சங்க இலக்கியமாகும் கன்னிப் பொங்கல்



இலக்கியத்தின் நிகழ்வுகள் திருவிழாக்களிலும் கோயில் கலாசாரத்திலும் கலந்திருக்கின்றன.ஏற்கெனவே நாடகமாக எழுதப்பட்டிருக்கும் புராண நிகழ்வுகள் உண்டு.
அவற்றை நடித்துக்காட்டுவார்கள். ஆனால், ஓர் இலக்கிய உத்தியாக மட்டுமே இருப்பதை இரண்டு நாள் திருவிழாவாக விரித்து நிகத்துவது கன்னிப் பொங்கலிலும் அதற்கு மறுநாளும் சில பெருமாள் கோயில்களில் உண்டு!
காதலர்களுக்கு இடையில் கிட்டத்தட்ட பொய்க் கோபமாகவே வரும் ஊடலும், அதைத் தொடர்ந்து தவறாமல் வரும் அவர்களின் கூடலும் பழைய சங்க இலக்கிய உத்தி.

இதையும் தாண்டிச் சென்று, கன்னிப் பொங்கலில் இந்த உத்தியை வளர்த்து நிகழ்த்துகிறார்கள். இதனை மட்டையடித் திருவிழா, சேர்த்தித் திருவிழா என்பார்கள்.காதலன் இதர மாதருடன் களித்துவிட்டுத் திரும்புவதாகக் காதலி கோபப்பட்டு, கதவைச் சாத்தித் தாழிட்டுக்கொள்வாள்.

இயன்ற வகையில் இரவெல்லாம் கெஞ்சி, தான் தவறு செய்யவில்லை என்று காதலன் சத்தியம் செய்தபிறகு, கோபம் தணிந்து இருவரும் சேர்ந்துகொள்வார்கள்.
ஊடலும் கூடலுமான இந்த உத்தியைப் பரிபாடல் போன்ற சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் பக்தி இலக்கியங்களிலும் கற்பனைக்கு எட்டிய புதுப் புது நிகழ்வுகளாகப் புனைந்திருக்கிறார்கள்.

காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில் இந்த உத்தியை ஒட்டி ஓர் அருமையான சங்கதி. உமையின் ஊடலைத் தணிப்பதற்கு செம்பஞ்சுக் குழம்பால் சிவந்த அவரது பாதத்தில் தலை வைத்துக் கெஞ்சியதால் சிவனுக்குச் சடைமுடி செவ்வானமாகச் சிவந்தது என்பதாக ஒரு பாட்டு.

ஊடலில் தோற்றவரே வென்றார் என்றும் அப்படித் தோற்பதால் வரும் உவகைபற்றியும் குறள் உண்டு. பரிபாடலில் ஒரு சங்கதி இந்தக் கோபம் அளவுக்கு அதிகமாகப் போவது பற்றியது.

கன்னிப் பொங்கலான மூன்றாம் நாள், தாயாரிடம் சொல்லிக்கொள்ளாமல் பெருமாள் வெளியே சென்றுவிடுவார். புறப்பாட்டின்போது எப்போதுமே தாயார் சன்னதியின் முன்பு நின்று ஆரத்தி கண்டபிறகுதான் வெளியே செல்வார். அன்று மட்டும் ஆரத்தி இருக்காது.

அரசன் கொலுவில் இருப்பதுபோல் அலங்கரித்துக்கொண்டு, பல்லக்கில் அமர்ந்து ஊர் முழுவதும் சுற்றிவிட்டு, பொழுது சாயும் நேரம் கோயிலுக்குத் திரும்புவார். அதே பல்லக்கில் பெருமாள் அறியாமல் எதிர்ப்புறம் பார்த்து அமர்ந்துகொண்டு சத்யபாமா உளவு பார்த்துக்கொண்டே வருவார்.

கோயிலுக்குத் திரும்பியதும் பழைய அலங்காரத்தைக் கலைத்து, விஜயராகவ நாயக்கர் போன்று கொண்டை போட்டு பெருமாளுக்குப் புது அலங்காரம் செய்வார்கள். அப்போது ருக்மணியும் வெளியே வந்து, சத்தியபாமாவுடன் சேர்ந்துகொண்டு, தனித்தனி படிச்சட்டத்தில் பட்டத்து ராணியான செங்கமலத் தாயாரிடம் சென்று கோபிகளுடன் பெருமாள் களித்துவிட்டு வந்ததைக் காதோடு காதாகச் சொல்லிவிடுவார்கள். கலகம் மூண்டுவிடும்.

உடனே, பெருமாள் உள்ளே போக முடியாதபடி நிலைக்கதவைச் சாத்திவிடுவார்கள். அப்போது பெருமாளைச் சுமந்துவரும் பாதம் தாங்கிகளின் கால்பக்கம் வாழை மட்டைகளால் அடி அடியென்று அடிப்பார்கள். பெருமாள் திரும்பி ஓடுவார். மீண்டும் வரும்போது மறுபடியும் அடி விழும். இப்படி அவர் வரவும் ஓடவுமாக இருக்கவும் மூன்றுமுறை அடியும் விழுந்துகொண்டே இருக்கும்.

