ரத்த மகுடம்-88



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

தன்னை நோக்கி வாளைச் சுழற்ற முற்பட்ட பெண்ணைக் கண்டு சிவகாமி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தாள்.ஆச்சர்யத்துக்குக் காரணம், அந்தப் பெண்ணை சிவகாமி நன்றாகவே அறிவாள். அவளது வயதுதான். கொற்கைக்கு அப்பால் தென்பாண்டி நாட்டில் வசித்து வரும் அவளை பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாள்.

கூர்மையான நாசியும், எடுப்பான தாடைகளும், மிரட்சியுடன் கூடிய நயனங்களையும் தாண்டி எந்நேரமும் மயிலின் கழுத்து நிறத்தில் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பதுதான் அவளது அடையாளம். இதோ, இப்போதும் அதே வண்ண ஆடையைத்தான் அணிந்திருக்கிறாள். நிலவின் ஒளியிலும் உப்பரிகையின் தூணில் எரிந்து கொண்டிருந்த தீப் பந்தத்தின் வெளிச்சத்திலும் அந்த அடையாளம் துலக்கமாகவே தெரிகிறது.

அது என்னவோ... இந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வண்ண ஆடையில்தான் காட்சி அளிக்கிறாள். எப்படி சிவப்பு நிற உடையிலேயே, தான் வலம் வருகிறோமோ அப்படி என தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் சிவகாமி.என்றாலும் சிவகாமி ஆச்சர்யப்பட்டதற்குக் காரணம், இந்த புற அடையாளம் மட்டுமல்ல... அகத்தின் மாற்றமும்தான்.ஆம். தலைகீழாக அந்தப் பெண் மாறியிருந்தாள்.

சிவகாமி அவளைச் சந்திக்க நேர்ந்தபொழுதெல்லாம் ஒன்றைக் கவனித்திருக்கிறாள். அதுதான் அந்தப் பெண்ணின் கண்களில் வழியும் மிரட்சி. சின்னச் சின்ன ஓசைக்கும் அச்சப்படுவாள். தன்னையும் அறியாமல் அருகில் இருப்பவர்களின் கரங்களைப் பற்றிக் கொள்வாள். ஒருமுறை முயல் ஒன்று பாய்ந்து ஓடியபோது சிவகாமியின் கைகளையும் அப்படிப் பற்றி இருக்கிறாள். அப்போது தன் கரங்களுக்குள் நடுங்கிய இப்பெண்ணின் விரல்களை ஆதரவாக, தான் பற்றி அவளுக்கு ஆறுதல் சொன்னதை இப்போது நினைத்துக் கொண்டாள்.

ஒருபோதும் இந்தப் பெண்ணை தனியாக சிவகாமி பார்த்ததேயில்லை. வேறு இரு பெண்கள் சூழத்தான் வலம் வருவாள். அவர்களுக்கும் இந்தப் பெண்ணின் வயதுதான் இருக்கும். இவளைப் போலவே அவ்விருவர் நயனங்களிலும் மிரட்சி தாண்டவமாடும். என்றாலும் அவ்விருவரும் இந்தப் பெண்ணைப் போல் மயிலின் கழுத்து வண்ணத்தில் ஆடைகளை அணிய மாட்டார்கள். மாறாக மெல்லிய காவி வண்ணத்தில்தான் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பார்கள்.

அதாவது சிவகாமி, பார்த்த சமயத்தில் எல்லாம், சந்திக்க நேர்ந்த தருணங்களில் எல்லாம் இந்தப் பெண் அவ்விருவருடனும்தான் காட்சி தந்தாள். ஆடைகளின் வண்ணங்கள் ஒருபோதும் மூவரிடமும் மாறியதில்லை.ஒரே வயதுதான் என்பதால் அம்மூவருடனும் சிவகாமி பேசி சிரித்திருக்கிறாள். அப்போது ஒரு விஷயத்தை கவனித்தாள். மூவருமே பூரண நிலவிலும் வெளியே வர அஞ்சினார்கள். சூரிய அஸ்தமனத்துக்கு முன்பே தத்தம் இல்லங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். யாராவது சற்றே குரலை உயர்த்தினாலும் அம்மூவரின் கண்களும் கலங்கிவிடும். உதடுகளும் நாசிகளும் ஒருசேர துடிக்கத் தொடங்கிவிடும்.

