அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் முதல் போட்டோகிராபி வரை 12 கலைகளை கற்பிக்கும் இளைஞர்கள்!



‘‘‘கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்...’னு அண்ணல் அம்பேத்கர் சொன்னார். அந்தக் கருத்தை எடுத்துக்கிட்டு, ஒண்ணு சேர்ந்து எங்களால முடிஞ்சளவு விளிம்புநிலைக் குழந்தைகளுக்குக் கற்பிச்சுட்டு இருக்கோம். இன்னும் நிறைய கனவுகள் இருக்கு. ஏராளமான விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கு. ஆர்வத்தோடு அதை நோக்கி பயணிக்கறோம் ப்ரோ…’’ உற்சாகமும், நம்பிக்கையும் ததும்பப் பேசுகிறார் ஆகாஷ்.

இளைஞர்களாலும், மாணவர்களாலும் இந்தச் சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என நினைப்பவர்களுக்கு ஆகாஷ் அண்ட் டீமின் ‘கற்பி’ அமைப்பு ஓர் ஆகச் சிறந்த உதாரணம். சென்னையைச் சேர்ந்த இந்த அமைப்பு நான்கு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ், சிலம்பம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளை நச்சென அளித்து வருகிறது. மட்டுமல்ல. மைம், ஸ்கிட், வீதி நாடகம் போன்ற கலை வடிவங்களின் வழியே சமூகப் பிரச்னைகளையும் மக்களிடம் எடுத்துரைக்கிறது.

சமீபத்தில், இக்குழுவினர் தாங்கள் பயிற்சி அளிக்கும் பள்ளியொன்றில் குழந்தைகளுக்குப் புகைப்படக்கலையைக் கற்றுக் கொடுத்து கண்காட்சியும் நடத்தி அசத்தியுள்ளனர். ‘‘கடந்த 2017ல் நானும், நண்பர் அப்சலும் சேர்ந்து இந்தக் குழுவை ஆரம்பிச்சோம். நானும் அவரும் தியேட்டர் அண்ட் ஆக்டிங்ல பயிற்சி பெற்றவங்க. அப்ப ஒரு ஸ்கூல்ல எங்களை பயிற்சி அளிக்கக் கூப்பிட்டாங்க. எங்க பயிற்சி அந்தக் குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘வாரா வாரம் வர்றீங்களாண்ணா’னு ஆர்வமா கேட்டாங்க. சரினு போனோம். அங்க சில குழந்தைகள் டான்ஸும், சிலர் ஸ்போக்கன் இங்கி
லீஷும் கத்துக்க ஆசைப்பட்டாங்க.

அப்ப அமைப்பைப் பத்தி எல்லாம் யோசிக்கல. எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் நல்லா டான்ஸ் ஆடுவான். ஒரு பொண்ணு நல்லா பாட்டுப் பாடுவா. அண்ணன் ஒருத்தர் இங்கிலீஷ்ல கலக்குவார். இவங்களை ஒருங்கிணைச்சு கோடம்பாக்கம் நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளில முதல்முதலா பயிற்சி வகுப்புகள ஆரம்பிச்சோம். அதுதான் ஆரம்பம். இன்னைக்கு ஒரு குழுவா வளர்ந்து நிற்கிறோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இக்குழுவைத் தொடங்கிய ஆகாஷ். பிபிஏ பட்டதாரியான இவர் இப்போது ஒரு நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டராக பணியாற்றுகிறார்.  

‘‘ஆரம்பத்துல நாலஞ்சு பேர்தான் இருந்தோம். அப்புறம், நண்பர்கள், அவங்க நண்பர்கள்னு ஒருத்தர் சொல்லி ஒருத்தரா நிறைய பேர் வந்து சேர்ந்தாங்க. இப்ப 90 பேர் வரை தன்னார்வலரா இருக்காங்க. இதுல 50க்கும் மேற்பட்டவங்க கல்லூரில படிக்கிற மாணவர்கள். சிலர் மட்டுமே வேலையில இருக்கோம். எல்லோருமே தனித்துவமானவங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு திறமை உண்டு...’’ என்கிற ஆகாஷ், சில தன்னார்வலர்களை அறிமுகப்படுத்தினார்:

‘‘சாண்டியாவும், கிரணும், வசந்தும், பிரசாத்தும் தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகள். சுபாஷும், ஹரியும் டான்ஸ் நல்லா பண்ணுவாங்க. கணேசனும், சிரிலும் போட்டோகிராபில பின்னியெடுப்பாங்க. பிரதீபாவும், சௌபாக்யலட்சுமியும் ஸ்போக்கன் இங்கிலீஷ் எடுப்பாங்க. இப்ப இங்க வந்தவங்களை மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கேன். இதுபோல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

பிறகு மெல்ல மெல்ல சாந்தோம், தி.நகர், சூளைமேடுனு அரசுப் பள்ளிகள்ல எங்க பயிற்சி வகுப்பு விரிஞ்சது. ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை வகுப்புகள் நடக்கும். இதுல ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே பயிற்சி கொடுக்கறோம்.
ஏன்னா, உயர்நிலை வகுப்பு குக்படிக்கிற குழந்தைகள் பொதுத் தேர்வுக்கு படிக்கணும்னு இதுல கலந்துக்குறதில்ல. 5ம் வகுப்புக்குக் கீழ் உள்ளவங்களை அவங்க பெற்றோர் சனிக்கிழமை அனுப்பறதில்ல. இப்ப 376 மாணவ - மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம்...’’ என ஆகாஷ் முடிக்க, தொடர்ந்தார் அருகிலிருந்து பிரதீபா:  

‘‘எங்க கற்பி அமைப்பைப் பொறுத்தவரை குழந்தைகள் எது வேணுமானாலும் கத்துக்கலாம். டான்ஸ், மியூசிக், டிராமா, மைம், கதை சொல்லல், பாவைக் கூத்து, சிலம்பம், பறையாட்டம், செஸ், கேரம், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், போட்டோகிராபினு பனிரெண்டு கலைப் பயிற்சிகள் நாங்க சொல்லிக் கொடுக்கறோம்.

இதுல குழந்தைகளுக்கு விருப்பம் இல்லாத பயிற்சிகளைக் கத்துக் கொடுக்கறதில்ல. சூளைமேடு பள்ளில சிலருக்கு தியேட்டர் பயிற்சி கத்துக்க விருப்பமில்லனு சொன்னாங்க. அதனால, ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தர்றோம்.

இப்படி ஒவ்வொரு பள்ளிக் குழந்தைக்கும் பிடிச்ச கலைப் பயிற்சியைக் கத்துக் கொடுக்கறோம். அவங்கள நாங்க ஒருபோதும் ஃபோர்ஸ் பண்றதில்ல. அடிப்படை ஆங்கிலம் இன்னைக்கு இருக்கிற சூழல்நிலைக்குத் தேவைங்கிறதால அதை மட்டும் கட்டாயம்னு சொல்றோம். அதனால, ஒரு மணிநேரம்
ஆங்கிலம் கத்துக்கிட்ட பிறகு அவங்களுக்கு பிடிச்ச பயிற்சியை எடுத்துக்கலாம்...’’ என பிரதீபா முடிக்க, தொடர்ந்தார் போட்டோகிராபி சொல்லித்தரும் சிரில்:    

‘‘கடந்த ஒரு வருஷமா சொல்லிக் கொடுத்ததை வச்சு ஏதாவது பண்ணலாம்னு நினைச்சோம். அதுக்கான முதல்படிதான் இப்ப நவபாரத்
பள்ளியில நாங்க நடத்தின போட்டோகிராபி கண்காட்சி. அங்க அஞ்சு பேர் போட்டோகிராபியில ஆர்வமா இருந்தாங்க. மொத்தமா நாற்பது நாட்கள் பயிற்சி கொடுத்தோம். பிறகு, கண்காட்சிக்காக நண்பர்கள்கிட்ட அஞ்சு கேமிரா வாங்கி பசங்ககிட்ட கொடுத்தேன். அவங்க ஏரியா உள்ளயே போட்டோஸ் எடுத்தாங்க. அதைக் காட்சிக்கு வச்சோம். சினிமா இயக்குநர்கள் கோபி நயினார், லெனின் பாரதி, சசி அதியன் எல்லாம் வந்து பாராட்டினாங்க.

