இன்ஸ்டன்ட் குடும்பம்





கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஆங்கிலப்படம் ‘இன்ஸ்டன்ட் ஃபேமிலி’. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படங்களில் இந்தியர்களால் அதிகமுறை பார்க்கப்பட்ட படமும் இதுவே. எல்லாமே இன்ஸ்டன்ட்டாக கிடைக்கும் காலத்தில் குடும்பத்தையும் இன்ஸ்டன்ட்டா உருவாக்கிவிடலாம் என்று முயற்சிக்கும் ஒரு தம்பதியினரின் கதைதான் இந்தப் படம்.  

நடுத்தர வயதுடைய தம்பதியினர் பீட் - எல்லி. அவர்களுக்குக் குழந்தையில்லை. வசதியான வீடு, சொகுசான வாழ்க்கை என்று இருந்தாலும் குடும்பம் முழுமையடையாததைப் போல இருவரும் உணர்கின்றனர். இனிமேல் குழந்தை பிறந்து, வளர்வதற்குள் கிழவன், கிழவியாகிவிடுவோம் என்று வருந்துகிறார்கள்.

குழந்தையைத் தத்தெடுத்து இன்ஸ்டன்ட்டாக ஒரு குடும்பத்தை உருவாக்கலாம் என்று ஒருமனதாக முடிவு செய்கின்றனர். அனாதைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்க்கும் ஒரு முகாமிற்கு விசிட் அடிக்கின்றனர்.

அங்கே சின்னக் குழந்தைகளைவிட டீன் ஏஜில் இருப்பவர்கள்தான் அதிகம். டீன் ஏஜில் இருக்கும் ஒரு பையனையோ அல்லது பெண்ணையோ தத்தெடுக்கலாம் என்று ஆசைப்படுகிறார் எல்லி. அதற்கு பீட்டும் சம்மதிக்க, லிசி என்ற 15 வயதுப் பெண்ணைத் தத்தெடுக்கின்றனர்.

போதைக்கு அடிமையாகி ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் லிசியின் அம்மா. 10 வயதில் ஜுவான் என்ற தம்பியும் 6 வயதில் லிதா என்ற தங்கையும் லிசிக்கு இருக்கின்றனர். லிசியைத் தத்தெடுக்க வேண்டுமானால் அவளுடன் சேர்த்து ஜுவானையும் லிதாவையும் தத்தெடுக்க வேண்டும் என்று குழந்தைகள் வளர்க்கும் முகாமின் அதிகாரிகள் சொல்கின்றனர்.

அத்துடன் குழந்தைகள் சில நாட்கள் பீட் - எல்லியின் வீட்டில்  இருப்பார்கள். மூன்று குழந்தைகளை வளர்ப்பதற்குத் தகுதியான பெற்றோர்கள் என்று பீட்டும் எல்லியும் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுக்க நீதிமன்றம் அனுமதி தரும்.

ஒருவேளை அக்குழந்தைகளின் அம்மா மனம் திருந்தி போதையிலிருந்து மீண்டுவிட்டால் குழந்தைகளைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. ஜெயிலில் இருக்கும் அம்மா திரும்பி வந்தாரா... பீட்டும் எல்லியும் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர்... அவர்களின் குடும்பம் முழுமையடைந்ததா... என்பதே கிளைமேக்ஸ்.

குழந்தைகள் நன்றாக வளர பெற்றோர்கள் எவ்வளவு முக்கியம், குழந்தைகள் எப்படி ஒரு குடும்பத்தை முழுமையாக்குகிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக சொல்லியிருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுடன் அவர்களின் வளர்ப்பு பெற்றோர்கள் இருக்கும் புகைப்படங்களை எண்ட் கார்டில் பகிர்ந்திருப்பது சிறப்பு.

குடும்பத்துடன் கண்டு களிக்கலாம். தமிழில் ரீமேக் செய்ய நல்ல சாய்ஸ். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சீன் ஆண்டர்ஸ்.   

தொகுப்பு: த.சக்திவேல்