அமெரிக்க ஆன்மாவின் அழுகிய பகுதி!



அதிர்ச்சி! பேரதிர்ச்சி! உலகிற்கே மக்களாட்சி நெறிமுறைகளைப் போதிக்கும் அமெரிக்காவிலா இப்படி? அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தை ஒரு கும்பல் தாக்கி கைப்பற்றுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோட, அந்த கும்பல் அவையிலும், அலுவலகங்களிலும் புகுந்து நாசவேலைகள் செய்வதும் சாத்தியமா? அத்தகைய வன்முறை கும்பலை அமெரிக்க அதிபரே ஊக்குவித்து வழிநடத்தி அனுப்பியதை நம்ப முடிகிறதா?

தேர்தலில் தோற்ற அதிபர் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மோசடி என்று கூறி அரசாங்கத்தை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தக்கவைத்துக்கொள்ள முயன்றது உண்மையாகவே நடந்ததா? இதென்ன கெட்ட கனவா? விபரீதக்  கற்பனையா?

ஜனவரி 6ம் தேதி அமெரிக்க தலைநகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் கிளர்ச்சிக்கு அழைக்கப்பட்ட மக்கள், காபிடல் என்ற பெயர் கொண்ட பாராளுமன்ற கட்டடத்தில் புகுந்ததும், அதன் மாடங்களிலும் கோபுரங்களிலும் ஏறி வெறியாட்டம் போட்டதும் உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் புரட்சி செய்வது வரலாற்றில் நடந்துள்ளது. ஒரு நாட்டின் அதிபரே மக்களாட்சி நெறிமுறைக்கு எதிராக வன்முறை கும்பலைத் தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயல்வதை என்னவென்று சொல்வது, புரிந்துகொள்வது?

உலகின் ஆகப்பெரிய பொருளாதார, ராணுவ வல்லரசு ஒரு மனநோயாளி கையில் சிக்கிக்கொள்ள முடியுமா? மனநோய்க்கு ஆதரவாகவும் மக்கள் கிளர்ச்சி செய்வார்களா? இப்போதைக்கு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்பட்டாலும் இந்த விபரீத உளவியல் குணமடையுமா?

இப்படியெல்லாம் அதிர்ச்சியில் மூழ்கும்போது வரலாற்றில் எதுவும் திடீரென நடப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க கனவிற்கும், மக்களாட்சி விழுமியங்களுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று அழகியது; மற்றொன்று அழுகியது.

வரலாறு உருவாக்கிய இரட்டை வேடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் Strange Case of Dr.Jekyll and Mr.Hyde என்றொரு புகழ்பெற்ற நாவலை எழுதினார். அதன் முக்கிய கதாபாத்திரமான டாக்டர் ஜெகைல் ஒரு பண்பான மனிதர். சமூகத்தில் மதிக்கப்படுபவர். ஆனால், அவரது அந்தரங்கத்தில் அவருக்கு ரகசிய ஆசைகளும், தீயகுணங்களும் ஒளிந்துள்ளன. அதனால் அவர் ஒரு மருந்தை அருந்தி ஹைட் என்ற பெயருள்ள மற்றொரு மனிதனாக மாறி இழிசெயல்களில் ஈடுபடுகிறார்.

நாவலின் இறுதியில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டபிறகு இந்த உண்மை வெளிப்படும். அந்த நாவலுக்குப் பிறகு, நல்லவனாகவும், கெட்டவனாகவும் ஒரே நபர் விளங்குவதைக் குறிப்பதற்கு ஜெகைல் அண்ட் ஹைட் போல என்று சொல்வது ஆங்கில மொழியில் பழக்கமாயிற்று.
அமெரிக்காவின் வரலாறும் அதுபோலத்தான். வட அமெரிக்காவில் சென்று குடியேறிய பிரிட்டிஷ் நாட்டவர்கள், பிரிட்டன் அரசாட்சியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சுதந்திர நாடாக தங்களை ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் என்று 1776ம் ஆண்டு அறிவித்துக் கொண்டார்கள்.

