ஒரு நல்ல ஸ்கிரிப்ட்தான், கேமராவோட தன்மையைத் தீர்மானிக்கும்!



அழுத்தமாகச் சொல்கிறார் கவிஞர் அறிவுமதியின் மகனான ஒளிப்பதிவாளர் இராசாமதி

‘‘படிக்கும்போதே சினிமான்னா விருப்பம். கொஞ்சமும் சலிக்காமல் சினிமா பாத்துக்கிட்டே இருந்திருக்கேன். ஆனால், அதே சமயம் படிப்பில் ஒரு குறையும் வைக்கிறதில்லை. கவிஞர் அறிவுமதிதான் என் அப்பா. அவர் சினிமாவைப் பத்திப் பேசுறதும், பாடல்கள் எழுதுவதும், பாலு மகேந்திரா பற்றி பேசிக் கேட்டதும் உள்ளுக்குள்ளே சினிமா மீது பிரியம் வரக் காரணமாக இருந்திருக்கலாம்.

தரமணி இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவாளராகப் பயிற்சி பெற்றதும் அதற்கான உத்வேகம் வந்தது. இத்தனை கோடி மக்களை இம்ப்ரெஸ் பண்ற மீடியாவில் இருக்கோம் என்பதுதான் சந்தோஷம். ஆனால், அதே நேரம் நம்ம ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் துணையாய் இருக்கணும் என்பதையும் முக்கியமாகக் கருது வேன்...” இளம்வெயிலையும் காற்றையும் ரசித்தபடி பேசுகிறார் இளம் ஒளிப்பதிவாளர் இராசாமதி. ‘சர்க்கரைக்கட்டி’ தொடங்கி இப்போது ‘கபடதாரி’ வரை முத்திரை பதித்து கடந்து வருகிறார்.

ஒரு சினிமாவை எப்படி எதிர்கொள்வீங்க..?
‘இதுதாங்க ஸ்கிரிப்ட் புத்தகம்... படிச்சிக்கங்க’னு கொடுத்தால், அவங்களையே வச்சுக்கச் சொல்லிட்டு கதை சொல்லச் சொல்லிக் கேட்பேன். டைரக்டர்களின் வார்த்தைகளில் சொல்லும் போது நமக்குள்ளே அவங்க விருப்பப்படி ஒரு சித்திரம் விரியும் பாருங்க… அது அசலா இருக்கும். எனக்கு செய்கிற ஒவ்வொரு படமும் தவம்தான். டைரக்டரின் அனுபவ சாயலை எல்லோரும் உணரும்படி செய்வது பிரதான வேலை.

நாமாக எதையும் திணித்துவிடாமல் இயல்பாக கதாபாத்திரங்களின் தன்மையை டைரக்டர்களின் விருப்பத்தில் செய்தாலே போதுமானது.
ஒரு நல்ல ஸ்கிரிப்ட்தான், கேமராவோட தன்மையைத் தீர்மானித்து ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் ஒரு நல்ல புரிதலைக் கொண்டு வந்து சேர்க்குது.

நான் ஒவ்வொரு தடவையும் கூட இருக்கிற டைரக்டர்கள் கிட்ட பிரமாதமான அலைவரிசையில் இருந்திருக்கேன். கொஞ்சமும் சோர்வில்லாமல் வேலை பார்த்துக்கிட்டே இருப்பேன். அடுத்த கட்டமெல்லாம் தெரியாது. இனி என்னன்னு ரொம்பவெல்லாம் பார்க்கிறது இல்லை. ஆரோக்கியமான மனசோட, சந்தோஷமா கதையை உள்வாங்கி வேலை செய்தால், நம்மை காலம் வந்து தூக்கி போய்க்கிட்டே இருக்கும். அது சத்தம் போடாமல் நமக்கே உணரமுடியாதபடி கூட நடக்கும்.

எனக்கு ஒரு சின்ன ஏணி கிடைச்சால் போதும்... ஆனால், அந்த ஏணி எங்கே இருக்குதுன்னு தான் தெரியலைனு முழிச்சிக்கிட்டு இருந்ததெல்லாம் ஞாபகம் வரும். ஒளிப்பதிவாளரின் பொறுப்பு விளையாட்டு இல்லை. அது உணர்ந்து செய்கிற வேலை. திரைமொழியில் ஒளிப்பதிவின் பங்கென்ன...
ஒளிப்பதிவின் அடிப்படை பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கு. சீன் காம்போசிஷன், லொகேஷன், ஒரு காட்சியை ஆரம்பிக்கிற விதம், கேமராவின் நடமாட்டம், லைட்டிங்னு அத்தனை நுட்பங்களையும் சேர்த்தே இயங்கிட்டு இருக்கு.

