நிஜக் கதை!



கடந்த வாரம் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான ‘சபாக்’ படம்தான். காரணம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் நிஜக் கதை இது!  

1990ம் ஆண்டு தில்லியில் பிறந்தவர் லட்சுமி. அழகும், லட்சணமும் பொருந்திய களையான முகம். அவர் பிறந்த நான்காவது நாளில் ஓர் அடைமழைக்காக பஸ் நிலையத்தில் தஞ்சமடைய வேண்டிய நிலை. அந்தளவிற்குக் குடும்பத்தை வறுமை வாட்டியிருக்கிறது. ‘‘அப்போதிலிருந்தே துரதிருஷ்டமும் பிரச்னைகளும் என்னை துரத்தத் ெதாடங்கிவிட்டன...’’ என வேதனையாகக் குறிப்பிடுகிறார் லட்சுமி!

2005ம் ஆண்டு அந்தக் கோர சம்பவம் நடந்தது. அப்போது லட்சுமிக்கு 15 வயது. தெற்கு தில்லியிலுள்ள கான் மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அவரை நயீம்கான் என்ற குட்டு என்கிற முப்பது வயது இளைஞன் தன்னைத் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். அவனின் ஒருதலைக் காதலைப் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு சென்று வந்தார் லட்சுமி.

அன்றும் நயீம்கான், ராக்கி என்ற பெண்ணுடன் வந்து வற்புறுத்தினான். அதை மறுக்கவே, கையில் வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசி அவரது முகத்தையும் உடலையும் சீர்குலைத்தான். ஏழு அறுவை சிகிச்சைகளுக்குப் பின் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது உடைந்து போனார். உருத்தெரியாமல் மாறியிருந்தார்.

2006ம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ரூபா என்ற பெண்ணுடன் சேர்ந்து உச்சநீதி மன்றத்தில் ஆசிட் விற்பனையை முறைப்படுத்த வேண்டுமென பொதுநல வழக்குத் தொடர்ந்தார். 2013ல் அதற்கான கட்டுப்பாடுகளை விதித்தது நீதிமன்றம்.

இதற்குள் வெவ்வேறு கோர்ஸ்களைப் படித்து வேலைக்குத் தயாரானார். ஆனால், அவரது முகத்தால் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன.
அவர் மீது ஆசிட் வீசிய குற்றவாளியான குட்டுவிற்கு பத்து ஆண்டுகளும், உடனிருந்த ராக்கிக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை கிடைத்தன.
இதற்கிடையே 2012ல் லட்சுமியின் தந்தை மாரடைப்பால் இறந்தார்.

தம்பியும் காசநோயால் பாதிக்கப்பட்டார். குடும்பச் சுமை தலைக்ேகறியது. அப்போது ‘சனாவ்’ ஃபவுண்டேஷனுடன் இணைந்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்து வந்தார் லட்சுமி. இந்நேரம் பத்திரிகையாளராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய அலோக் தீக்‌ஷித்
என்பவர் Stop Acid Attack அமைப்பைத் தொடங்கி ஆசிட் வீச்சுக்கெதிராக போராடி வந்தார். அவருடன் லட்சுமி கைகோர்க்க ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதலானது.

ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். பெரும்பாலான ஆசிட் வீச்சு சம்பவங்கள் திருமணம் செய்ய வற்புறுத்தி நடப்பதாலும், பெண்ணின் மனதைவிட அழகிற்கே முக்கியத்துவம் தருவதாலும் திருமணத்தை நிராகரித்தார் தீக்‌ஷித். இதற்கு லட்சுமியும் சம்மதித்தார்.

2014ல் உலகின் தைரியமான பெண்களுக்கான விருதை வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவின் மனைவியான மிச்சேல் ஒபாமா கையால் லட்சுமி பெற்றார்.
2015ல் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே லட்சுமியும், தீக்‌ஷித்தும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.

எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும், டிவி ஷோக்கள், விளம்பரத் தூதர் பணி மூலம் பணம் சம்பாதித்திருந்தாலும், அவரைப் பற்றி திரைப்
படம் வந்தாலும்,இன்றுவரை ஒரு நிரந்தர வருமானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் லட்சுமி!

பி.கே.