இந்தக் கண்காட்சி நடத்த ரெண்டு நோக்கங்கள் இருந்துச்சு. முதல்ல, குழந்தைகளின் திறமையை வெளியுலகுக்குக் கொண்டு போகணும்னு நினைச்சோம். அடுத்து, சினிமா, முக்கிய மீடியாக்கள் எல்லாம் ஹவுஸிங் போர்டு, சேரி, குப்பம், காலனில இருக்கிறவங்கள ஒரு மாதிரியா காட்சிப்படுத்திக்கிட்டே இருக்குது. ஆனா, அந்த இடங்கள்ல வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமா இருக்குனு எங்களுக்குத் தெரியும். இந்த ஏற்றத்தாழ்வுகள மாத்தணும்னு நினைச்சோம்.

நாங்க பயிற்சி அளிக்கிற பகுதிகள் அந்த மாதிரியான இடங்கள்தான். இங்க படிக்கிற பசங்க பக்கத்துல இருக்கிற தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவங்க. அதனால, அவங்கள அங்கேயே போட்டோகிராபி எடுக்கச் சொன்னோம். எந்த ஏரியா அழுக்கு, கேவலம்னு சொல்றாங்களோ அந்த ஏரியா எவ்வளவு சுவாரஸ்யமானது, அழகானதுனு பார்க்க வச்சோம்...’’ புன்னகையுடன் சிரில் முடிக்க, தொடர்ந்தார் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பிரசாத்.
‘‘பள்ளியைத் தாண்டி இதே பெயர்ல ஒரு கலைக்குழுவும் நடத்திட்டு இருக்கோம். அதன்வழியா சுவர்கள்ல பெயிண்ட் பண்ணுவோம். நாங்க பயிற்சிகொடுக்கற பள்ளிகள்லயே நிறைய பெயிண்டிங் பண்ணியிருக்கோம்.

அடுத்து, கலைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தறோம். ஒரு மேடைப் பேச்சு பேசினா எவ்வளவு பேர்கிட்ட போகும்னு தெரியல. அதே ஒரு தெரு நாடகமோ, ஒரு மைமோ பண்ணினா மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகும். பெண்கள் மீதான ஆசிட் வீச்சு, ஒடுக்குமுறை மாதிரியான சமூகப் பிரச்னைகள எடுத்துகிட்டு பண்றோம்.

அரசுக்கு எதிர்ப்புனு இல்லாம சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் எங்க கலையைப் பயன்படுத்தறோம். அடுத்து, ஹாஸ்பிடல் கிளௌன்ஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது, கேன்சர், எச்ஐவியால பாதிக்கப்பட்டு வீதிகள்ல இருக்குற குழந்தைகளுக்கான கான்செப்ட் அது. எங்க தன்னார்வலர்களே கிெளளன்ஸ் மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு அவங்க உடல்வலி, மனவலிகளை மறக்குற மாதிரியான சந்ேதாஷத்தை ஏற்படுத்துவாங்க. அதுக்கான பயிற்சி இப்ப போயிட்டு இருக்கு...’’ என பிரசாத் முடிக்க, தொடர்ந்தார் ஆகாஷ்:

‘‘அடுத்த வருஷம் கலைப்பயிற்சியைத் தாண்டி குழந்தைகளுக்கு விளையாட்டும் சொல்லித் தரப் போறோம். அப்புறம், குழந்தைகளை வச்சு ஓர் இசைக் கச்சேரி நடத்தலாம்னு ஐடியா இருக்கு. இந்தக் கச்சேரியில குழந்தைகளே பாட்டுப்பாடி, வாத்தியங்கள் வாசிப்பாங்க.

இன்னொரு விஷயம்-  பொதுவா, கானான்னா பசங்க மட்டுமே பாடுவாங்கனு ஒரு கருத்து இருக்கு. அதனால, ஒரு பள்ளியில பெண்களை மட்டுமே மையமா கொண்டு ஒரு கானா குழு ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு. பிறகு, டான்ஸ் ஆடுற குழந்தைகள தனியா பிரிச்சு டிவி ஷோக்ளுக்கு தயார்படுத்தலாம்னு இருக்கோம். நாடக ஷோவும் பண்ணப் போறோம்.

இவங்க திறமைகளை வெளிக்கொண்டுவர எங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்யறோம். இதை எங்க கடமையா நினைக்கறோம்...’’ அழுத்தமாக ஆகாஷ் சொல்ல, அனைவரும் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்தார்கள்!