அப்படிப்பட்ட குணாம்சமுள்ள மூவரில் ஒருத்தியான இந்தப் பெண், மதுரைக்கு வந்திருக்கிறாள்... அதுவும் தன் இரு தோழிகளும் இல்லாமல்!
ஆச்சர்யமளித்த இந்த புள்ளி, சிவகாமிக்குள் அதிர்ச்சியாக விஸ்வரூபம் எடுத்ததற்குக் காரணம், எப்போதும் போல் இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன் இருப்பிடத்தில் அடங்கி, முடங்கி, ஒடுங்கி இருக்காமல் இந்தப் பெண் தன்னந்தனியாக வணிகர் வீதியில் இருந்த மாளிகை ஒன்றின் உப்பரிகைக்கு வந்து நின்றதுதான்.

அதுவும் ‘உங்களை மாதிரி என்றுதான் நாங்கள் தைரியசாலியாக மாறுவோமோ...’ என இமைகள் படபடக்க தன்னைப் பார்த்து எப்போதும் வியப்பவள் இப்போது தன்னை நோக்கியே வாளைச் சுழற்ற முற்படுகிறாள் என்றால் அதிர்ச்சி அடையத்தானே வேண்டும்!

கரிகாலன் உட்பட சாளுக்கிய, பல்லவ, பாண்டிய பேரரசுகள், தான் யார்... தனது பூர்வீகம் என்ன... உண்மையில், தான் எந்த தேசத்தின் ஒற்றர் என குழம்பித் தவித்து வரும் நிலையில்... அப்படி முப்பேரரசுகளையும் குழப்பத்தில், தான் ஆழ்த்தி வரும் சூழலில்... தனது சித்தத்தையே இந்தப் பெண் கலங்க வைக்கிறாளே...

ஆமாம்... எல்லோரும் தன்னைக் கேட்கும் அதே கேள்வியை, தானும் இப்பெண்ணை நோக்கி கேட்க வேண்டியதுதான்!
யார் இவள்..? எந்த தேசத்தின் ஒற்றர் இவள்..?

தனக்குள் கேட்டுக்கொண்ட சிவகாமி, அதிர்ச்சி விலகாமல் ‘‘நீயா..? நீ... எப்படி... இங்கு..?’’ என்று வினவினாள்.
கேட்ட சிவகாமிக்கு அந்தப் பெண் உதட்டைப் பிரித்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக தன் கரத்தில் இருந்த வாளால் விடையளிக்க முற்பட்டாள்.

சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. முன்னால் இருந்த பெண்ணை ஊன்றிக் கவனித்தாள்.கண்களில் மிரட்சிக்கு பதில் தீர்க்கம். வீச்சில் கைதேர்ந்தவள் என்பதைப் போல் வாளை இறுக, வலுவாகவே பற்றியிருந்தாள். எனில், பயந்த சுபாவம் கொண்டவளாக இவள் தோற்றம் தந்தது நாடகமே! யாருக்கு விசுவாசமாக இருக்க எல்லோரையும் இதுநாள் வரை ஏமாற்றியிருக்கிறாள்..? ஒட்டிப் பிறந்த இரட்டை வாழையாக எப்போதும் இவளுடன் வலம் வரும் அந்த இரு காவி வண்ண உடைகள் அணியும் பெண்கள் எங்கே..? அவர்களும் இவளைப் போலவே இன்னொரு பக்கத்தைக் கொண்டவர்களா அல்லது தன்னைப் போலவே இவளிடம் ஏமாந்தவர்களா..?

