சிறுகதை - சரோஜா எழுதிக்கொண்டது...



முக்கிய பிரமுகர்களும் உறவினர்களும் வருகிறபோதெல்லாம் கூடுதலாய் பொங்கி துண்டை வாயில் பொத்தி அழுதான் கணேசன்.ஐஸ் பெட்டிக்குள் படுத்திருந்தவளைப் பார்த்த குழந்தைக்கு இனி அம்மா இல்லை என்று புரியாவிட்டாலும் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து சிரிக்காமலும் அழாமலும் வெறித்தபடி நின்றது.

எல்லா நிறத்திலும் பூக்கள் சிதறிய ஷிபான் புடவை கட்டியவள் செருப்பை சுலபமாய் திருடிவிட முடியாத இடம் தேர்வுசெய்து கழற்றிவிட்டு வந்து, ‘‘எப்படி மாமா? நல்லாத்தானே இருந்தா!’’ என்றவள் வராத கண்ணீரைத் துடைத்தாள்.கணேசனோ பெட்டிக்குள் பார்த்து ஆவேசமாய், ‘‘சந்தோஷமாதானடி வெச்சிருந்தேன். பீரோ முழுக்க புடவையா ரொப்புனனே... சாமிக்கு அலங்காரம் மாதிரி நகை நகையா வாங்கிப்போட்டனே...’’ கத்தி மார்பில் குத்திக் கொண்டவனை பலரும் தடுத்துத் தாங்கினார்கள்.

இடுப்பில் செல்போன் செருகி யிருந்த மூதாட்டி வரும்போதே அலறினாள், ‘‘சரோஜா… இப்படிப் பண்ணிட்டியேடி பாவி! அல்பாயுசுல சவமாப் போயிட்டியேடி சண்டாளி!’’மூதாட்டியை அணைத்துக் கொண்டபோது பாரம் தாங்காமல் தடுமாறி சமாளித்து நின்றான் கணேசன்.

வீட்டுக்கு வெளியே வாடகைக்கு எடுத்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் உள்ளே துக்கம் விசாரித்து முடித்தவர்கள் குரல் தாழ்த்தி அரசியல், சினிமா பேசினார்கள். இருபதில் பத்து பேர் மொபைலில் மீம்ஸ் பார்த்தார்கள். லேப்டாப் பேகுடன் அந்த ஜீன்ஸ் இளைஞன் மட்டும் கூட்டத்தில் துருத்தலாய் இருந்தான்.

இரண்டு பேர் காகித கோப்பைகளில் தண்ணீரும், காபியும் கேட்டுக் கேட்டு விநியோகித்தார்கள். வந்த ஜனங்களின் கார்களும், மோட்டார் பைக்குகளும் ஒழுங்கில்லாமல் நிறுத்தப்பட்டிருக்க… வீட்டின் வாசல் வரை எம்.எல்.ஏவின் கார் வருவதற்காக மூன்று பேர் அவற்றை நகர்த்தி நிறுத்தினார்கள்.
கன்னித் தீவில் சிந்துபாத் படித்துவிட்டு ராசி பலன் முடித்து செய்தித்தாளை குறுக்கில் மடித்து பக்கத்து சேரில் போட்ட கழுத்தில் கர்ச்சீப் வைத்த ஒரு சித்தப்பா கேட்டார்.

‘‘இன்னும் யாரு வரணும்?’’
‘‘எம்.எல்.ஏ. வர்றாராம்...’’‘‘ஸ்கூல் புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தர்ற பொண்ணு இப்படி லூசாட்டம் பூச்சி மருந்து குடிச்சிருச்சே..?’’
‘‘அதாங்க கடுப்பாகுது. ஊர் உலகத்துல வியாதி யாருக்கு வரல? எல்லார் வீட்லயும் மாத்திரைக்கு தனி டப்பாவே இருக்கு...’’
மூங்கில் பாடை தயாராவதை நான்கு பொடியர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். பத்து மாலைகள் சேர்ந்து முகம் மறைக்கும்போது அள்ளித்தூக்கி மயானத்திற்குப் போகிற வேன் மீது போட தனிப்படை வேலை பார்த்தது.

