ரத்த மகுடம் -100



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘ஏன் இப்படி திகைத்து அதிர்ச்சியில் சிலையாக மாறியிருக்கிறாய் கரிகாலா..?’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்..? ராஜ தந்திரத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும் நீ செய்யும் காரியம் கத்தியின் மீது நடப்பதற்கு சமம்... சற்றே பிசகினாலும் நீ விசுவாசம் காட்டும் பல்லவர்களையும் அது பதம் பார்த்துவிடும்...’’‘‘மன்னா...’’

‘‘நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா என்று உன்னைப் பார்த்து நான் கேட்டது உன்னால் உருவாக்கப்பட்ட சூழலை உனக்கே புரிய வைக்கத்தான்...’’‘‘மன்னா...’’

‘‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கரிகாலா... உன்னளவு திறமை வாய்ந்தவனை இதுவரை நான் கண்டதில்லை. நல்லவேளையாக நீ பல்லவ இளவரசனாக இல்லை... இல்லையென்றால் என் மகன் மிகப்பெரிய எதிரியை தன் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்டிருப்பான்...’’  
கரிகாலன் சற்றே முன்நகர்ந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

நெகிழ்ச்சியுடன் அவனது தோள்களைத் தொட்டுத் தூக்கினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நீ சிருஷ்டித்திருப்பது பத்மவியூகம். அபிமன்யு போல் அல்லாமல் இந்த பத்மவியூகத்திலிருந்து நீ சேதாரமின்றி வெளியேறுவாய் என்று நான் நம்புகிறேன்...’’‘‘தங்கள் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் மன்னா...’’ ‘‘நல்லது... உன்னால் பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்ட சிவகாமி யார் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை... அவள் உன் காதலியா அல்லது பல்லவர்களின் இளவரசியா அல்லது உண்மையான சிவகாமியின் தோற்றத்தில் அனுப்பப்பட்ட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்பதை எல்லாம் எங்கள் ஒற்றர் படை ஏற்கனவே என்னிடம் தெரிவித்துவிட்டது...’’

‘‘பாண்டியர்களின் ஒற்றர் படையை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை மன்னா...’’‘‘அதற்கு மாறாக உனது திறமையின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாய்...’’ கரிகாலனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே சொன்னார் பாண்டிய மன்னர்.இம்முறை அவரது பார்வையை எதிர்கொள்ளாமல் தலைகுனிந்தான் கரிகாலன்.‘‘தலையைக் குனிவது புலிக்கு அழகல்ல... என்னதான் உன்னை நீயே வளர்ப்புப் பிராணி என்று கூறிக்கொண்டாலும் மீனைப் பொறுத்தவரை என்றுமே நீ புலிதான்... சாளுக்கியர்களுக்கு எதிராக நீ நடத்தி வரும் நாடகம் பாண்டிய நாட்டைப் பாதிக்காத வரையில் ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்ப்பேன்... இதை மட்டும் இந்தக் கணத்தில் என்னால் சொல்ல முடியும்... உறுதி அளிக்க முடியும்...’’‘‘நன்றி மன்னா... இந்த நாடகத்தில் மீனுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை... இதை என்னால் இந்தக் கணத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல முடியும்...’’‘‘அதங்கோட்டாசான் கூடவா..?’’

அரிகேசரி மாறவர்மர் இப்படிச் சொன்னதும் கரிகாலன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.‘‘பல்லவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மட்டுமல்ல... சாளுக்கியர்களின் ஒவ்வொரு நகர்வையும் மட்டுமல்ல... உனது ஒவ்வொரு காலடிச்சுவட்டையும் கூட எனது ஒற்றர்கள் கண்காணித்து வருகிறார்கள்... காஞ்சி சிறையில் நீயும் சிவகாமியும் எதைத் தேடினீர்கள்... இப்பொழுது மதுரை சிறைக்கு உன்னால் எதற்காக சிவகாமி அனுப்பப்பட்டிருக்கிறாள்...’’
‘‘என்னால் சிவகாமி அனுப்பப்படவில்லை மன்னா... அவள் பல்லவ இளவரசியாக வேடமிட்டிருக்கும் சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவி...’’
‘‘என்னிடமே இந்த விளையாட்டைத் தொடர்கிறாயா..?’’‘‘அதில்லை மன்னா... நான் சொல்ல வருவது...’’
‘‘...உண்மை எனக்குத் தெரியும்... ஆட்டம் போதும். முடித்துக் கொள்...’’‘‘மன்னா...’’

‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மர், உங்களுக்கு அளித்த ஆயுதக் குவியலும் அக்குவியல் இருந்த மலைக் குகையும் உனக்கு நினைவில் இருக்கிறதா..?’’கரிகாலன் தலையசைத்தான்.‘‘அந்தக் குகையின் மற்றொரு மூலையில் இருக்கும் பாதாளச் சிறையில்தான் ‘உண்மையான’ சிவகாமியை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அடைத்து வைத்திருக்கிறார்... என் கணிப்பு சரியெனில், இந்நேரம் அவர் அங்கு சென்று, தான் அடைத்து வைத்திருக்கும் சிவகாமி மயக்கத்தில் இருக்கிறாளா என பரிசோதித்திருப்பார்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

‘‘பிடி இறுகி வருகிறது கரிகாலா... உடனடியாக நீ சிருஷ்டித்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வா...’’‘‘இந்தச் சிறியவன் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி மன்னா... தாங்கள் கூறியபடியே வெளியே வந்து விடுகிறேன்...’’‘‘என்னைத் திருப்திப்படுத்தச் சொல்கிறாயோ அல்லது உண்மையிலேயே வெளியே வரப் போகிறாயோ... அது உன் விருப்பம்... ஆனால் ஒன்று - பொழுது விடிவதற்குள் அதங்கோட்டாசானையும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களையும் மதுரையில் இருந்து வெளியேற்றிவிடு... இந்த இரவு மட்டுமே உனக்கு அவகாசம்...’’
‘‘மன்னா...’’

‘‘எனக்கு பாண்டியர்களின் நலம் முக்கியம் கரிகாலா... பல்லவ - சாளுக்கிய பிரச்னையில் என் மக்களின் தலை உருள்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...’’ ‘‘அப்படி நடக்காது மன்னா...’’‘‘நடக்காமல் இருப்பதே பல்லவர்களுக்கும் உனக்கும் நல்லது!’’ அழுத்திச் சொன்ன பாண்டிய மன்னர், விடை கொடுப்பதற்கு அறிகுறியாக அறைக் கதவைப் பார்த்தார்.

புரிந்துகொண்டதுபோல் கரிகாலன் தலைவணங்கினான். ‘‘நன்றி மன்னா... நான் வருகிறேன்...’’அறைக் கதவை அவன் நெருங்கியபோது அரிகேசரி மாறவர்மர் அழைத்தார். ‘‘கரிகாலா...’’நின்று திரும்பி அவரைப் பார்த்தான். ‘‘மன்னா...’’‘‘சில கணங்களுக்கு முன் ரிஷபம் எருது குறித்து உரையாடினோம் அல்லவா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘அப்பொழுது மருந்துக்குக் கூட நான் வராகத்தைக் குறிப்பிடவில்லை...’’‘‘காரணம் புரிந்தது மன்னா... ரிஷபமும் எருதும் ஒன்றுதான் என்பதை குறிப்பால் உணர்த்தினீர்கள்... அதாவது பல்லவர்களும் சாளுக்கியர்களும் வேறு வேறல்ல... சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தவர்கள்... ஒரே உறையில் இருந்த இரு கத்திகள் என்பதாலேயே தொடக்கம் முதல் உரசிக் கொண்டிருக்கிறார்கள்... இன்றைய வராகம் நிஜத்தில் எருதுதான்... என்பதை இந்த சிறியவனுக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்...’’அரிகேசரி மாறவர்மரின் கண்களில் கனிவு வழிந்தது. ‘‘உன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று எல்லாம்வல்ல மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு கரிகாலன் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.

