சத்தியத்தை நிறைவேற்றிய சிம்பு! ஈஸ்வரன் இயக்குநர் சுசீந்திரன் open talk



பொங்கல் கொண்டாட ‘ஈஸ்வரன்’  துணையோடு வருகிறார் சிலம்பரசன். இம்முறை செம ஸ்லிம் ஃபிட் உடம்போடு மண்மணக்கும் கிராமத்து காளையாக மீண்டும் களமிறங்கியிருக்கிறார். கூடவே நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா என கலர்ஃபுல் ஜிலேபிஸ் புன்னகைக்கிறார்கள். 
படத்தின் இயக்குநரான சுசீந்திரன், இதில் முதன்முறையாக சிம்புவோடு மட்டுமல்ல, தமன், திரு என கலக்கல் காம்போவுடன் கைகோர்த்திருக்கிறார். ‘‘இந்தக் கதை உருவானதே, எதேச்சையானது. லாக்டவுன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாங்க எங்க ஃபேமிலியோடு குல தெய்வக் கோயிலுக்கு போயிருந்தோம்.

அப்பாஅந்த ஏரியாவுல உள்ள ஒரு ஜோஸ்யர்கிட்ட ஜாதகம் பார்ப்பது வழக்கம். அந்த ஜோஸ்யர் எல்லாத்தையும் கடகடனு நிறுத்தாம சொல்வார். இது அவர் ஸ்பெஷல். அப்படி அவர், ‘இந்த குடும்பத்துல ஒரு எண்ணிக்கை குறையும்’னு ஓர் அதிர்ச்சியையும் சொன்னார். எங்களுக்கெல்லாம் மனசு சங்கடமாகிடுச்சு. எங்க அப்பா அதுல அப்படியே ஸ்டன் ஆகிட்டார். ஏன்னா, எங்க அப்பாவின் குடும்பங்கறது ரொம்ப பெருசு. அவர் கூடப்பிறந்தவங்க, பசங்கனு எல்லாருமே எண்ணிக்கைல சேருவாங்க.

ஸோ, பல ஆங்கிள்ல அவர் யோசிக்க ஆரம்பிச்சிட்டார். ரெண்டு மூணு நாள் அதையே நினைச்சிட்டு இருந்தார். ஆறுதல் சொல்றதுக்காக, ‘எதிர்காலத்தை கணிக்க யாராலயும் முடியாதுப்பா’னு அவர் மனசை தேத்த முயற்சி பண்ணினேன். ஆனாலும் அவர் ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருந்தார்.

இந்த இன்ஸிடெண்ட் என்னையும் பாதிச்சது. அந்த தருணங்களை வச்சு உருவான கதைதான் இந்த ‘ஈஸ்வரன்’. பக்கா கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெயினர் இது...’’ எமோஷன் துளிர்க்க பேசுகிறார் படத்தின் இயக்குநரான சுசீந்திரன். லாக்டவுன் சூழல்லயும் கலக்கறீங்க...?
நல்ல டீம் அமைஞ்சதுதான் காரணம். லாக்டவுன்னால யாரையும் சந்திக்கல. ஹீரோ முதல் அத்தனை ஆர்ட்டிஸ்ட்களையும் போன்கால்ஸ்லதான் கமிட் பண்ணினோம்.

மாளவிகா மோகனன், கீர்த்திசுரேஷ்னு நிறைய ஹீரோயின்ஸ்கிட்ட பேசினதுல, நிதி அகர்வால்தான் எங்க தேதிகளுக்கு மேட்ச் ஆனாங்க. இயக்குநர் இமயம் பாரதிராஜா சார், பாலசரவணன், காளிவெங்கட்னு பலர்கிட்ட ஏற்கெனவே சொல்லி வச்சிருந்ததால, அவங்களும் ரெடியா இருந்தாங்க.
ஹீரோ சிம்பு இதுல பழனி மலையடிவாரத்துல பஞ்சாமிர்தக் கடை வச்சிருக்கறவரா வர்றார். பக்கத்து கிராமத்து பெரியவரான பாரதிராஜாவை அவர் எப்படி மீட் பண்றார், அவங்களுக்கிடையே என்ன உறவு... அதனால என்ன அவருக்கு பிரச்னைகள்... இதெல்லாம் மீதிக்கதை. கதையும் லாக்டவுன்லதான் நடக்குது.

இந்தக் கதைக்குள் சிம்பு வந்ததே திடீர் சர்ப்ரைஸ்தான். ஏன்னா இதை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி விக்ரம்பிரபுவை வச்சு, ஒரு புராஜெக்ட் ப்ளான் பண்ணினோம். லாக்டவுன்னால அது டேக் ஆஃப் ஆகல. அப்புறம், ஜெய்ய வச்சு, ‘குற்றம் குற்றமே’னு ஒரு படம் ஷூட் போனோம். ஊர்ல உள்ள எங்க தோட்டத்திலேயே இருபது நாட்கள் ஷூட் போயிட்டு வந்தோம்.

இடையே ‘சிவசிவா’னு ஒரு பைலாங்குவல் படம் ஷூட் போச்சு. தமிழ்ல ஜெய்யும், தெலுங்கில் ‘மரகத நாணயம்’ ஆதியும் நடிச்சிருக்காங்க. அந்த படம் தொடங்குற டைம்லதான் ‘குற்றம் குற்றமே’ புரொட்யூசர் துரை ‘சிம்புக்கு உங்ககிட்ட கதை இருக்கா’னு கேட்டார். உடனே சிம்பு சாருக்கு ஜூம்ல கதை சொல்ல, அவருக்கும் பிடிச்சுப் போச்சு. அதே வேகத்துல திண்டுக்கல் பக்கம் ஷூட் கிளம்பி படத்தையும் கொண்டு வந்துட்டோம்.   