சிவகாமி யோசித்தாள். அதை அறுத்து எறிந்தது முன்னால் இருந்த பெண்ணின் வாள் வீச்சு.தன்னிரு கரங்களாலும் வாளைப் பிடித்து தன் சிரசுக்கு மேல் உயர்த்தினாள். அதே வேகத்தில் சிவகாமியை நோக்கி இறக்கினாள்.சிவகாமி இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாள் சண்டையிலும், அசுவங்களைப் பிரித்து பயிற்சி அளிப்பதிலும் செலவிட்டிருந்ததால் அநிச்சையாகவே அவள் உடல் வாள் சண்டைக்கு தயாரானது. இறங்கிய வாளைத் தடுத்து நிறுத்தியது.

சரியான வேகம். எனில், அல்லும்பகலும் இந்தப் பெண் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவள். தான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முற்படவில்லை. அதாவது பேச்சுக் கொடுக்கவோ உரையாடலில் பொழுதைக் கழிக்கவோ இவள் விரும்பவில்லை. தன்னை வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் எனச் செயல்படுகிறாள்.

இங்கு... இந்த இடத்துக்கு, தான் வருவோம் என அறிந்து காத்திருக்கிறாள். அப்படியானால் மதுரை மாளிகையில் இருக்கும் சுவர் பொறிகளை அறிந்தவள். ஒருவேளை பாண்டிய சேனாதிபதி மாறவர்மனுடனும் சாளுக்கிய உபசேனாதிபதியுடனும், தான் பேசும்போது இந்தப் பெண்ணும் அங்கு மறைந்து இருந்தாளா..? அதாவது கரிகாலனுடன் நிழலில்... அவரை ஒன்றியபடி... பரந்த அவரது முதுகுக்குப் பின்னால் நின்றிருப்பாளோ... உரசியிருப்பாளோ...

சட்டென சிவகாமியின் கண்கள் சிவந்தன. உக்கிரத்துடன் அந்தப் பெண்ணின் வாள் வீச்சை சமாளிக்கத் தயாரானாள்.
அவள் இறக்கிய வாளைத் தடுத்து, தான் அப்பால் தள்ளியதுமே இரண்டடி பின்னோக்கிச் சென்றாள்தான். ஆனால், மூன்றடியாக அதை அதிகரிக்கவில்லை! பாதங்களை அழுத்தமாக ஊன்றி அப்படியே நின்றவள், மீண்டும் வாளை நீட்டினாள்.

சிவகாமி கவனித்தது இதை மட்டுமல்ல... அவளது பாதங்களின் அசைவுகளையும்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் பார்வை தனது கருவிழிகளையே ஊடுருவிக் கொண்டிருந்தது. அதாவது பார்வையால் தன்னைக் கட்டிப் போட்டபடி தாக்குதலை நிகழ்த்த ஆயத்தமாகிறாளாம்!
முகத்தின் அசைவை வைத்தே உடலின் இயக்கத்தை அறியும் திறன் தனக்கு உண்டு என்பதை பாவம் இவள் அறியவில்லை! பெண்ணே! நீ வாள் பயிற்சி பெற்ற பள்ளியின் ஆசான் நான்! அதுவும் கரிகாலரின் உள்வட்டத்தைச் சேர்ந்தவளாக நீ இருக்கலாம் என்ற பொறி எனக்குள் விழுந்த பிறகு... ம்ஹும்... உன்னை விடுவது என் மனதுக்கு நானே செய்யும் துரோகம்!

மனம் எரிய... கண்கள் கனலைக் கக்க... உடல் அதிர... அப்பெண்ணை வீழ்த்தும் நடவடிக்கையில் சிவகாமி இறங்கினாள்!
‘‘வா  மாறவர்மா... மாளிகைக்குள் திடீரென சுவர் ஏறி இறங்கியதா..?’’