அவனது வருகைக்காகவே அங்கு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் நின்று கொண்டிருந்தான்!
‘‘உறங்கச் செல்லவில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.‘‘உன்னுடன் இந்த இரவு முழுக்க பேசிகொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது... உனக்கொன்றும் பிரச்னையில்லையே..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா..? மகிழ்ச்சியாக இருக்கிறது... வா...’’ புன்னகையுடன் சொல்லிவிட்டு இரணதீரனுடன் நடந்தான்.

‘இன்றிரவு முழுக்க உன் தந்தையின் கட்டளைப்படி என்னைக் கண்காணிக்கப் போகிறாய்... அப்படித்தானே..?’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..?’

‘‘ம்...’’ கனைத்துவிட்டு தன் கையில் இருந்த பட்டுச் சுருளை சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.
மவுனமாக அதை வாங்கிப் படித்தான் விநயாதித்தன்.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள்.

வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரை கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’
‘‘நம்மிடம் சிவகாமி ரகசியமாகக் கொடுத்து அனுப்பிய செய்தி இதுதான்...’’ தன் அறையில் இருந்த சாளரத்துக்கு வெளியே வானத்தைப் பார்த்தபடி ராமபுண்ய வல்லபர் சொன்னார். ‘‘இது நாமும் அறிந்த செய்திதான்... என் ஊகம் சரியெனில், மதுரை மன்னரும் இதை அறிவார்... இப்படி எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ரகசிய செய்தியாக நம்மிடம் ஏன் சிவகாமி கொடுக்க வேண்டும்..?’’
விநயாதித்தன் அமைதியாக அவரைப் பார்த்தான்.

‘‘இந்தச் செய்தியை புறா வழியே சிவகாமிக்குத் தெரியப்படுத்தியவர் யாராக இருக்கும் விநயாதித்தா..?’’
‘‘தெரியவில்லை குருநாதா...’’‘‘அதுவும் சரியாக பல்லவ இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளிக்கும்போது புறா வழியே சிவகாமிக்கு செய்தி வரவேண்டுமா..? ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே..?’’விநயாதித்தன் திரும்பி, மூடியிருந்த அறைக்கதவை உற்றுப் பார்த்தான்.

‘‘எதற்காக அறைக்கதவை ஆராய்கிறாய் விநயாதித்தா..?’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..?’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்!’’பெருமையுடன் தன் சீடனை அவர் பார்த்தபோது, அறைக்கதவைத் திறந்துகொண்டு நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் தூக்கி வந்தது கடிகை பாலகனை என்பது தீபத்தின் ஒளி இல்லாமலேயே ராமபுண்ய வல்லபருக்கும் விநயாதித்தனுக்கும் புரிந்தது.
வந்த வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் முன்னால் வந்து சாளுக்கிய போர் அமைச்சரையும் சாளுக்கிய இளவரசனையும் வணங்கினான். ‘‘மதுரையிலேயேதான் இவர் பதுங்கி இருந்தார்...’’ கடிகை பாலகனை சுட்டிக் காட்டினான். ‘‘எந்த இடத்தில்..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்கள் ஒளிர்ந்தன.

‘‘பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில்!’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘இவரிடம் இருந்து சிலவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம்...’’சொன்ன வீரர்களின் தலைவனைப் பார்த்தான் விநயாதித்தன். ‘‘புறாக்களையா..?’’
‘‘இல்லை இளவரசே...’’‘‘பிறகு..?’’

‘‘செய்திகளை...’’ என்றபடி 15 பட்டுச் சுருள்களை எடுத்து வீரர்களின் தலைவன் காண்பித்தான். ‘‘அனைத்திலும் ஒரே செய்திதான் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளது...’’‘‘என்ன செய்தி அது..?’’ நாசி அதிர சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.‘‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில்  பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை.

இதனைத் தொடர்ந்து  கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு  வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும்  அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’’ படுத்த நிலையில் கரிகாலனைக் கொத்தாகத் தன் தலைக்கு மேல் தூக்கினாள் சிவகாமி.சரியாக அவளது அதரங்களுக்கு நேராக வந்ததும் அதில் தன் உதடுகளைப் பதித்தான் கரிகாலன்.நான்கு உதடுகளும் பின்னிப் பிணைந்தன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்