1968 - 2017 50 ஆண்டுகாலம்... 20 பாகங்கள்... புத்தகமாகிறது உடன்பிறப்புக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள்!



ஆம். 1968ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 50 ஆண்டுகாலம்  உடன்பிறப்புக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இருபது பாகங்கள் கொண்ட அந்நூலின் 15 பாகங்கள் முடிந்துவிட்டன. இதற்கான பணியை சிறப்பாகச் செய்து வருகிறார் கௌமாரீஸ்வரி.
‘‘எங்க பதிப்பகம் தொடங்கக் காரணமே ‘பொன்னியின் செல்வன்’ நூல்தான். எங்கிட்ட இருந்த ஐந்து பாகங்கள்ல ஒண்ணு காணாமல் போக, என் கணவர்கிட்ட கேட்டேன்.

அவர் ரெண்டு பதிப்பகங்கள்ல இருந்து 500 ரூபாய், 550 ரூபாய்னு வெவ்வேறு விலைகள்ல வாங்கிட்டு வந்தார். அது 1998ம் ஆண்டு. அந்த ஆண்டுதான் கல்கியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தது. விலை அதிகம்னு சொன்னவர், ‘நாம் ஏன் இந்நூலை குறைஞ்ச விலைக்குக் கொடுக்கக் கூடாது’னு கேட்டார். பிறகு, எங்களின் குருவான சின்னக்குத்தூசி அய்யாகிட்ட கேட்டோம். இந்நூலின் ஐந்து பாகங்களையும் 250 ரூபாய்க்குக் கொடுக்க முடியும்னு சொன்னோம்.

அவர், ‘அப்படி கொடுத்தா நீங்கதான்யா பதிப்புத்துறையில் கிங்’னு சொன்னார். அப்படியே இந்தப் பதிப்பகம் உருவானது. அவரின் அந்த வார்த்தைகளும் நிஜமானது...’’ மனம் நெகிழ்ந்து பேசுகிறார் கௌமாரீஸ்வரி. ‘சாரதா’, ‘சீதை’, ‘ராமையா’, ‘மங்கை’, ‘நாம் தமிழர்’ உள்ளிட்ட பதிப்பகங்கள் அடங்கிய ‘கௌரா பதிப்பக குழும’த்தின் பதிப்பாசிரியர். கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட நூல்களை இவரின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘‘முதல்ல என் கணவர் ராஜசேகருக்கும் என் குடும்பத்துக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க இல்லன்னா நான் இல்ல. இந்தப் பதிப்பகத்துக்கான ஐடியாவைத் தந்தது என் கணவர்தான். அவர் பதிப்புத்துறையில் நாற்பது வருட அனுபவம் உள்ளவர். அவருடைய அண்ணனின் மாமனார் ‘சாந்தா பதிப்பகம்’ நடத்தி வருகிறார். அதில் பதினேழு வருடங்கள் பணி செய்தார். பிறகே, இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினார். என்னுடைய பெயரின் முதல் எழுத்தும், அவர் பெயரின் முதல் எழுத்தும் சேர்ந்ததே கௌரா...’’ என நிதானமாகத் தொடர்ந்தார் கௌமாரீஸ்வரி.

‘‘சொந்த ஊர் தேனி அருகே சின்னமனூர். அப்பா அங்க நில அளவையாளரா பணி செய்தார். குடும்பத்துல என்னுடன் சேர்த்து ஆறு பிள்ளைங்க. எல்லாரையும் கஷ்டப்பட்டு அப்பா படிக்க வச்சார். நான் பெரியகுளத்துல எம்ஏ வரலாறு முடிச்சேன். நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். 1988ல் திருமணமாகி சென்னைக்கு வந்துட்டேன். கணவருக்கு சொந்த ஊர் சென்னை. அவர் வீடும் எங்க வீடு மாதிரி பெரிய குடும்பம். அண்ணன், அக்கானு ஆறு பேர். இவர் கடைசி. அவர் ‘சாந்தா பதிப்பக’த்தில் பணி செய்திட்டே என்னை தொலைதூரக் கல்வியில் நூலக படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வச்சார்.

