சீனாவின் குடைச்சலையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சலில் மீண்டும் இந்தியா...



ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் பொதுச்சபையில் (United Nations General Assembly - UNGA) தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் இருக்கும். இதில் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து நாடுகளுக்கான தேர்தல் நடைபெறும். இப்படி, தேர்ந்தெடுக்கப்படும் நாடு இரண்டு ஆண்டுகள் தற்காலிக பொதுச்சபை உறுப்பினராக இருக்கும்.

இந்த தற்காலிக பொதுச்சபை உறுப்பினர் பதவி பூகோள அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஆசியப் பிராந்தியங்களுக்கும் ஐந்து உறுப்பினர்களும்; கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு ஓர் உறுப்பினரும்; லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய கடற்கரை நாடுகளுக்கு இரண்டு உறுப்பினர்களும்; மேற்கு ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளுக்கு இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

இப்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களே அந்தந்தப் பிராந்தியங்களின் பிரதிநிதியாக இருப்பார்கள் என்பதால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக இது கருதப்படுகிறது.2021 - 2022 ஆண்டுகளுக்கான ஐநா பொதுச்சபை தற்காலிக உறுப்பினர் தேர்தலில் இந்தியா பங்கேற்றுள்ளது. ஆசியப் பிராந்தியத்தின் பிரதிநிதியாக இந்தியா முன்னிறுத்தப்படுவதற்கு எதிராக வேறு எந்த நாடும் போட்டி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், லத்தீன் அமெரிக்க - கரீபிய நாடுகளுக்கான பிராந்தியத்தில் மெக்சிகோவும் எதிர் வேட்பாளரின்றி வென்றுள்ளது.
இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் புதிதல்ல. இதற்கு முன்பு, 1950 - 51, 1967 - 68, 1972 - 73, 1977 - 78, 1984 - 85, 1991 - 92, 2011 - 12 என ஏழு முறை இந்தப் பதவியில் அமர்ந்துள்ளது.

அப்போதெல்லாம் இந்தியாவின் செயல்பாடு முன்னுதாரணமானதாகவே இருந்திருக்கிறது என்பதால் உலக அரங்கில் இந்தியாவின் மீது மதிப்புள்ளது.
குறிப்பாக, வளைகுடா போர் போன்ற நெருக்கடியான காலங்களில் இந்தியா எடுத்த நிலைப்பாடு ஆசியப் பிராந்தியங்களில் மட்டுமல்லாது, உலக அளவிலேயே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எனவே, ஐநா பொதுச்சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகவே இருப்பதற்குக்கூட தகுதியான நாடாக உலக சமூகத்தால் கருதப்படுகிறது.  
கடந்த ஜூன் 17ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பங்கேற்றன. பொதுவாக, இந்தத் தேர்தல் ஐநா சபை வளாகத்தில் உறுப்பினர்கள் சூழ கோலாகலமாக நடைபெறும்.

கொரோனா தொற்று கடுமையாக இருக்கும் இந்நாட்களில் இந்தத் தேர்தலையே ஒத்திவைக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் வாக்களிக்கும் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே நுழையும்படியாக, பாதுகாப்பான ரகசிய இடம் ஒன்றில் இந்தத் தேர்தல் நிகழும் என ஐநா பொதுச்சபையின் தலைவர் திஸ்ஸானி முகமது பண்டி அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய ஏற்பாட்டின் படி, தேர்தல் நாளன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிக்குள் வாக்களிக்க வேண்டிய உறுப்பினர்கள் மட்டுமே நுழைய முடிந்தது. அப்போது அங்கு, பாதுகாப்பு அதிகாரிகள் தவிர வேறு உறுப்பினர்களோ, தலைவர்களோ இருக்கவில்லை.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாக்களிக்க ஒவ்வொரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்துக்குள்ளாக வாக்களிக்கும்படியாக அனைவரும் கோரப்பட்டிருந்தனர். ஒருவேளை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மெஜாரிட்டி வாக்குகள் பதிவாகவில்லை என்றால் மறுதேர்தல் நடப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இது எல்லாம் இந்த கொரோனாவுக்காக செய்யப்பட்டிருந்த புதிய மாறுதல்கள். ஆனால், இந்த புதிய மாற்றத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றதன் அடையாளமாக உற்சாகமாக வாக்களித்தனர்.ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உண்மையில் அத்தனை சுலபமல்ல. மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை அள்ளினால்தான் இது சாத்தியம்.

