எது செய்தாலும் இயக்குநர்களின் விருப்பமே முக்கியம்!அழுத்தமாகச் சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்

‘‘அப்பா போலீஸ் வேலையில் இருந்தார். இப்போ அண்ணன் ரவிச்சந்திரன் கூட டெபுடி கமிஷனராக இருக்கார். ‘நீயும் காவல் துறைக்கு வந்திருப்பா’ன்னு அப்பா சொன்னார்.  ஆனா, இந்த சினிமா என்னை இழுத்தது. ஒரு தீராத கனவு மாதிரி தோன்றிக்கிட்டேயிருந்தது சினிமா.
ஆரம்பத்தில் ரஜினி படங்களைப் பார்த்துக்கிட்டேயிருந்தேன். அவர் ஒரு மேஜிக் மனிதர் மாதிரியிருந்தார். ஒரு நாள் என் நண்பன் ‘‘நாயகன்’ படம் வந்திருக்கு. வந்து பாரு. உனக்கு புதுசா இருக்கும்’னு சொன்னான்.

போய்ப் பார்த்தால் அவன் சொன்னது அத்தனையும் நிஜம். கதையாகவும், எடுத்த விதத்திலும், வரிசையாக கதை சொல்லிட்டு போனதிலும் ஆச்சர்யம் தாங்க முடியலை. அது ஒரு பரவசம். என்னை இப்பவும் அந்தப்படம் துரத்திட்டே இருக்கு. அப்புறம் போய் பி.சி.ராம் சார் வீட்ல நின்னால் அவர் நிறைய உதவியாளர்கள் இருப்பதால் சேர்த்துக்க முடியலைன்னு சொல்லிட்டார். இப்போ சினிமா எவ்வளவோ மாறிப்போச்சு. ஆனால், ‘நாயகன்’ பார்த்த மனசு அதேதானே...’’ வெளியே மழை பார்த்து, உள்ளே நம் முகம் பார்த்து பேசுகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். அமீரின் ’யோகி’யில் தொடங்கி, இப்போது ‘கென்னடி கிளப்’ வரைக்கும் வந்திருக்கிறார்.

பி.சி.யை தேடிப் போய்... அதற்கடுத்த பயணம் எங்கே..?

சினிமாவின் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அப்போது பி.சி.யோட பெயரை நிலை நாட்டுறதில் ஜீவா சார் முன்னணியில் இருந்தார். அப்படியே அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றிப் போகாமல் தனக்குன்னு ஸ்டைல்களை கொண்டு வந்தார். எந்தப் படம் செய்தாலும், படத்திற்கு உள்ளே இருந்துகிட்டே தனக்கான அடையாளங்களை விட்டுட்டு போனார்.

எனக்கு ரொம்பவும் அவர் ஒர்க் பிடித்திருந்தது. அவர்கிட்டே சேர்ந்து வேலை செய்தேன். அவர்கிட்டே கொஞ்சம் கூட சோர்வை பார்க்க முடியாது. அத்தனை பர்ஃபெக்‌ஷன். நல்ல மனிதரும் வேறே. பெரிய இடத்திற்குப் போக திறமை மட்டும் போதாது. நல்ல மனசும் முக்கியம் என்பதற்கு அவரே ஓர் உதாரணம்.ஒளிப்பதிவுத் துறை எப்படியிருக்கு..?

முன்னாடி ஃபிலிம் ரோலில் இருந்தபோது ரொம்ப கவனம் தேவைப்பட்டது. சகலவிதமான எச்சரிக்கைகளோட சினிமாவை எடுக்கவேண்டிய சூழல். நம்ம தலைவிதியை லேப்தான் தீர்மானிக்கும். ஒவ்வொரு ஷெட்யூல் முடியும்போதும் கிடைக்கிற சந்தோஷத்தை விட, லேப்பில் ரோல் சரியாக எக்ஸ்போஸ் ஆகியிருக்கா என்ற செய்தியிலேயே நிம்மதி வரும்.

இப்ப டிஜிட்டல் வந்த பிறகு நிறையப்பேர் ஒளிப்பதிவுக்கு வந்திடுறாங்க. 10 நாள் பழகினால் போதும்னு ஆகிப்போச்சு. அப்படியும் இங்கே திறமையாளர்கள் நிறையப் பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் அவங்க வித்தையைக் காட்டுறாங்க. எப்படியிருந்தாலும் எப்பவும் சினிமா, டைரக்டர்கள் கையில்தான் இருக்கு. அப்படித்தான் இருக்கணும். எப்பவும் கதையை மீறிப் போய் விடாமல் இயக்குநர்களோட ஒரே அலைவரிசையில் இருப்பதே அழகு.