ரெண்டு பசங்க பிறந்தாங்க. பிறகு, அரசுப் பணிக்கு விண்ணப்பிச்சேன். கிடைக்கல. அப்ப, சும்மா இருக்கிற நேரங்கள்ல சில நூல்களுக்கு பிழைதிருத்தும்படி சொல்வார். செய்து தருவேன். அப்படியே, இந்தப் பதிப்பகம் ஆரம்பிச்சதும் பிழைதிருத்தும் பணியை மேற்கொண்டேன். அந்த அனுபவம் பதிப்பாசிரியராக்கியது.

அடுத்து, என் கணவரின் ஆலோசனைப்படி எனது அண்ணன் ராஜேந்திரன் நிர்வாகத்தையும், எனது மகன்கள் ஜெய்கணேஷ் மற்றும் கெளதம் ஜீனா வடிவமைப்பையும் பார்த்துக்கறாங்க. இப்படியே, குடும்பமா சேர்ந்து இந்தப் பதிப்பகத்தை நடத்திட்டு வர்றோம்...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் கணவர் ராஜசேகர்.

‘‘முதல்ல பதிப்பகம் ஆரம்பிக்க முடிவானதும், ‘பொன்னி யின் செல்வன்’ நூல் போட பணம் தேவையா இருந்துச்சு. அதுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன்’ நூல் 250 ரூபாய்க்கு கிடைக்கும்னு விளம்பரம் பண்ணிட்டோம். செக் அனுப்புகிறவர்களுக்கு ஜனவரி 1ம்தேதி நூல் வந்து சேரும்னு சொன்னோம். அதனால, என் கணக்குள வங்கியில ஒரு லட்சம் ரூபாய் ஓவர்டிராப்ட் வேணும்னு கேட்டேன்.

இதுக்கிடைல இந்த விளம்பரம் கொடுத்த மறுநாள் முந்நூறு ரூபாய்க்கு செக் வந்தது. அப்புறம், முன்பதிவே 1400 நூல்கள் கேட்டாங்க. அதனால, ஓவர்டிராப்ட் வாங்க வேண்டிய அவசியமே ஏற்படல. வெளியில் ரொம்ப பேர் ஏமாத்திடுவாங்கனு எல்லாம் பேசினாங்க. ஆனா, வாசகர்கள் எங்களை நம்பினாங்க.

அப்பவே நாம் பதிப்புத் துறையில் சாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. இதன்பிறகு, ‘சிவகாமி யின் சபதம்’ போட்ேடாம். இந்நூலை வாங்கினால் கல்கியின் ஒன்பது நூல்கள் இலவசம்னு அறிவிச்சோம். அதையும் 250 ரூபாய்க்கு கொடுத்தோம். ‘அலையோசை’ வாங்கினால் ஆறு புத்தகம் இலவசம்னு சொன்னோம். ரொம்ப நல்லா போச்சு.

சம்பாதிக்க சம்பாதிக்க மறுமுதலீடும் பதிப்புத் துறையிலேயே போட்ேடாம். ‘பொன்னியின் செல்வன்’ மட்டும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமா வித்திருக்கோம். இன்னைக்கு வரை பதிப்பகம் நல்ல நிலையில் நடந்திட்டு இருக்கு. நாங்க பொதுமக்களை நம்பித்தான் புத்தகங்களை பதிப்பிக்கிறோம்.

அவங்க எங்கள கைவிடாமல் நூல்களை வாங்கிட்டு போறாங்க.இதுவரை திருக்குறள், இலக்கணம், இலக்கியம், கதை, கட்டுரை, அகராதி, ஆய்வுக்கட்டுரை, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம், தொழில்முறை, அயலகத் தமிழ் இலக்கியம், கடல்சார் நூல்கள், அறிவியல், வரலாறு, வாழ்வியல், கல்வியியல்னு 70க்கும் மேற்பட்ட வகைகளில் நூல்கள் வெளிவந்துள்ளன. பக்கங்கள்னு பார்த்தா இதுவரை சுமார் 30 கோடிக்கும் மேல் அச்சாகியிருக்கும்.