நவீன உலகில் முதல் முறையாக அரசன் என்று யாரும் இல்லாமல், அரசியல் நிர்ணய சட்டத்தை இயற்றி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே ஆட்சி செய்யும் முறையை உருவாக்கினார்கள். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்று முழங்கிய ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னமே அமெரிக்க விடுதலைப் பிரகடனம் வெளியானது.

இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான உறவைக் குறிப்பதாகவே ஃபிரெஞ்சு மக்கள் சார்பாக அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலையை (Statue of Liberty) கூறலாம். இப்படி மானுட வரலாற்றில் மக்களே சட்டங்கள் வகுத்து தங்களை ஆண்டுகொள்ளும் உன்னதமான மக்களாட்சி முறையின் பிரம்மாண்ட நவீன வடிவமாக உருவான அமெரிக்காவின் ஆன்மா இரண்டுவிதங்களில் பிளவுபட்டதாக இருந்தது.

ஒன்று-வெள்ளை இனவெறியின் அடித்தளம்; இரண்டு-தனி நபர் சுயநலம், வெற்றி மோகம், சொத்துக்குவிப்பு வெறித்தனம். இந்த இரண்டு வன்முறை மூலங்களே ஜனவரி 6ம் தேதி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வடிவத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தையே தாக்கி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இனவெறியின் தோற்றுவாய்வட அமெரிக்க கண்டத்தில் குடியேறிய வெள்ளையர் அமெரிக்க பூர்வகுடிகளை இரக்கமில்லாமல் கொன்றொழித்து, ஒடுக்கி, நிலத்தை அபகரித்து நாட்டை உருவாக்கினார்கள்; அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை அடிமைகளாக இறக்குமதி செய்து அவர்கள் உழைப்பினை இரக்கமற்று சுரண்டி தோட்டப்பயிர்களை உற்பத்தி செய்து, சுரங்கங்களில் கனிமங்களை வெட்டியெடுத்து செல்வத்தைக் குவித்தார்கள்.

அமெரிக்க பூர்வகுடிகள், கறுப்பின அடிமைகள் ஆகியோரை மனிதர்களாகவே கருதாமல் தங்கள் வெள்ளை நிற அடையாளத்தையே சுயமாக மாற்றிக்கொண்ட நிறவெறியின் மூலக்கூறு அமெரிக்கர்களின் உளவியலின் ஆழ்நிலைக் கட்டுமானம் என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் முதலீட்டிய தொழில்வளர்ச்சி பெற்ற வடமாநிலங்களுக்கும், தோட்டப் பயிர் உற்பத்தி, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தென்மாநிலங்களுக்கும் அடிமை முறையை ஒழிப்பது தொடர்பாக முரண்பாடு முற்றி உள்நாட்டுப் போர் மூண்டது.

ஆபிரஹாம் லிங்கனின் தலைமையில் யூனியன் என்ற முற்போக்கு வடமாநிலங்களின் ராணுவம், கான்ஃபெடரேட் என்ற பிற்போக்கு தென்மாநில ராணுவத்தை வென்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் நிறவெறிப் பாகுபாடு தொடர்ந்தது. இன்றுவரை சமநீதி சமத்துவத்திற்கான கறுப்பர்கள் போராட்டம் தொடர்கிறது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பர் ஒருவரை வெள்ளைக்காவலர் ஒருவர் சென்ற ஆண்டு மே மாதம் கழுத்தை மிதித்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் கிளர்ச்சிகளுக்கு இட்டுச் சென்றது. கான்ஃபெடரேட் ராணுவ தலைவர்களின் சிலைகள், நினைவிடங்கள் தாக்கி சிதைக்கப்பட்டன.
அதற்கு மறுதலையாக சென்ற வாரம் பாராளுமன்ற கட்டடத்தில் புகுந்த கும்பல் கான்ஃபெடரேட் கொடியை ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப்போரில் தலைநகரில் நுழைய முடியாத இனவெறி கான்ஃபெடரேட் கொடி நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்ததை அமெரிக்க ஊடகங்கள் அதிச்சியடைந்து விவாதிக்கின்றன.

