இந்தியாவிலேயே முதல் முறையாக ஹாஸ்பிட்டல் கிளவுனிங் செய்யும் குழு நாங்கள்தான்!



சூரரைப் போற்று கிருஷ்ணகுமாரின் ஒரிஜினல் முகம்

‘‘யாருப்பா இந்தப் பையன்?’’ இதுதான் ‘சூரரைப் போற்று’ படம் பார்த்தவர்கள் எழுப்பும் கேள்வி. அந்தளவுக்கு சைதன்யா (எ) சே கதாபாத்திரத்தில் பைலட்டாகவும் சூர்யாவின் நண்பராகவும் நடித்து முத்திரை பதித்திருக்கிறார் கிருஷ்ணகுமார் (எ) கே.கே.‘‘பத்து வருஷங்களா ரொம்ப கஷ்டப்பட்டீங்களாமேனு கேட்கறாங்க. நிச்சயமா இல்ல. எனக்குப் பிடிச்ச விஷயத்தை நோக்கி சந்தோஷமா டிராவல் பண்றேன். அது சவாலான அட்வென்சர் நிரம்பிய பாதை. பட், ஐ லைக் திஸ்.

சின்ன வயசுலயே நடிப்பு ஆர்வம் எனக்குள்ள விதையா விழுந்துடுச்சு. 6வது படிக்கிறப்பவே ‘த லிட்டில் தியேட்டர்’ எனக்கு அறிமுகமாகிடுச்சுனா பார்த்துக்குங்க. என்னைப் பொறுத்தவரை செய்யும் பணில திருப்தி இருந்தா அதுதான் மிகப்பெரிய சாதனை. நம்ம கல்வி முறைகள் அதை சொல்லிக் கொடுக்கத்தான் இன்னைக்கு தவறிட்டு இருக்கு.  

படிச்சு ஒரு வேலைல உட்கார்ந்துட்டா வாழ்க்கை முழுமையடையும்னு நினைக்கறாங்க. அப்படியில்ல. அது கரியர். நம்ம வருமானத்துக்கான ஒரு வழி. ஒருபோதும் அது நம்ம அடையாளமாகாது.ஆத்மார்த்தமா... நம்ம மனசுக்கு நிறைவா ஏதோ ஒண்ணு நிச்சயம் நம்ம எல்லாருக்கும் இருக்கும். அதுதான் நம்ம அடையாளம்...’’ புன்னகைக்கும் கிருஷ்ணகுமார் என்கிற கேகே இதை மாணவர்களுக்கு வலியுறுத்தி வருகிறார்.

‘‘ஆமா. இதைத்தான் ஸ்கூல்கள்ல நடிப்பு மூலமா பயிற்சி கொடுக்கறோம். இதுவேதான் ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங்’. இந்தியாவிலேயே முதல் முறையா நாங்கதான் இதை ப்ரொஃபஷனலா ஒரு குழுவை ஆரம்பிச்சு செய்துட்டு வர்றோம். இதுக்கு முன்னாடி வெளிநாடுகள்ல இருந்து வந்த சிலர் இதை ஸ்பெஷலா செய்திருக்காங்க. ஆனா, பிரத்யேகமான பயிற்சியும், சர்டிபிகேட் கோர்சும் எங்க ‘த லிட்டில் தியேட்டர்’ல இருக்கு...’’ என்னும் கேகே, ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங்’ குறித்து விளக்கினார்.

‘‘பொதுவா ஹாஸ்பிட்டல்ல ரெண்டு நாட்கள் அட்மிட் ஆனாலே நமக்கு உடல், மனம்னு எல்லாமே சோர்வாகும். எதைப்பார்த்தாலும் எரிச்சலா இருக்கும். ஒண்ணு ரெண்டு நாட்களுக்கே இப்படினா மாசக்கணக்குல அட்மிட் ஆகி இருக்கிறவங்க மனநிலை எப்படியிருக்கும்னு யோசிச்சு பாருங்க.
அப்படிப்பட்டவங்களை காமெடியான ஸ்க்ரிப்ட் வழியா சிரிக்க வைச்சு, மேஜிக் செஞ்சு ஆச்சர்யப்படுத்தி மனதளவுல ரிலாக்ஸ் பண்றோம். இதுதான் ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங்’.

சென்னை ‘காவேரி ஹாஸ்பிட்டல்’ல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு சின்னப் பையன். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தாங்க. அந்தப் பையன் நெஞ்சிலே தையல். இதனால வலில துடிச்சான். எல்லாத்து மேலயும் வெறுப்பு ஏற்பட்டு இருந்தான். கஷ்டப்பட்டாவது அவன் தண்ணி குடிச்சாகணும்.
ஆனா, அதிக வலி காரணமா அவன் யார்கிட்டயும் பேசாம, சாப்பிடாம, தண்ணீர் குடிக்காம இருந்தான். அவன் அம்மாவால இதை தாங்கிக்க முடியலை. பொங்கிப் பொங்கி அழுதாங்க.நாங்க அந்தப் பையன் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா நட்பாகி, சின்னச் சின்ன விளையாட்டெல்லாம் காட்டி, மேஜிக் செஞ்சு அவனை பேச வைக்க முயற்சி செஞ்சோம்.