யூனிஃபார்ம் அணிந்த சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாண்ட் போட்ட பைக்கில் சாய்ந்து போனில் பேசினார்.
‘‘போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரு குழப்பமும் இல்ல சார். பூச்சி மருந்துதான் குடிச்சிருக்கா. மிச்சம் இருந்த டப்பால கைரேகை எடுத்துப் பார்த்துட்டேன். வவுத்து வலி தாங்காமதான் தற்கொலை சார். வேற சந்தேகப்படும்படியா எதுவும் இல்ல. ஹஸ்பண்ட் பத்தி எல்லாரும் நல்ல விதமாதான் சொல்றாங்க...’’ஜீன்ஸ் இளைஞன் எழுந்து நடந்து பின் பக்கம் வரிசையாக நின்ற மரங்களுக்குப் பின்னால் சென்று ஜிப்பை இறக்கி பாரம் இறக்கிவிட்டு குழாயில் கை கழுவினான். குசுகுசுவென்று இருவர் பேசுவது கேட்டது.

‘‘சரோஜா சரோஜான்னு உசுரை விடுவானேடி இவன்… தீபாவளி, பொங்கலுக்குதான் நம்ம வீட்ல புதுத்துணி... இவன் மாசா மாசம் பட்டும் பனாரசுமா வாங்கிக்குடுப்பானே...’’ என்றாள் அவள்.‘‘போலீஸ் கேசானதால பொணத்தை அறுத்துக் கட்டிதான் குடுத்தாங்களாம்... ஒரு கடுதாசி கிடுதாசி எழுதிவெச்சிட்டுப் போயிருக்கக் கூடாது?’’ என்றாள் இன்னொரு அவள்என் பெயர் சரோஜா. சின்ன ஊரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியை. கணவர் பெயர் கணேசன். கொஞ்சம் நிலம் உண்டு. தவிர பூச்சி மருந்து வியாபாரம்.சம்பாரிக்கும் பணம் எல்லாம் விவசாயிகளின் பெயரில் நோட்டுப் புத்தகத்தில் வரவேண்டிய கடனாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அப்பாவுக்கு என்னை என்ஜினியர் இல்லை டாக்டருக்கு கட்டிக் கொடுக்க ஆசை.

பிஏ தமிழ் படித்த (எங்கள் ஊர் அரசு கல்லூரியில் அதுதான் கிடைத்தது) எனக்கு எந்த டாக்டரும், என்ஜினியரும் கிடைப்பான்?
எனக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள், பார்த்தார்கள்… பாத்துக்கொண்டே இருந்தார்கள். ஏழு மாப்பிள்ளைகள் வந்து கடையில் வாங்கிய பாதுஷாவும், வீட்டில் செய்த மெதுவடையும் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். பாதுஷா என்பது ஜாங்கிரி, மைசூர் பாகு என்று மாறும். மெதுவடை என்பது பஜ்ஜி, போண்டா என்று மாறும். ஆனால் ‘சொல்றோம்’ என்கிற பதில் மட்டும் மாறாது.

‘என்னதான்யா சொல்றிங்க?’ என்று வம்படியாக அப்பா போன் செய்து கேட்டால் ‘சின்ன ஊரா இருக்குன்னு பாக்கறோம்…’ என்று ஒரு பதில் வரும். ‘பொண்ணு லட்சணமா இருக்கு. ஹைட்டுதான் அஞ்சி புள்ளி ஒண்ணா இருக்கேன்னு யோசிக்கிறோம்...’ என்று ஒரு பதில் வரும். ‘பொண்ணு வாங்கற சம்பளம் கம்மியா இருக்கேன்னு யோசனை...’ என்று ஒரு பதில் வரும்.

நான் சொந்தமும், ஊரும் சொல்கிற அத்தனைப் பரிகாரங்களும் (மண் சோறு, பால் காவடி உள்பட) செய்து பார்த்து… ராத்திரிகளில் ரகசியமாகக் குளித்து, சினிமாக்கள் பார்ப்பதைத் தவிர்த்து… வெளியே செல்லும் போதெல்லாம் ‘யாராவது நாம ஓடிப்போலாமா..? என்று கடிதம் கொடுங்கள், ஓடி வந்துவிடுகிறேன்...’ என்று மனம் வெதும்ப ஆண்களைப் பார்ப்பேன்.

அப்பா என்னையும், அம்மாவையும் அழைத்து அன்று சொன்னார், ‘கணேசன் நல்லவன். உரக்கடை வெச்சிருக்கான். பீடி, சாராயம் பழக்கம் இல்ல. ஆள் ஜம்முன்னு இருப்பான். வசந்தா வீட்டு கல்யாணத்துலகூட பாத்தமே...’‘அவனோட தம்பி யாராச்சும் இருக்காங்களா?’ என்றாள் அம்மா.
‘அவனுக்குதாண்டி பொண்ணு தேடிட்டிருக்காங்க...’‘அடப்பாவி மனுஷா! அவனுக்குதான் கல்யாணமாகி குழந்தையும் இருக்கே... பொண்டாட்டி செத்து ஆறு மாசம்கூட ஆகலை… அதுக்குள்ள புது மாப்பிள்ளை ஆகறானா? அவனுக்குப் போயி ரெண்டாந்தாரமா… எப்படி மனசு வந்துச்சி உங்களுக்கு?’ கத்தினாள் அம்மா.

