக்கி வீரர்கள் எங்களுக்கு கோச்சாக அமைந்தார்கள். ஜெய்ப்பூர், பெங்களூர்... என வரிசையாக தேசியப் போட்டிகள்.

பெங்களூர் போட்டி முடிந்து பஸ்ஸில் தாம்பரம் திரும்பி அங்கிருந்து வீட்டுக்கு நடந்தே வந்தேன். வந்ததுமே ‘குவாலியரில் உனக்கு செலக்‌ஷன் இருக்கு...’ என்றார் அப்பா. ‘நேஷனல் முடிச்சுட்டு போறேன்பா’ என்றேன். ‘இதை முடிச்சா நீ ஆஸ்திரேலியா போவ’ என்றார் அப்பா.ரயிலுக்கு டிக்கெட் எடுத்து தயாராக வைத்திருந்தார். பெர்த் கிடைக்கவில்லை.

உட்கார்ந்து கொண்டே சென்றேன். இப்போது நினைத்தாலும் கண்கலங்கிவிடும். பாதியிலேயே என்னை இறக்கிவிட்டார்கள். ஏன், எங்கே என எதுவும் தெரியவில்லை. மொழி புரியாத ஊர். விஜயவாடாவுக்கு ரயில் பின்னால் இருக்கும் பம்பரில் அமர்ந்தபடி சென்றேன். நாக்பூரில் காய்ந்த பூரிதான் சாப்பாடு. குவாலியர் நெருங்குகையில் கடுமையான குளிர். ரயில் தாமதமானதால் ஒரு மணி நேரம் தாமதமாகப் போய்ச் சேர்ந்தேன்.

குவாலியர் லட்சுமிபாய் யுனிவர்சிட்டியில் செலக்‌ஷன். செல்வதற்குள் முடிந்திருந்தது. 15 நிமிடங்கள் கொடுங்கள் என்று கேட்டேன். அளித்தார்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இன்னொரு செட் ஆட முடியுமா என்று கேட்டார்கள்.ஷூ இல்லாமல் அப்படியே விளையாடினேன்.
டாப் 20ல் என் பெயரும் இடம்பெற்றது. பத்து நாட்கள் பயிற்சி. பின்னர் அங்கிருந்து பாட்டியாலா கேம்ப். அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. ஒரு வாரம் பொறுத்து என் கல்லூரிக்கு மட்டும் நான் தேர்வாகி இருப்பதாகக் கடிதம் சென்றது.

உடனே அப்பா ரூ.300 அனுப்பினார். அப்போது அவருக்கு சம்பளமே ரூ.150தான்!இந்தி தெரியாது. தமிழ், ஆங்கிலத்தில் தண்ணீர் கேட்டால் தரமாட்டார்கள். ‘பானி’ என்றால்தான் கிடைக்கும். மெல்ல மெல்ல இந்தி கற்றுக் கொண்டேன்.அடுத்து ஆஸ்திரேலியா போட்டி. 25 நாட்கள். கல்லூரியே என்னைக் கொண்டாடியது. அப்பாவும் அம்மாவும் தில்லி வந்து என்னை வழியனுப்பினார்கள். கல்லூரி சார்பாக பணம் கொடுத்தார்கள். வந்து பரீட்சை எழுதச் சொன்னார்கள்!

ஆசியப் போட்டி, உலகக்கோப்பை, ஒலிம்பிக்... என அடுத்தடுத்து பங்கேற்று பத்ம, அர்ஜுனா விருதுகள் வரை வாங்கினேன்.ஆஸ்திரேலியாதான் சர்வதேச போட்டிகளுக்கு முதன்முதலில் எனக்கு அடித்தளமிட்டது. லயோலாவில் படிக்கும்போதே உலகக் கோப்பைக்காக விளையாடினேன். ‘பிளேனில் சென்ற பையன்’ என என்னை அழைத்த வரலாறு எல்லாம் உண்டு!

1976ல் ஒலிம்பிக். திரும்பி வந்தபோதுதான் அப்பா எனக்கு இந்த டாலரைக் கொடுத்தார்.1978ல் உலகக் கோப்பை. தோல்வி அடைந்தோம். நாடே எங்களைத் திட்டி சாபமிட்டது. வடக்கில் இருந்த வீரர்களின் வீடுகள் மேல் எல்லாம் கல்லெறிந்தார்கள். உருவ பொம்மையை எரித்தார்கள்.