சுயமோகம், வெற்றிமோகம் ஆகிய மனநோய் வடிவங்கள் அமெரிக்க விழுமியமான தனிநபர் சுதந்திரம் என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது மட்டுமல்ல. அதன் அடித்தளம், அடிநாதம் சொத்துரிமை என்பது தான். ஒரு நபர் எல்லையற்ற சொத்துக் குவிப்பில் ஈடுபடலாம், அரசு அதில் தலையிட முடியாது என்பது அமெரிக்காவின் முக்கியமான விழுமியம், கனவு. இதன் காரணமாகவே 20ம் நூற்றாண்டு முழுவதும் பொதுவுடைமை தத்துவத்தை எதிர்ப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டது அமெரிக்கா. இது உள்ளூரில் பெருந்தனவந்தர்கள் மீதான வழிபாடாகவும், சோசலிச வெறுப்பாகவும் மக்களின் உளவியலில் மாறியது.

அயல்நாடுகளில் சோசலிச ஆட்சியை கவிழ்ப்பதற்காக நேரடி ராணுவத் தாக்குதல் (வியட்நாம்); ராணுவ புரட்சிகளை ஊக்குவிப்பது (சிலி); மதவாத சக்திகளை ஊக்குவிப்பது (ஆஃப்கானிஸ்தான்) என்பன போன்று பல வடிவங்களை எடுத்தது.

இதன் விளைவாக அமெரிக்காவின் கீழ்மத்தியதர, ஏழை வெள்ளையின மக்கள்  முற்போக்கு வரிவிதிப்பின் மூலம் உபரி வருமானப் பகிர்வினைக் கோராமல், மக்கள் நல அரசினைக் கோராமல், கிறிஸ்துவ அடிப்படைவாதிகளாகவும். நிறவெறியர்களாகவும், பெருந்தனவந்தர்களை வழிபடுபவர்களாகவும் உருவாகியுள்ளார்கள். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் இத்தகைய பெரும்பான்மைவாத எதிர்ப்புரட்சி சக்திகள் உருவானாலும் அமெரிக்காவில் இவர்களுடைய அறிவுப்புல எதிர்ப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் அளவு தீவிரமானது.

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட அமெரிக்காவில், தீவிர அறிவுமறுப்பு குரல்கள் மக்களின் ஒரு சாராரிடம் உருவாவதை வர்க்கபேத வெளிப்பாடாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி போன்ற ஒன்றை நடத்தி புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் பெருந்தனவந்தரான டொனால்ட் டிரம்ப் இத்தகைய அறிவு மறுப்பு அடிப்படைவாத சக்திகளின் ஆதரவுடன்தான் அதிபரானார். அவர்களையே கலகம் செய்யத் தூண்டி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் அளவு அவருடைய பித்தம் தலைக்கேறியுள்ளதுதான் கவனிக்கத்தக்கது.

இத்தகைய மனநோய் விரைவாகப் பரவும் அளவு பலவீனமானவைதான் வர்க்கபேதம் நிறைந்த சமூகங்கள். மானுட வாழ்வில் தனித்துவங்கள் உண்டு; தனித்துவங்கள் ஆற்றல்மிக்க வெளிப்பாடு கொள்வது உண்டு; ஆனால், அவற்றை தனிநபர்களின் உடைமையாக்கி அவர்களை மாஸ்டர் என்றும், தலைவர் என்றும், தேவதூதர்கள் என்றும் வழிபடத் துவங்குவது சீரழிவிற்கே இட்டுச்செல்லும்.

நன்றாக யோசித்துப் பார்த்தால், அத்தகைய டிரம்ப் வழிபாட்டு மனநிலை தனிச்சொத்துரிமையை ஒரு மதமாக மாற்றிக்கொண்ட அமெரிக்காவில் இத்தகைய வெறிச்செயல்கள் எதிர்ப்புரட்சியாக வெளிப்படுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்க ஆன்மாவின் அழுகிய பகுதி என்றாவது வெளிப்பட்டுத்தானே தீரும்.

ராஜன் குறை