அவனோ தண்ணீரை எடுத்து குடிச்சான்! ‘ஜீபூம்பா’ சொன்னா பாதி வலி போயிடும்னு ஒரு விளையாட்டு விளையாடினோம். ஒரு கட்டத்துல அவன் ‘ஜீபூம்பா’ சொல்லி பாதி வலி போயிடுச்சுனு சொன்னான்! எங்க எல்லாருக்கும் அவ்வளவு ஆச்சர்யம். இந்த சம்பவம்தான் எங்களுக்கு மிகப்பெரிய நம்
பிக்கை கொடுத்துச்சு. இஸ்ரேல், கனடா மாதிரியான நாடுகள்ல உள்ள மருத்துவமனைகள்ல இந்த ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங்’ குழு இருந்தே ஆகணும். இதுக்கான டிகிரி கோர்ஸை முடிச்சவங்கதான் முறைப்படி கிளவுனிங் செய்ய முடியும்.

உலகின் தலைசிறந்த ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங்’ குழுவான ‘நியூயார்க் கூஃப்ஸ் டீம்’ல இருந்து ஹிலாரி சாப்ளின் என்கிற டாப் ‘ஹாஸ்பிட்டல் கிளவுன்’ நம்மூருக்கு வந்து எங்க ‘த லிட்டில் தியேட்டர்’ நடிகர்களுக்கு முறைப்படி வகுப்பெடுத்தாங்க.

இந்தியாவுக்கு தகுந்தா மாதிரி உடைகள், தீம்களை உருவாக்கி நாங்க பயிற்சி கொடுக்கறோம். இப்ப பல நாடுகளுக்கும் அவங்கவங்க கலாசாரம், பண்பாட்டுக்கு ஏற்றா மாதிரி உடை, தீம்களை உருவாக்கி அவங்களுக்கு பயிற்சி கொடுக்கறோம்...’’ என்னும் கேகே, இப்போதைய நம் கல்வி முறை வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமே கற்பிப்பதாக வருத்தப்படுகிறார்.

‘‘அதனால நாங்க சில கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸ், கிராமப் பள்ளிகளைத் தேர்வு செஞ்சு நடிப்பு வழியா உணர்வுபூர்வமா எப்படி பாடம் நடத்தலாம்னு பயிற்சி கொடுக்கறோம்...’’ என்ற கேகே, சங்கோஜத்துடன் தனது பயோடேட்டாவைச் சொல்ல ஆரம்பித்தார். ‘‘பள்ளி நாட்கள்லயே என் தோழி ரோஷ்னி ராவை காதலிச்சேன். அவங்களையே திருமணமும் செய்துகிட்டேன்.

அவங்கதான் என்னை ‘த லிட்டில் தியேட்ட’ருக்கு கூட்டிட்டு வந்தவங்க. ஜெயகுமார் சார், பசுபதினு நிறைய மாஸ்டர்கள் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தாங்க. ‘காதலாகி’ படத்துல நடிச்சேன். சரியா போகலை. இப்ப ‘சூரரைப் போற்று’ நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல கேரக்டர்ஸ் பண்ண விரும்பறேன்...’’ என்னும் கேகே, ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர்.

‘‘படிக்கப் போனவன்னு சொல்றதுதான் சரி! இன்ஜினியரிங்ல ஆர்வம் இல்ல. அங்க இருந்த புரொஃபசர்கிட்ட என் நடிப்பு ஆசையை சொன்னேன். ஏற இறங்க என்னைப் பார்த்தவர், ‘அப்புறம் எதுக்கு உனக்கு படிப்பு... விரும்புறதை செய்’னு தட்டிக் கொடுத்தார்.

இதுக்குப் பிறகுதான் ‘த லிட்டில் தியேட்டர்’. என் அண்ணன் அடிக்கடி சொல்வார்... ‘எப்ப உன் வாழ்க்கைல ‘ப்ளான் ஏ’, ‘பிளான் பி’னு பிரிச்சு பயணப்படறியோ அப்பவே ‘பிளான் ஏ’ வேலைக்கு ஆகாதுனு நீயே முடிவு பண்ணிட்டேன்னு அர்த்தம்...’ இதை இப்ப வரை என் மனசுல தாங்கிட்டு பயணப்படறேன். யெஸ். என் வாழ்க்கைல ‘பிளான் பி’னு ஒரு ஆல்டர்நேட்டிவ் இல்லவே இல்ல!’’ அழுத்தமாகச் சொல்கிறார் கிருஷ்ணகுமார் என்கிற கேகே.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்