‘அம்மா… எனக்கு சம்மதம்!’ என்றேன் அழுத்தமாக.பிரசவ வலி எப்படி இருக்கும் என்று உணராமலேயே தாலி கட்டின அடுத்த விநாடி எனக்கு ஓர் குழந்தை. இது போனஸ் இல்லையா? முப்பத்தி இரண்டு வயதாகியும் ஒரு மாப்பிள்ளையும் தேறாமல், ஒரு விடலையும் சைட் கூட அடிக்காமல் நொந்துபோன எனக்கு இரண்டாம் கையாகத்தான் கணவன் கிடைப்பான் என்பது எழுதி வைக்கப்பட்ட விதியென்று மனதைத் தேற்றிக் கொண்டேன். மனதின் ஆழத்தில் புருஷ சுகத்தின் ஏக்கம்தான் சமாதானப்படுத்தியது என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

காமம் என்ன தப்பான விஷயமா? வயிற்றின் பசியைப் போல உடலின் பசியும் இயற்கையே செய்து வைத்திருக்கும் ஏற்பாடுதானே? மெனக்கெட்டு விதை போட்டு உற்பத்தி செய்வதா காமம்?குழந்தையை என் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு என் கணவர் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் உடல் நெருப்பாகக் கொதிக்க காத்திருந்தபோது ஜரிகை வேட்டியுடன் வந்த மணாளன் முகம் பார்க்காமல் இரண்டு வரியில் சொன்னார்.

‘இந்தக் கல்யாணம் நடந்தா நாப்பது நாள் விரதம் இருந்து நடந்தே வர்றேன்னு குலதெய்வத்துக்கு வேண்டிருக்கேன். அதனால…’
வருடக் கணக்கில் மோகம் சுமந்தவளுக்கு நாற்பது நாள் என்ன பெரிய பிரச்னை! ஆனால், நாற்பது நாளாகி கோயிலுக்குப் போய் வந்த பிறகும் அவரின் போக்கு எனக்குப் புரியவில்லை.பார்சல் வாங்கிய பிரியாணி பொட்டலத்தின் நூலை எடுத்து, பிரித்து வைத்துக்கொண்டு ஆனால், சாப்பிடாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்களா யாராவது? செய்தார். பிறகு ரொம்ப நேரம் கழித்து சாப்பிட முயற்சி. கையில் எடுத்த கவளத்தை உதறிவிட்டு எழுந்து ெசன்று கை கழுவுவார்களா யாராவது? செய்தார்.

மீண்டும் உடுத்திக்கொண்ட என்னருகில் தயங்கி வந்து தரை பார்த்து சொன்னார், ‘மன்னிச்சிடு சரோஜா…’நான் எதுவும் பேசவில்லை.பல இரவுகளில் தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்.‘அப்புறம் குழந்தை எப்படி?’ என்றேன் ஒரு நாள்.‘அது… கேக்காத! தயவு செஞ்சி கேக்காத! உன் கால்ல வேணாலும் விழறேன். கேக்காத! அதைக் கேட்டு அடிச்சி தொலச்சதுக்குதான் ரோஷம் தாங்காம கிணத்துல குதிச்சி செத்துட்டா அவ. தவறி விழுந்து விபத்துன்னு எல்லாரும் நம்புனாங்க. நல்ல வேளை கடுதாசி எதுவும் எழுதி வைக்கல...’ என்றார்.நான் அதிர்ந்து போய் அவர் முகத்தையே பார்த்தேன்.

‘எல்லா நெல்லுக்குள்ளயும் அரிசி இருக்கா என்ன? சிலது வெத்து சாவியா முளைச்சிடறதில்லையா? எத்தனை சேலை எடுத்துக் குடுத்திருப்பேன்… எத்தனை நகை போட்ருப்பேன். ஒழுக்கமா இருக்க முடியாதா? எவனோடயோ தப்பு செஞ்சி உண்டாய்ட்டா. யோசிச்சிப் பார்த்தேன். ஒரு குழந்தை பொறந்தாதானே என்னையும் ஆம்பளைன்னு ஊரு ஒத்துக்கும். எதுவும் கேக்காம இருந்துட்டேன். ஒரு நாள் வேற ஒரு விஷயத்துல கோபம்! அப்ப வாய் வார்த்தை வளர்ந்தப்ப பொறுக்கமுடியாம கேட்டுத் தொலைச்சுட்டேன்...’சட்டென்று என் காலில் விழுந்தார்.