சர்வசாதாரணமாகத்தான் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.ஆனால், அந்த வாக்கியம் அசாதாரணமான அமைதியை அந்த இடத்தில் ஏற்படுத்தியது. அதிர்ச்சியின் உச்சிக்கே பாண்டிய சேனாதிபதியான மாறவர்மனும், சாளுக்கிய உபசேனாதிபதியும் சென்றார்கள். சிலையாக நின்றார்கள்.
உண்மையில் அவ்விருவரும் சிந்திக்கும் ஆற்றலை இழந்து நாழிகை ஆகியிருந்தன. வணிகர் வீதியில் நடந்தவை அனைத்தும் அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது என்றால்... அரண்மனைக்குள் அவர்கள் நுழைந்தது முதல் நடைபெறும் சம்பவங்கள் மேலும் மேலும் அவர்களை ஸ்தம்பிக்கச் செய்தன.

அரண்மனைக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தபோது காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் தலை வணங்கி தங்கள் சேனாதிபதியை வரவேற்றார்கள். ஓடோடி வந்தான் காவல் தலைவன். ‘‘மூன்றாம் ஜாமத்தில் மன்னரை எழுப்புவது தவறுதான். ஆனால், வேறுவழியில்லை... உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும்...’’ என்று காவல் தலைவனிடம் சொல்ல பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன், வாயைத் திறந்தார்.

ஆனால், அதற்குள் அவனே, ‘‘வாருங்கள் சேனாதிபதி... உங்களுக்காகத்தான் நம் மாமன்னர் காத்திருக்கிறார்... நீங்கள் வந்ததுமே உப்பரிகைக்கு வரச் சொன்னார்...’’ அழைத்தபடி சென்ற காவல் தலைவனை அதிர்ச்சி நீங்காமல் இருவரும் பின்தொடர்ந்தார்கள்.உப்பரிகையை நெருங்கியதும் இருவருக்கும் தலைவணங்கிவிட்டு அங்கேயே காவல் தலைவன் நின்றுவிட்டான்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இருவரும் அவனைக் கடந்து உப்பரிகைக்குச் சென்றார்கள்.

கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டிய மன்னரை வணங்கினார்கள்.இதனை அடுத்துதான் ‘‘என்ன விஷயம் மாறவர்மா..?’’ என்று கேட்காமல், தாங்கள் சொல்ல வந்த சுவர் ரகசியத்தை தனக்கு முன்பே தெரியும் என்பதுபோல் மன்னர் சொன்னார்.

‘‘ஆம் மன்னா...’’ பாண்டிய சேனாதிபதி மென்று விழுங்கினார்.
‘‘சரி... சிவகாமி என்ன சொன்னாள்..?’’
‘‘சோழ இளவரசன் எதற்காக மாறுவேடத்தில் மதுரைக்கு
வந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றாள்...’’
‘‘அவளுக்கு எதுவும் தெரியாதா..?’’
‘‘அறிய முடியவில்லை என்று
தான் சொன்னாள் மன்னா...’’
‘‘இப்போது அவள் எங்கே..?’’
‘‘இறங்கிய சுவருக்கு அப்பால் சென்றுவிட்டாள்...’’
‘‘அங்கு கரிகாலனும் சீனனும் மறைந்திருப்பதாக அவள் சொன்னாளா..?’’
‘‘....’’
அரிகேசரி மாறவர்மர் புன்னகைத்தார். ‘‘நல்லது... இருவரும் சென்று ஓய்வெடுங்கள்... நாளை பகலில் சந்திக்கலாம்...’’ சொல்லி
விட்டு தனது சயன அறையை நோக்கி நிதானமாக நடந்தார் பாண்டிய மன்னர்!

தன் வாள் வீச்சை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்துவிட்ட அந்தப் பெண்ணை சிவகாமி அலட்சியமாகப் பார்த்தாள்.
உதட்டைப் பிதுக்கியபடி அவளைக் கடந்து செல்ல சிவகாமி முற்பட்டபோது -
எங்கிருந்தோ காவி உடை அணிந்த ஒரு பெண் வாளுடன் குதித்தாள்.
அடுத்த கணம் இன்னொரு காவி உடை அணிந்த பெண் வாளுடன் தோன்றினாள். முந்தையவளின் தோள் மீது ஏறினாள்.
அவ்விருவரையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி!

(தொடரும்)


கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்