பெருமாளுக்கும் தாயாருக்குமாக ஒரு நீண்ட வாக்குவாதம் நடக்கும். இது மணிப்பிரவாளத்திலும், தமிழ் பிரபந்தங்களிலும் இருக்கும். தான், பக்தர்
களுக்கும் ரிஷிகளுக்கும் அருள் செய்யச் சென்றதாகப் பெருமாள்கெஞ்சுவார். பற்குறியும் நகக்குறியும் எப்படி வந்தன? அணிந்திருந்த சந்தனம் ஏன் கலைந்தது? கஸ்தூரித் திலகம் எப்படி அழிந்தது? பூணூலும் மஞ்சளானதே, அது எப்படி? ஆடையில் எப்படிக் கறைபடிந்தது? இப்படியெல்லாம் தாயார் விடாமல் கேட்பார். பட்டாச்சாரியார் கேள்விகளையும், பெருமாளின் பதிலையும் விளக்க விளக்கக் கூடியிருப்பவர்கள் சிரித்து மாளாது. வேட்டைக்குச் சென்றதால் மிருகங்களால் விளைந்த காயம் என்று பெருமாள் பதில் சொல்வார்.

காட்டில் திரிந்ததால் முள் கிழித்தது என்பார். அலைச்சலின் வியர்வையில் திலகம் அழிந்தது என்பார். எதுவும் எடுபடாது. தான் கடலில் இறங்கிச் சத்தியம் செய்வேன் என்பார். குடப்பாம்பில் கை நுழைத்துச் சொல்கிறேன் என்பார். துஷ்டதேவதைகள் மேல் சத்தியம் செய்கிறேன், அக்னியில் புகுந்து சொல்கிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்ப்பார்.

எல்லாவற்றுக்கும் தாயார் சரியான பதில் வைத்திருப்பார்: “அக்னி உங்களுக்கு ஒரு திவலை, அது உங்களைத் தண்டிக்குமா? பாம்போ பாற்கடலில் உங்களுக்கு மிதவை. நீங்கள் நின்றால் உங்களுக்கு மிதியடி, சென்றாலோ உங்களுக்குக் குடை, அமர்ந்தாலோ அது உங்களுக்குச் சிம்மாசனம். விழுங்கி உலகம் முழுவதையும் உங்கள் வயிற்றில் வைத்துக்கொண்டீர்கள். இவையெல்லாமா உங்களைத் தண்டிக்கும்?”

சங்க இலக்கியத்தில் பழக்கமுள்ளவர்களுக்குப் பரிபாடலில் நிகழும் வார்த்தையாடல் நினைவுக்கு வரும். இணுக்கு இணுக்காக மடைமாற்று நிகழ்த்தியிருக்கும் கற்பனையை வியக்காமல் இருக்க முடியுமா? பெருங்கோயில் உட்பட ஒரு நகரமே இந்த இலக்கிய உத்தியின் களமாக அன்று மாறியிருக்கும்.

இறுதியில், ஆழ்வார்கள் முன்பாகச் சத்தியம் செய்கிறேன் என்று பெருமாள் சொன்னபிறகுதான் தாயாரின் ஊடல் தணியும். தொடர்ந்து முற்றவெளியில் மாலைமாற்று நடந்து இருவருமே தாயார் சன்னதிக்குச் சென்றுவிடுவார்கள். இரவு பத்து மணிக்கு மேலாகி விடும்.

இந்தக் கூடலைத்தான் சேர்த்தி என்பார்கள். நான்காம் நாளான மறுநாள் காலையில் பெருமாளையும் தாயாரையும் ஒரே சிம்மாசனத்தில் தாயார் சன்னதியிலேயே காணலாம். வரும்போது இந்தத் தம்பதியருக்காகப் பாலில் சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி அன்பர்கள் கையோடு கொண்டுவருவார்கள்.

பெருமாள் தன்னுடைய இருப்பிடத்துக்குச் செல்வதற்குள் மாலை நேரமாகிவிடும். நேரம் போவது தெரியாமல் மாலை வரை பட்டத்து ராணியிடமே இருந்துவிட்டதற்கு பெருமாள் வெட்கப்படுவதாக ஒரு சடங்கு. தனது இடத்துக்குத் திரும்பும்போது யாரும் பார்க்காதபடி வெண் பட்டில் முக்காடு போட்டுக்கொண்டு செல்வார்.

அந்தப் பட்டாடை மஞ்சளும் குங்குமமுமாகக் கறை படிந்திருக்கும். சங்க இலக்கியத்தில் தலைவி ஆசை மிகுதியால் தன் நாணத்தை இழப்பதாக இருக்கும். இங்கே தோற்றும் வென்ற பெருமாள் நாணப்படுமாறு நடந்துவிடும். இலக்கிய உத்தியைச் சங்க இலக்கியம் விட்ட இடத்திலேயே சேர்த்தித் திருவிழா விட்டுவிடாது.

பெருமாளை நாணவைத்து அதை மேலும் வளர்த்துச் செல்லும்.தலைவியின் மானம் காரணமாக அளவுக்குள் நிற்காமல் போகும் ஊடலின் இசைகேட்டை இந்த உத்தி எப்படி வளர்த்திருக்கும்? சேக்கிழாரின் திருநீலகண்ட நாயனார் புராணத்தில் அதனைப் பார்க்கலாம்.

கணவன் தன்னைத் தீண்டக் கூடாது என்று நாயனாரின் மனைவி திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுவிடுகிறார். ஒருவரையொருவர் தீண்டாமலேயே அவர்கள் இளமை முழுதும் கழிந்தது.இன்றும் சில பெருமாள் கோயில்களில் பழமை மாறாமல் இந்த கன்னிப் பொங்கல் கடைப்பிடிக்கப்படுகிறது!  

என்.ஆனந்தி