ரூ.20 லட்சம் கோடி... கதையா உண்மையா..?



மே 12ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பை அறிவித்தார். ‘‘இந்தத் தொகுப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%” என தன் உரையில் கூறிய மோடி, ‘‘மே 13 முதல் அடுத்தடுத்த சில நாட்களில் இந்த பொருளாதாரத் தொகுப்பு குறித்த விரிவான தகவல்களை நிதியமைச்சர் உங்களுக்கு வழங்குவார்...” என்றார்.அதன்படி 5 கட்டமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள அறிவிப்பினை வெளியிட்டார்.

இது தொடர்பாகக் காணொலி மூலம் மே 18 அன்று ஊடகங்களைச் சந்தித்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். “பிரதமரின் பொருளாதார ஊக்கத் திட்டம் என்பது 0.8% முதல் 1.5% மட்டுமே என்று பொருளாதார ஆய்வாளர்களும், ரேட்டிங் நிறுவனங்களும், வங்கிகளும் மதிப்பிடுகின்றன.

ஆக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.91 சதவிகிதமான ரூ.1,86,650 கோடியைத்தான் பொருளாதாரத் தொகுப்பாக பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள அறிவிப்புகள் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்ட காலத் திட்டங்கள். இந்தத் தொகை பொருளாதாரச் சிக்கலிலிருந்து ஏழைகளையும், புலம்பெயர் தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் மீட்கப் போதுமானதாக இல்லை.

எனவே, மத்திய அரசு சிறப்புப் பொருளாதாரத் திட்ட அறிவிப்புகளை பரிசீலனை செய்து குறைந்தது ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதாவது ஜிடிபியில் 10%” என்று கூறியவர், ‘‘நாடாளுமன்றம் என்ற அமைப்பையே மத்திய அரசு ஓரங்கட்டுகிறது.

இந்த நெருக்கடி யான காலகட்டத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், சீர்திருத்தத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தது நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலாவது இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும்...” என்று அழுத்தம்திருத்தமாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்“மாநிலங்கள் கடன் வாங்கும் சதவிகிதத்தை அதிகரிப்பதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதற்கு பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது மத்திய அரசு.

இது முழுக்க முழுக்க நம்பிக்கைத் துரோகம். மத்திய அரசு எண்களில் ஏமாற்று வித்தை நடத்துகிறது. சர்வாதிகார அணுகுமுறையில் உள்ள இதை நாங்கள் முழுமையாகக் கண்டிக்கிறோம். இது நாங்கள் கேட்டதல்ல.

கொரோனா வைரசால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை மாநில அரசுகள் செயல்
படுத்த முனைந்தது. ஆனால், எங்கள் நிதி, மத்திய அரசிடம் முடங்கியிருக்கிறது. மாநிலங்களுக்குத் தரவேண்டிய அந்த நிதியை நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசோ எங்களை பிச்சைக்காரர்களை நடத்துவது போல் அலட்சியப்படுத்துகிறது.

இது ஒரு கூட்டாட்சி அமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கையே அல்ல. மத்திய அரசு இப்படிச் செயல்பட்டால் பின்னர் மாநில அரசுகள் எதற்காக?’’ என தன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.நிதி அமைச்சரின் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு பற்றி வேறொரு கோணத்தில் ஆராய்கிறார் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன்.

“திட்டங்கள் பெரிய பெரிய எண்களில் இருக்கின்றன. இத்திட்டங்கள் வங்கிகள் வழியாகத்தான் நடக்கப் போகின்றன. ஆனால், அரசு சொல்வதையெல்லாம் வங்கிகள் பின்பற்றுகிறதா..? பொருளாதாரம் தேங்கியுள்ளது... வளர்ச்சி வீதம் குறைந்து கொண்டிருக்கிறது… என்று பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் ரிசர்வ் பேங்க், வணிக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. அந்த வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுக்கும்போது வட்டியைக் குறைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு, அதுதான் நடைமுறையும் கூட.

ஆனால், ரிசர்வ் வங்கி கொரோனாவுக்கு முன்பே மூன்று நான்கு முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் வணிக வங்கிகள் தங்கள் வட்டியைக் குறைக்கவில்லை.பொதுமக்களிடமிருந்து வங்கிகள் டெபாசிட்டாக பெறும் பணத்தை, தேவைப்படும் மக்களுக்குக் கடனாகக் கொடுக்காமல், அதை ரிசர்வ் வங்கியில் மீண்டும் டெபாசிட் செய்கின்றது.