‘தயவுசெஞ்சி வெளில சொல்லாத சரோஜா. மானம் போய்டும்! நல்லது கெட்டதுக்கு கூப்புடறாங்க. பஞ்சாயத்து பண்ண போயிட்ருக்கேன். கவுன்சலர் ஆக்கறேன்னு எம்.எல்.ஏ. சொல்லிருக்கார். என் ஆசைல மண்ணை அள்ளிப் போட்றாதேம்மா...’யார் ஆசையில் யார் மண்ணள்ளிப் போட்டது?‘இத பாரு ராசாத்தி... உனக்கு மாசம் நாலு பொடவை வாங்கித் தர்றேன். நகை நகையா வாங்கிப்பூட்றேன். இது மட்டும் வெளில தெரியக்கூடாது...’
பொறுக்கவே முடியாமல் கேட்டுவிட்டேன்.

‘உண்மையை மறைச்சி மொத கல்யாணம் ஏன் செஞ்சிங்க?’‘வயசாயிட்டே இருக்கு, ஏண்டா பண்ணிக்கலைன்னு சொந்தக்காரங்க கேட்டுக்கிட்டே இருந்தானுங்க. வேற வழியில்லாமதான்…’‘ஒரு உசுரை பலி கொடுத்தப்பறமும் மறுபடி அதே தப்பை ஏன் செஞ்சிங்க?’

‘குழந்தையப் பார்த்துக்க ஆள் வேணாமா? நம்ம வாழ்க்கைல கல்யாணம்னு ஒண்ணு நடக்குமான்னு ஏங்கற பொண்ணா இருக்கணும்னு தரகர்ட்ட கண்டிஷனா சொன்னேன்...’‘கல்யாணத்துக்கு ஏங்கற பொண்ணுங்களுக்கு புடவை, நகை ஆசை மட்டும்தான் இருக்குமா?’‘புரியுதுடி! இந்தக் கனவாச்சும் நிறைவேறுதுன்னு சந்தோஷப்பட்டுக்கலாமே சரோஜா...’வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். சொன்னார்.

‘நானும் நியாயம் தெரிஞ்சவன்தான் சரோஜா. நீயும்கூட ஒரு குழந்தை பெத்துக்கிட்டாலும் சம்மதம்தான். எப்படி, யாருன்னு சாமி சத்தியமா நான் கேக்கவே மாட்டேன்...’‘ச்சீ! த்தூ’ என்று அவன் முகத்தில் துப்பவேண்டும் போலிருந்தது. மூலையில் இருக்கும் அரிவாளை எடுத்து வெட்டவேண்டும் போலிருந்தது. அதற்கெல்லாம் தைரியமில்லாத இந்த ஜென்மத்திற்கு பூச்சி மருந்தைக் குடிக்கத்தான் தோன்றியது.

இந்தக் கடிதம் நீங்கள் படிக்கும்போது அனேகமாக நான் உயிரோடு இருக்க மாட்டேன். இந்த மாதிரியான இரண்டு இழிந்த பிறவிகளாவது திருந்தினால் போதும் என்றுதான் உங்களுக்கு எழுதினேன்.இப்படிக்கு,வாசகி சரோஜாபிணத்தைக் குளிப்பாட்ட சில பெண்கள் தண்ணீர்க் குடமெடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றபோது… ஜீன்ஸ் போட்ட இளைஞன் பைக்கில் சாய்ந்து சிகரெட் பிடித்த சப் இன்ஸ்பெக்டரிடம் வந்தான்.

‘‘எக்ஸ்க்யூஸ் மி சார். சரோஜா தற்கொலைக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. தற்கொலைக்குத் தூண்டப்பட்ருக்காங்க. ஒருவகையில கொலை. சரியா சொல்லணும்னா கணேசன் செஞ்சிருக்கிற ரெண்டாவது கொலை...’’ என்றான்.‘‘என்ன சார் சொல்றீங்க?’’‘‘நான் ‘அக்னி’ பத்திரிகை சப் எடிட்டர். சரோஜா எங்களுக்கு அனுப்பிச்ச லெட்டர் தர்றேன். படிங்க...’’ என்றான். தந்தான்.

பட்டுக்கோட்டை பிரபாகர்