எங்க பதிப்பகத்தின் முதல் நூல்ல இருந்து இப்பவரை வருகிற எல்லா வெளியீடுகளிலும் மூன்றாம் பக்கம் என் அம்மா சாரதா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்போம். எங்ககிட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்காங்க. இன்னைக்கு ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் நூறு தலைப்புகள்ல புதுப் புத்தகம் கொண்டு வந்திட்டு இருக்கோம்.

என் மனைவி பதிப்பாசிரியரா இருக்கிறதாலதான் என்னால நல்லமுறையில் கொண்டு வர முடியுது. அவங்க ரொம்ப புரொஃபஷனலா இருக்கணும்னு நினைப்பாங்க. சின்ன பிழைனாலும் அச்சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னாடி கூட நிறுத்தியிருக்காங்க. அந்தளவுக்கு சின்சியர்.

‘விஞ்ஞானிகளும், கண்டுபிடிப்புகளும்’னு ஒரு நூல். அதுல ரெண்டாவது முறையா திருத்தின ஃபைலை அச்சுக்கு அனுப்பிட்டாங்க. அதுல நிறைய தவறுகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி வாசகர் ஒருத்தர் கடிதம் எழுதினார்.

பார்த்தா அது திருத்தின ஃபைல் இல்லை. அவங்க அதைப் பார்த்திட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அப்படியே தூக்கிப் போடச் சொன்னாங்க. பிறகு, அந்த வாசகருக்கு புதிய புத்தகத்தை அனுப்பி வச்சோம். ஒரு வாசகரை மதித்து இப்படி செய்றாங்களேனு அந்த வாசகரும் சந்தோஷப்பட்டார். இதுதான் எங்க வெற்றினு நாங்க நினைக்கிறோம்...’’ என ராஜசேகர் நிறுத்த, தொடர்ந்தார் கௌமாரீஸ்வரி.

‘‘வாசகர்கள் எங்கமேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கிறதால, அவங்களுக்கு நாங்க பல சலுகைகள் தர்றோம். வருஷத்துல மூணு முறை எல்லா நூல்களையும் பாதி விலைக்குக் கொடுக்கறோம். ஜனவரி 14ம் ேததியும், கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதியும், என் மாமியார் சாரதா அம்மாவின் பிறந்தநாளான நவம்பர் 19ம் தேதியும் இந்தச் சலுகையை வழங்கறோம். இதுதவிர, பாதி விலையில் நூல்கள்னு பெரியார் திடல்ல ஒரு கண்காட்சி நடக்கும். அங்கேயும் பாதிவிலைக்குக் கொடுப்போம்.

இதுல கலைஞர் பிறந்தநாள் எதுக்குனா, எங்களுக்குக் கலைஞரை ரொம்பப் பிடிக்கும். பதிப்பகம் ஆரம்பிக்கும் முன்புவரை அவரை ஒரு தலைவரா மட்டுமே தெரியும். 2003ல் அவர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு போன் வந்தது. சின்னக்குத்தூசி அய்யா சொல்லி கலைஞரின் கவிதை நூலைப் போட முடியுமானு கேட்டாங்க. அதைத் திருப்தியா செய்து கொடுத்தோம். அதுல சில பிழைகளைக் கூட நான் கடைசி நேரத்துல திருத்தி அனுப்பினேன். கலைஞர் ரொம்பப் பாராட்டினார்.