இயக்குநர்களின் எண்ணத்தை செயலாக்குவதே எங்க வேலை. எது செய்தாலும் இயக்குநர்களின் விருப்பம் முக்கியம். பின்னாடி சொல்லப்படப் போவது இவரோட படம் என்பது மட்டும்தான்.பி.சி.க்கு இணையாக ஜீவா ஸ்கூல் அறியப்படுகிறது...உண்மை, அப்படித்தான் அவர் இருந்தார். சொல்லித்தரமாட்டார். ஆனால், அவர் பின்னாடியிருந்தால் நமக்கு எல்லாமே புரிய வரும். என்னிக்கும் ‘இப்படித்தான்’னு அவர் கையைப்பிடிச்சு சொல்லிக் கொடுத்து யாரும் பார்த்தது கிடையாது. தனக்கு எல்லாமே தெரியும்னு அவருக்கு எந்த பெருமிதமும் கிடையாது.

எங்களின் திறமைதான் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்னு அவர் நினைக்க, நாங்க அவர் பின்னணியைத்தான் எப்பவும் எங்க பெருமையாகக் கருதுவோம். அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், ஒளிப்பதிவு தவிர்த்து இயக்குவதிலும் இன்னும் சாதனைகள் செய்திருப்பார். ஒரு பெரிய காலக்கட்டம் அவரோடு இருந்ததில் நான் ரொம்பவும் இழப்பை உணர்கிறேன். இப்பவும் அவரை தினப்பொழுதிலும் நினைக்காத நேரம் கிடையாது.

தொழில் நுட்பங்கள் ஒளிப்பதிவில் அதிகமாகிட்டே போகுதே... அது அப்படித்தான். இன்னும் பிரம்மாண்டமாகப் போகும். நாம் அந்த மாதிரி ஒரு கட்டத்திற்குப் போகவேண்டிய நேரம்தான் இது. டிஜிட்டல் வந்ததும், அது பயங்களை விரட்டி நிறைய கேமராமேன்கள் பல விஷயங்களைச் செய்து பார்க்க களம் அமைந்துவிட்டது. கேமராக்கள் ஒவ்வொண்ணும் அதிசயிக்கத்தக்க அளவில் மாற்றங்கள் காணுது.

ஃபிலிமில் பயந்துக்கிட்டு செய்த அத்தனை முயற்சியும் இப்ப ஈஸியாக செய்து பார்க்க முடிகிறது. உட்கார்ந்த இடத்தில் இருக்கிற நமக்கு விஞ்ஞானம் கேமராவில் அத்தனை வசதிகளையும் கொண்டு வந்து சேர்க்குது. இதுதான் இன்றைய தலைமுறைக்கு வரம்.

உங்க பார்வையில் இஷ்ட ஒளிப்பதிவாளர்கள் யாரு..?

என்னிக்கும் என் மனசில் நிற்பது பி.சி.ராமும் ஜீவா சாரும் தான். ராம் செய்தது எல்லாமே சோதனை முயற்சி தான். அவர் அப்படிச் செய்ய இயக்குநர்கள் அவருக்கு இடம் கொடுத்தாங்க. புரிஞ்சுக்கிட்டாங்க. அப்படிக் கொடுத்த சுதந்திரத்தை அவர் கையில் எடுத்திட்டு எல்லோருக்கும் நவீனத்தைக் கொடுத்து மெருகேற்றினார்.

ஜீவா சார் அப்படியே அவரோட பிரதிபலிப்பு. ஒரு பெரிய உதவியாளர் கூட்டமே இவங்க இரண்டு பேரின் பின்னணியிலிருந்து வந்திருக்கோம். இப்ப இளைஞர்கள் நல்லபடியாக முன்னெடுத்து செய்றாங்க. அவங்க சினிமா கிராஃப் சொல்லும்படியாக இருக்கு.

இந்த வாழ்க்கையைப்பத்தி என்ன நினைப்பீங்க..?

ஒவ்வொருத்தரையும் உழைப்புதான் மேலே கொண்டு வருதுன்னு நம்புவேன். ஒரு பெரிய போரில் இறங்குகிற விதத்தோடு இந்த சினிமாவுக்குள் வர கஷ்டப்பட்டதும், ஒரு ஒளிப்பதிவாளனாக இப்போது கருதப்படுவதும் நல்ல விஷயம்தான்.

எங்கேயோ பார்த்த சினிமாவும், தட்டிக்கொடுத்த ஜீவா சாரும் இன்னும் நினைவில் இருப்பது உண்மை. எனக்கே எனக்காக இந்த சினிமாவில் சாதிக்க கனவுகள் இருக்கு. அது மெய்ப்படும்னு நம்புறேன்.

நா.கதிர்வேலன்