மற்ற பிராந்தியங்களில் இந்தப் பதவிக்கு இருக்கும் கடுமையான போட்டியை நோக்கினால் இந்தியாவின் அந்தஸ்து என்ன என்பது நமக்குப் புரியும்.
உதாரணமாக, ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான உறுப்பினர் தேர்வுப் போட்டியில் கென்யாவும் புதிய உறுப்பு நாடான ஜிபூதியும் கடும் போட்டியில் இருந்தன.

அதே போல், மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கான தேர்தலில் கனடாவுக்கும் அயர்லாந்துக்கும் நார்வேக்கும் மும்முனைப் போட்டி நிலவியது. இந்த ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் இந்தியாவோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றன. கனடா பிரதமர் ட்ரூடோ பல மாதங்கள் கழித்து இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து ராஜரீக விஷயங்களைப் பேசினார்.

நார்வே அயலக அமைச்சர் இனி எரிக்சன் சோரிடி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசி தங்களுக்கான ஆதரவைத் திரட்டினார். இதுபோலவே அயர்லாந்து பிரதமர் லியோ வரத்காரும் இந்தியப் பிரதமரிடம் பேசியுள்ளார்.இந்தியா, அயர்லாந்து இரண்டுமே அணிசேரா நாடுகளின் கொள்கை உடையவை.

ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியில் இருந்தாலுமே கூட நேட்டோவின் படைகளில் அயர்லாந்து பங்கேற்பதில்லை. அமைதியை விரும்பும் நாடுகள் என்ற அளவில் இந்தியா எங்களை ஆதரிக்கும் என நம்புவதாக அயர்லாந்து பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இந்தத் தேர்தலுக்காக அயர்லாந்து 2005ம் ஆண்டே தன்னை முன்னிறுத்தியது. அதேபோல் நார்வே 2007ம் ஆண்டே அறிவித்தது. ஆனால், கனடா 2016ம் ஆண்டுதான் இந்தப் போட்டியில் குதித்தது.

கனடா பிரதமர் ட்ரூடோ இந்த கொரோனா சூழலில் தேசங்கள் தங்களுக்காக மட்டுமே இயங்காமல் பல்முனை நலன் நோக்குடன் இயங்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது பிரசாரத்தை வடிவமைத்திருக்கிறார்.

முன்னதாக இந்தியா இந்த தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்த பலமுனை நலன் நோக்கு என்ற அம்சத்தையே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இன்றைய கொரோனா சூழலில் தேசங்கள் தம் பகைமையை மறந்து ஒன்றாக இயங்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. தன்னுடைய நலன் என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்த மானுட நலன் என்பதாக தேசங்கள் யோசிக்க வேண்டிய காலம் இது.

இந்தத் தேர்தலில் வழக்கம் போல இந்தியாவுக்கு சீனா தனது குடைச்சலைக் கொடுக்க முயன்று வருகிறது. ஆசிய பசிபிக் சூழலில், தான் ஒருவன் மட்டுமே அதிகார சக்தியாக இருக்க வேண்டும் என்பது சீனாவின் நெடுநாளைய விருப்பம்.

ஆனால், தங்களது காலுக்குக் கீழேயே ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பது அதன் எரிச்சல்களில் பிரதானமானது. மேலும், நம்மிடம் உள்ள அபரிமிதமான மனித வளமும் இயற்கை வளமும் சீனாவின் அச்சங்களில் ஒன்று.

ஒரு காலத்தில் எதுவுமே இல்லாத நாடாக இருந்த சீனம் இந்த இரண்டு வளங்களைக் கொண்டே அதிகார சக்தியாக வளர்ந்திருக்கிறது. இந்தியா என்று வேண்டுமானாலும் அந்த இடத்துக்கு வரமுடியும் என்ற அச்சம் சீனாவின் நிரந்தரக் கவலைகளில் ஒன்று. அதனால்தான் எல்லாவகையிலும் இந்தியாவுக்கு எதிரான முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. ஆனால், ஐநாவில் இந்தியாவின் கை ஓங்கியே இருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தலே சான்று.

இளங்கோ கிருஷ்ணன்