அறிவியல் கல்லூரியில் சேரவும் நுழைவுத்தேர்வு..?



கேள்விக்குறியாகும் ஏழை, நடுத்தர இளைஞர்களின் எதிர்காலம்

நீட் தேர்வு பிரச்னைகளுக்கே இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் வருமோ என்ற அச்சம் தில்லியில் வட்டமிடுகிறது. பீதியூட்டும் இந்த செய்திக்குப் பல்கலைக்கழக மானியக்குழு ‘நோ’ சொன்னாலும் இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை அறிய கல்வியாளர்களை சந்தித்துப் பேசினோம்.

‘‘காங்கிரஸ் காலத்திலிருந்தே இதுமாதிரியான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இவற்றைத்தான் பாஜக அரசு ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது.இந்தச் சிந்தனையின் அடிப்படையே மெரிட் எனும் திறன்தான். கல்லூரி போன்ற உயர் கல்வியில் திறனில்லாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் பொருத்தமான வேலை கிடைக்காது. இதனால் வேலையில்லாத திண்டாட்டம் ஏற்படும்.

இந்த வேலையில்லாத திண்டாட்டத்தைக் குறைக்க வேண்டுமென்றால் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை வடிகட்ட வேண்டும். இதுதான் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படை.திறன் என்பது வெறும் பாடத்திட்டத்தில் இல்லை. கல்வி என்பது படிப்படியாக முன்னேறுவது. ப்ளஸ் டூவில் சுமாரான மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் கல்லூரியில் சூப்பராக தேர்வாவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், கல்லூரிக்குப் போவதற்கு முன்பே ஒருவரை திறனில்லாதவர் என்று வடிகட்டுவது எந்த அடிப்படையில் சரியானதாக இருக்கும்? கல்லூரிப்படிப்பை கல்லூரித் தேர்வு மூலமே கணிக்க முடியும். அதை விட்டுவிட்டு நுழைவுத்தேர்வு மூலம் ஒருவரை திறனில்லாதவர் என்று முத்திரை குத்துவது கல்விக்கே குழிதோண்டும் செயல்...’’ என்று ஆரம்பித்த ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் நிறுவனரான பாடம் நாராயணன், இதுபோன்ற நுழைவுத்தேர்வு சிந்தனைகள் எந்த சூழ்நிலையில் சரியானதாக இருக்கும் என்ற விளக்கத்தையும் கொடுத்தார்:

‘‘அடிப்படைக் கல்வியில் கோளாறு இருப்பது உண்மை. ஆனால், அந்தக் கோளாறுகளை அப்படியே வைத்துக்கொண்டு இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளை ஒரு தீர்வாகக் கொண்டுவருவதுதான் பிரச்னை. இது இப்போது உள்ளதை மேலும் சிக்கலாக்கும்.

நமது பள்ளிக்கல்வி தாய்மொழி வழிக்கல்வியாக இருக்கும் பட்சத்தில்தான் நுழைவுத்தேர்வுகள் அர்த்தமுடையதாக இருக்கும். ‘நீட்’ போன்ற தேர்வுகூட ஒரு பிரச்னையாக இருக்காது. ஒரு காலத்தில் தமிழிலோ அல்லது தமிழிலும் ஆங்கிலத்திலுமோ படித்த மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தார்கள். காரணம், அவர்களது சிந்திக்கும் திறன்.

ஆனால், இன்று ஆங்கிலம் மட்டுமே படிக்கும் மாணவர்கள் சுயசிந்தனையே இல்லாமல் இருப்பதால்தான் எதையுமே யோசிக்கும் திறன் அற்று இருக்கிறார்கள். இவையெல்லாம் நுழைவுத்தேர்வில் பிரதிபலிக்கும்.

அடிப்படைகளைத் திருத்தாமல் அதற்கு மாற்றாக நுழைவுத்தேர்வுகளைக் கொண்டுவருவது அதிகபட்சமான மாணவர்களைத் திறனில்லாதவர்கள் என்னும் நிலைக்கு கொண்டுபோய்விடும்...’’ என நாராயணன் முடிக்க, கல்விச் செயற்பாட்டாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு, நுழைவுத்தேர்வுகளுக்கும் கல்விச்சந்தைக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினார்...

‘‘கல்வி கார்ப்பரேட் மயமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவமும், பொறியியல் படிப்பும் முன்னுரிமைகளை அனுபவிக்க, கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் அவற்றை போதிக்கும் கல்லூரிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. இந்தப் பேச்சு தேசிய புதிய கல்விக்கொள்கை வரைவிலேயே இருந்தது. ஆனால், பல மாநிலங்களும், கல்வியாளர்களும் இதை எதிர்க்கவே கொஞ்ச காலத்துக்கு கிடப்பில் இருந்தது. இதுதான் இன்றும் ஒரு பேச்சாக கல்விச்சாலைகளிலும் அரசியலிலும் உலா வருகிறது.

கற்றவைக்குத் தேர்வு என்பதுதான் திறனை சோதிப்பதற்கான முறை. ஆனால், கல்லூரியில் சேர்வதற்கு முன்பாகவே ஒரு மாணவனின் திறனை எப்படி மதிப்பிட முடியும்? ப்ளஸ் டூவிலேயே ஒரு மாணவன் கல்லூரிப் பாடங்களைப் படித்திருக்கவேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
இதுபோன்ற நுழைவுத்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால் இளங்கலை தமிழ் படிக்கக் கூட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்னும் நிலை எற்படும்.

உண்மையில் நுழைவுத்தேர்வுகள் கோச்சிங் கிளாஸ் மூலம் சிலரை பணம் சம்பாதிக்கத்தான் வழிவிடும். மீண்டும் வசதிபடைத்த மாணவர்கள்தான் கோச்சிங் கிளாஸ் மூலம் இதுபோன்ற தேர்வுகளில் ஜெயிக்கமுடியும்.

இது சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு எதிரானது. உண்மையாகவே மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்றால் ப்ளஸ் டூவிலேயே படிப்பு தொடர்புடைய நிறுவனங்களில் மாணவர்களை பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் மாணவர்களுக்கு உண்மையான திறன் வளரும்...’’ என்று முடித்தார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

டி.ரஞ்சித்