அணையா அடுப்பு - 34



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஆண்டவனுக்கு தோற்றம் உண்டா?

நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் வள்ளலாரின் ‘மஹோபதேசம்’ தொடர்கிறது...“ஒரு ஜாம நேரம் மனதில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதலால் -இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது. விசாரமென்று வழங்கி அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரம் என்கிறது தப்பு. அந்த அர்த்தமும் அன்று. சாரமென்கிறது துக்கம். விசாரமென்கிறது துக்க நிவர்த்தி. ‘வி’ உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது ‘வி’.ஆதலால் -விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால், இடைவிடாது நாம் விசார வசத்தராய் இருக்கவேண்டியது. மேலும் வி-சாரமென்பது வி-விபத்து, சாரம் - நீக்குதல், நத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

மேலும் -சிலர் ‘இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே? இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெறவேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?’ என்று வினவலாம்.ஆம். இஃது தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப் போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகின்றது சத்தியந்தான்.
ஆனால் -முன்சொன்ன ராக சம்பந்தமான பச்சைத் திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்த மாயா திரை, சுத்த மாயா திரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்தி லொரு கூறும் மேற்பாகத்தி லொரு கூறுமாக இருக்கும்.

கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்த மாயா திரை, மேற்பாகத்தில் சுத்த மாயா திரை இருக்கும். இவற்றில் அசுத்த மாயா திரை இகலோக போல லட்சியமுடையது. சுத்த மாயா திரை பரலோக சாத்தியத்தை உடையது.இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகம் செய்யும்போது, முயற்சி இல்லாத சாதாரண மனிதர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்த மாயையென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார்.

ஆதலால் -அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும் பஞ்சகிர்த்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன் முயற்சி செய்தே மேலேற வேண்டும்.மேலும் இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

ஆதலால் -நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால் ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயா திரையோடு கூடி மேற் பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.

கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்த மாயா  திரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்த மாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்த மாயா திரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க.

மேலும் -இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிர்த்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால் ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால் அதற்குத்தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.இதற்கு மேற்பட நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். ‘தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?’ என்று கேட்பவருக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.

இஃது உண்மையாக இருப்பதாகவே  முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

ஆனால் -ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். அதனால் நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும்.

அல்லது -அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்துகொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால் முக்கிய லாபம் போய்விடும்.

ஆகையால் -அவைகளில் லட்சியம் வைக்காமல் ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது. முன்சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் ‘இயல் வேதாகமங்கள் புராணங்கள்’ என்ற அருள்விளக்க மாலைப் பாசுரத்தாலும் உணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையும் தெரிந்துகொள்ளுங்கள்…”இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்த வேதங்கள், ஆகமம், புராணம், இதிகாசம் அனைத்தையும் வள்ளலார் புறக்கணிக்கச் சொல்கிறாரே என்கிற அதிர்ச்சியில் மக்கள் ஆழ்ந்தார்கள். அடுத்து என்ன வெடிகுண்டை வீசப்போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.வள்ளலார் தொடர்ந்தார்…

(அடுப்பு எரியும்)

தமிழ் மொழி

ஓவியம்: ஸ்யாம்