இங்கே நமது நம்பிக்கை நியாயமாயிருந்தால் நமக்கொரு இடம் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு அனுபவமாக ஆக்கித்தரணும் என்பதிலும் ஒளிப்பதிவாளனுக்குத் தனிப்பட்ட கவனம் இருக்கணும். அது எங்கே மீண்டும் பார்க்கப்பட்டாலும் நமக்கான பொறுப்பு எப்படி இருந்ததுன்னு பேசப்படும். ஒரு சினிமாவை எடுத்திட்டு அது பலருக்கு பிடிக்கலாம்... சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அதை எடுத்தவன் என்ற முறையில் எனக்கு அது பிடிச்சிருக்கணும்னு பார்ப்பேன்.

முன்னாடி ஃபிலிமில் படம் பிடிக்கும்போது அது எப்படி வரும் என்பது பெரிய மர்மமாயிருந்தது. ஜாம்பவான்கள் மட்டுமே அதில் குழப்பமில்லாமல் இருந்தார்கள். டெலிசினி முடிந்து வருகிற வரைக்கும் தூங்காமல் இருந்தவர்கள் உண்டு. இப்போ ஷாட் பார்த்து சுலபமா திருத்திக் கொள்ள முடியுது. எப்படி இருந்தாலும் படத்தின் நடைமுறைக்கு அணுக்கமான வண்ணம் பூசுறதுதான் ஒளிப்பதிவு. நிறைய டெக்னாலஜி மாறுதே! இனி எப்படியிருக்கும் சினிமா?

சினிமா ரொம்பவே மாறும். சடசடன்னு மாற்றங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்துகிட்டே இருக்கு. இன்னும் ஐந்தாறு வருஷத்துக்குள்ளே VFX ஸ்டூடியோவோடு படத்தயாரிப்பு நிறுவனம் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். லொகேஷன் போகாமல், எந்த இடத்தையும், அழகையும், பிரம்மாண்டத்தையும் ஒரு ஸ்டூடியோவுக்குள்ளேயே கொண்டு வந்திட முடியும்னு வேலைகள் நடக்குது. அதுக்கு ஆகிற செலவுகள் பற்றித்தான் இன்னும் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.

கேமராக்கள் எல்லாம் நவீனத்தின் எல்லையைத் தொட்டுட்டு, சமயங்களில் தாண்டியும் நிக்குது. தொழில்நுட்பமா நாம் வேற இடத்திற்கு போக வேண்டிய நேரம் இது. உட்கார்ந்து இருக்கிற இடத்தில் ஒளிப்பதிவுக்கு தேவையான எல்லா சவுகரியமான விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், அதை நல்லா பயன்படுத்திக்கிட்டால்தான் சினிமாவுக்கு அழகு. இப்பவெல்லாம் ரசிகர்கள் வேண்டியதற்கு மேல அலங்காரங்களை சினிமாவில் எதிர்பார்க்கிறது இல்லை என்பதே உண்மை.

வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க என்ன தோணும்..?

என்னை வாகாக ஓர் இடத்திற்கு கொண்டு வந்த என் அப்பாவை முக்கியமா சொல்லணும். புதியவனாக படிப்பை முடிச்சிட்டு வந்தவனைக் கூப்பிட்டு படம் கொடுத்த கலாபிரபு, தாணு சார் இவர்களை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது. இன்னமும் சினிமாவைப் பொறுத்தவரை தாணு சார்தான் என் ரெண்டாவது அப்பா. என் கையைப் பிடிச்சுக்கிட்டு நடத்தி வருகிற மாதிரி அவர் இருக்கிறது எனக்கு பெரிய விஷயம்.

எனக்கு விவசாயம்னா உயிர். கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஊருக்கு போயி தார்பாய்ச்சலா வேட்டியைக் கட்டிக்கிட்டு மண்வெட்டிய தூக்கிட்டு வயக்காட்டில் இறங்கிடுவேன். விளைகிற மண்ணை மறந்தால் நமக்கு வேற நாதியுமில்லை... வேற மார்க்கமுமில்லை. மனைவி மதி எனக்கு அற்புதமான தோழி. இப்போ நிறைமாத கர்ப்பிணி. நாங்க இருவரும் கொஞ்சித்தீர்க்க ஒரு நந்தலாலாவுக்காகக் காத்திட்டிருக்கோம்!

நா. கதிர்வேலன்