ஒளிப்பதிவாளர் திரு சாரை என்னோட முந்தைய படங்களின் கேமராமேன் வேல்ராஜ் சார் ரெஃபர் பண்ணினார். நான் ப்ளான் பண்ணின வேகத்துக்கு அவர் வந்தார். 35 நாட்கள் திட்டமிட்டோம். ஆனா, 32 நாட்கள்ல முடிச்சுட்டோம். அதுக்கு அவரும் ஒரு காரணம்.
தமன் பிரதர் சவுண்ட் பிரமாதமா இருக்கும். ஆனா, நேட்டிவிட்டி படங்கள் அவர் பண்ணினதில்ல. யுகபாரதி வரிகளுக்கு அவர் பிரமாதமா டியூன் போட்டிருக்கார்.

என்ன சொல்றார் சிலம்பரசன்..?

சிம்பு சார்கிட்ட 45 நிமிஷங்கள்ல முழுக்கதையையும் சொல்லிட்டேன். ரசிச்சு கேட்டுட்டு, ‘ரொம்ப பாசிட்டிவ்வா இருக்கு... பண்றோம்’னு சொல்லி சந்தோஷமா வந்து பண்ணிக் கொடுத்திருக்கார். இதை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இன்னொரு படமான, ‘சிவசிவா’ பண்ணியிருந்தேன். ‘ஈஸ்வரனை' ஸ்டார்ட் பண்ணின டைம்ல பலருக்கும் ஒரு கேள்வி வந்துடுச்சு. ‘சிம்பு ‘மாநாடு’ பண்றார். ‘பத்து தல’ பண்றார். அதனால இந்தப்
படத்து ஷூட்டுக்கு ஒழுங்கா வருவாரா’னு இழுத்தாங்க. நானுமே கூட கொஞ்சம் பயந்தேன்.

ஆனா, சிம்புவே தைரியம் கொடுத்தார். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ தயாரிப்பாளர் பாலாஜி சார், இந்தப் படத்தை தயாரிக்க ஆர்வமா முன்வந்ததால, உடனே ஷூட் கிளம்பினோம். சிம்பு  என்கிட்ட பிராமிஸ் பண்ணினது மாதிரியே நடந்துக்கிட்டார். அதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு ஒருநாள் முன்னாடி அவர் என்னைக் கூப்பிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க பிரதர். நான் சொன்னது மாதிரி ஷூட்டுக்கு வருவேன்’னார். வந்தார். நடிச்சார். முடிச்சுக் கொடுத்தார்.

ஸ்பாட்டுல கூட, ‘இந்த சீன் எடுக்க கொஞ்சம் டைம் எடுக்கும்’னு நினைச்சிருப்பேன். ஆனா, நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப குயிக்கா அந்த சீனை எடுத்து முடிச்சிருப்போம். இன்னொரு விஷயம், யூனிட்ல இருந்த அத்தனை பேர்கிட்டயும் சமமா பழகினார். இதை சொல்றதுக்கு காரணம், இதுக்கு முன்னாடி அவர் படங்கள்ல அவரோட நடிச்சவங்கதான் திரும்பத் திரும்ப வந்துட்டே இருப்பாங்க. ஆனா, இந்த படத்துல அத்தனை பேருமே அவரோடு இதுவரை நடிக்காத ஆர்ட்டிஸ்ட்ஸ். இப்படி அவர் ஈக்குவலா பழகினதுல எல்லாருமே ஹேப்பி. படத்துல ஒரு பாடலையும் பாடிக் கொடுத்தார்.

ஹீரோயின் நிதி அகர்வால் செம க்யூட்டா இருக்காங்க..?

இதை அவங்க கேட்டா, சந்தோஷப்படுவாங்க. நிதி அகர்வால், ரொம்ப சின்ஸியர். ஹீரோயின்கள் கேரவன் போனா, திரும்ப அதிலிருந்து இறங்கி வரவே டைம் எடுப்பாங்க. ஆனா, நிதி அப்படியில்ல. கேரவனுக்கே போக மாட்டாங்க. சொன்ன டயத்துக்கு வந்து நிப்பாங்க. சில ஹீரோயின்ஸை தமிழ் சினிமா மிஸ் பண்ணக்கூடாதுனு நினைப்போமில்லையா... அப்படி ஒரு ஹீரோயினா நிதியை சொல்லலாம்.

கடைசிநாள் ஷூட் அப்ப, நிதிக்கு அடுத்த நாள் காலைல உதயநிதி சார் பட ஷூட் இருந்துச்சு. ஆனா, இது க்ளைமேக்ஸ் சீன். அவங்க நைட் ஒன்பது மணி வரை இருந்தாகணும். சூழலை உணர்ந்து அவங்களோட விமானத்தை கேன்சல் செய்துட்டு நடிச்சுக் குடுத்தாங்க. நந்திதா ரோலும் பேசப்படும். அவங்க  நல்லா தமிழ் பேசக்கூடிய பொண்ணு. இன்னும் வெயிட்டான ரோல் கொடுத்தாக்கூட செமையா வெளுத்து வாங்குவாங்க. அதுக்கான ஸ்பார்க்கும், ஸ்பீடும் அவங்ககிட்ட நிறையவே இருக்கு.

மை.பாரதிராஜா