ரசிகர்களைக் குறை சொல்ல மாட்டேன். ஏனெனில் கொண்டாட வேண்டிய தருணத்தில் எங்களைக் கொண்டாடுவதும் அவர்கள்தான். வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கிருக்கும் இந்தியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டுவந்து தருவார்கள்.

அவ்வளவு ஏன்... இங்கு ஐ.கே.குஜ்ரால் அவர்கள் தன் வீட்டில் இருந்து கேரியரில் சுடச்சுட உணவு கொண்டு வந்து கொடுத்திருக்கிறாரே...
ஹாக்கி டீமில் மெல்ல சீனியரானேன். பிறகு கேப்டன். மிகப்பெரிய சவால். டீமில் இருந்தவர்களில் என்னைத் தவிர மற்றவர்கள் விமானத்தை அருகில் இருந்து கூட பார்க்காதவர்கள். எல்லோரும் ஜூனியர் லெவல்.

இவர்களை அழைத்துக் கொண்டுதான் ஒலிம்பிக் செல்ல வேண்டும். ஸ்பெயின் மாதிரியான நாட்டைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஃபுட்டேஜ் வைத்து பயிற்சி எடுப்பவர்கள். ஆனாலும் நம் டீம் மீது நம்பிக்கை இருந்தது. காலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பயிற்சி எடுத்தோம்.
மாஸ்கோ ஒலிம்பிக். 16 பேர். எல்லோருமே பல்கலைக்கழக மாணவர்கள். அன்று இருந்த பத்திரிகைகள் அனைத்தும் ‘பேபிஸ் ஆஃப் இந்தியா?’ என தலைப்பிட்டன!

உண்மையில் இந்த மேட்ச் ஸ்பெஷல். காரணம், ஸ்பெயின் கேப்டன் ஜான் அகமது, ஹாட்ரிக் கோல் போட்டார். ஆனாலும் அவர்கள் அணி வெற்றி
பெறவில்லை. 4 - 3 என்ற கணக்கில் வென்றோம். ஒரு போட்டியில் நாங்கள் 7 கோல்கள்! இந்திய டீமில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பலர் வாய்விட்டு அழுதார்கள். சிலர் அப்படியே உறைந்து நின்றார்கள்! ஜெயித்து இந்திய தேசியக் கொடி விண்ணில் பறக்கிறது! நாடே எங்களைத் தலையில் தூக்கி வைத்தது!

விளையாட்டே வாழ்க்கையாக இருந்ததால் தாமதமாக திருமணம் நடந்தது. புரொஃபசரை மணக்க வேண்டும் என விரும்பினேன். அதன்படியே டாக்டர் விஜி என்கிற விஜயலட்சுமியை வீட்டில் பேசி முடித்தார்கள்.என் கோ-பிரதர் அவர்கள் வீட்டில் என் போட்டோவைத்தரும்போது, ‘நான் மட்டும் பெண்ணா பிறந்திருந்தா இவரையே கட்டியிருப்பேன்!’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் வீட்டில் விஜியிடம், ‘ரொம்ப ஆசைய வளர்த்துக்காத. அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாலே பெரிய விஷயம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். பிடித்திருந்தது. திருமணம் செய்து கொண்டோம்.மகன், மகள், குடும்பம்... என அனைத்தையும் கையில் வைத்துத் தாங்குவது என் மனைவிதான். ஒரு கட்டத்தில் என்னை கோச் ஆக மாற்றியதும் அவர்தான்.

மகன் லக்ஷ்மண்கரன், ஹாக்கி வீரராக இருக்கிறார். மகள் காவ்யா, மருத்துவர். எங்கள் வீட்டின் பெயரே ‘ஹாக்கி ஹவுஸ்’தான்.தயவுசெய்து உங்கள் குழந்தைகள் எது செய்தாலும், எடுத்ததுமே ‘உன்னால் முடியாது...’ என்று சொல்லாதீர்கள். மாறாக ‘உன்னால் முடியும்’ என்று அழுத்தமாகச் சொல்லுங்கள்.அப்படி என் பெற்றோர் சொன்னதால்தான் இன்று ‘நான்’ இருக்கிறேன்!  

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்