அவர் 2006ல் முதல்வராக இருந்தப்ப சால்வை, பொன்னாடைகளுக்கு பதிலா நூல்கள் கொடுக்கச் சொன்னார். நாங்கள் அந்த அடிப்படையில் இந்தச் சலுகைகளை வழங்க முடிவெடுத்தோம். அதில் அவரின் பிறந்தநாளையும் சேர்த்துக்கிட்டோம். பிறகு, அவரின் சிறுகதைகளைத் தொகுத்து ‘கலைஞரின் சிறுகதைப் பூங்கா’ நூல் போட்டோம். பிறகு, ‘கல்வி நிலையங்களில் கலைஞர்’, ‘காகிதப்பூ’, திமுக மாநாடு பற்றின நூலான ‘தீரர் கூட்டம்’னு ஐந்து நூல்கள் போட்டிருக்கோம்.

இப்ப கலைஞரின் கடிதங்கள் தயாராகிட்டு இருக்கு. இதுக்காக தளபதி ஸ்டாலின் கிட்ட புத்தகமா போடலாம்னு சொன்னதும் ஒப்புதல் தந்தார். ஏற்கனவே கலைஞர் 1968ல் இருந்து எழுதிய கடிதங்களை 11 பாக நூலாகக் கொண்டு வந்திருந்தாங்க. அதில், கலைஞர் சில கடிதங்களைத் திருத்தியும் இருக்கார். இப்ப எல்லாத்தையும் தொகுத்திட்டு இருக்கோம். கூடிய விரைவில் உடன்பிறப்புக்கு எழுதிய அந்தக் கடித நூல் வெளிவரும்...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் ராஜசேகர்.

‘‘நாங்க சலுகை மட்டுமல்ல; அம்மா சாரதாவின் நூற்றாண்டையொட்டி கடந்த 2017ல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நூல்களை இலவசமா கொடுக்க முடிவெடுத்தோம். அப்ப தமிழகத்துல உள்ள ஐநூறு அரசுப் பள்ளி நூலகங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை இலவசமா கொடுத்தோம். அதுமாதிரி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட திமு கழக அலுவலகத்திற்கும் நூல்கள் கொடுத்தோம். ’

பதிப்பு விஷயத்துல ஒரே விஷயம்தான் பார்ப்போம். தமிழர்களை இழிவுபடுத்துற நூல்களைப் போடுறதில்ல. ஆரம்பத்துல நாங்க எல்லாமே புதினம்தான் கொண்டு வந்தோம். கல்கியின் நூல்கள்தான். அப்புறம், யாருமே ெதாடாத இலக்கணம், இலக்கிய நூல்களைப் போட்டோம். சங்க இலக்கிய நூல்கள்ல நாங்க எளிய உரையா இருக்கிறதைத் தேர்வு செய்தோம்.

எங்ககிட்ட ஆசிரியர்கள் குழு இருக்கு. அவங்க எது மக்களுக்கு எளிதா புரியுமோ அதை தேர்ந்தெடுத்துச் சொல்வாங்க. உதாரணத்துக்கு, திருக்குறளுக்கு மட்டும் 1250 பேர் உரை எழுதியிருக்காங்க. நாங்க அதுல 20 பேர் உரையைப் போட்டிருக்கோம். எல்லாரும் போட்ட உரையை நாங்க போடுறதில்ல.

1929ல் ‘திருக்குறள் தீபாலங்காரம்’னு ஒரு நூலை லட்சுமி அம்மணி என்பவர் கொண்டு வந்தார். அவர்தான் முதல் பெண் உரையாசிரியர். இவர் மருங்காபுரி ஜமீன்தாரினி.

இந்நூலைத் தேடிப் பதிப்பிச்சோம். அப்புறம், 13 வகை அகராதி போட்டிருக்கோம். தவிர, மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டிருக்கோம். இதுல சில நூல்கள் விருதும் வாங்கியிருக்கு. இன்னும் நிறைய சிறந்த நூல்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொண்டு வரணும் என்பதே எங்கள் நோக்கம்...’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் ராஜசேகர். தலையசைத்து அதை ஆமோதிக்கிறார் கெளமாரீஸ்வரி.   

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்