உதாரணமாக ரிசர்வ் பேங்க், வணிக வங்கிகள் மூலமாக ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தது. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் அவர்கள் அறிவித்ததோடு கூடுதலாக இரண்டு லட்சம் கோடி ரூபாய் வங்கியிலேயே டெபாசிட் ஆகியுள்ளது.

வணிக வங்கிகளுக்குப் பொருளாதார சூழல் சரியில்லை என்பது எதார்த்தம். கடன் கொடுத்தால் அது திரும்ப வராது. திரும்ப வரவில்லை என்றால் அதற்கு அந்த வங்கியே பொறுப்பு. எனவே அந்த பொறுப்பை ஏற்க வேண்டாமென்று மறுபடியும் ரிசர்வ் பேங்கிலேயே டெபாசிட் செய்கிறார்கள்.
இதனால் நாட்டில் பணப் புழக்கம் இறுகிக்கொண்டே போகிறது. தொழில்களும் முடங்குகின்றன. அதை மீண்டும் ஊக்குவிப்பதற்காக ‘நான் கேரண்டி தருகிறேன், நீங்கள் கொடுங்கள்’ என்று அரசு முன்வந்திருக்கிறது.

ஆனாலும், இது செயல்படுமா என்பதுதான் நம் முன் இருக்கும் பெரிய கேள்வி...” என்று கூறும் ஜெயரஞ்சன், தற்சார்பு பொருளாதாரம் பற்றியும் விளக்கினார்.“தனியார் மயமாக்குவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்பதெல்லாம் கொள்கை முடிவுகள். அதற்கும், ரூ.20 லட்சம் கோடி தொகுப்புக்கும் சம்பந்தம் கிடையாது. ஒன்றாக அறிவித்திருப்பதால் குழப்பம் வருகிறது.

தற்சார்பு, தனியார் மயமாதல், உலகமயமாதல்… இது எல்லாவற்றிற்கும் தனித் தனி புரிதல்கள் இருக்கின்றன.உள்ளூர் தொழில்களை வளர்த்தெடுப்போம் என்று சொன்னதெல்லாம் நம்பப்பட்ட விஷயம், சொல்லப்பட்ட விஷயம், படிக்கப்பட்ட விஷயம். கொள்கைகளும், முடிவுகளும் அதற்குத் தகுந்தாற்போல் இருந்தன.

உள்ளூர் நிறுவனங்களை வளர்க்க ஆதரவான வரிக் கொள்கைகள், இறக்குமதி - ஏற்றுமதி கொள்கைகள், தொழில் கொள்கைகள், வாங்கும் முடிவுகள், கடன் வசதி, தொழில்நுட்ப வசதி… என்று பல தளங்களில் அதைச் செயல்படுத்துவதே தற்சார்பு.அதே சமயத்தில் வெளிநாடு
களிலிருந்து வரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பது எப்படி அல்லது வெளியிலிருந்து வரும் போது கவனத்துடன் எப்படிக் கையாள்வது, அப்படிக் கையாள்வதன் மூலமாக நம் உள் நாட்டுத் தொழில் உற்பத்தியை எப்படி திட்டமிட்டுச் செயல் படுத்துதல்... என்பதெல்லாம் இருக்கிறது. இது குறித்த எந்தத் தெளிவும் மத்திய அரசிடம் இல்லை.

அந்நிய முதலீடு வரும் போது, உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்துதான் செயல்படும். அதன் விளைவுகள்தான் சில ஆண்டுகளுக்கு முன் வந்த TVS Suzuki, Hero Honda… எல்லாம்.இப்போது நேரடியாக அந்நிய முதலீடு 74% போகலாம் என்கிறார்கள். கூடவே தற்சார்பு குறித்தும் பேசுகிறார்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசு மக்களுக்குச் செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறதே தவிர, மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துவதில்லை.சர்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்
திருந்த போதிலும் இங்கு வரிகளைத் தொடர்ந்து அதிகப்படுத்தி, மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்கிறார்கள்.

எந்த பொருளுக்காவது ஜிஎஸ்டி குறைத்திருக்கிறார்களா? மாறாக டோல் போன்றவற்றை அதிகப்படுத்தியுள்ளனர். வரி வசூல் செய்வதில் எந்த சுணக்கமும், இரக்கமும் காட்டாத அரசாகத்தான் நம் மத்திய அரசு இருக்கிறது...’’ என்கிறார் ஜெயரஞ்சன்.              

அன்னம் அரசு