நீரில் நடக்கலாம்!



சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள காரைக்காட்டைச் சோ்ந்தவர் தட்சிணாமூர்த்தி. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள இவரது ஐடியாதான் நீரில் நடக்கும் செருப்பு!கொரோனா தீவிர தொற்றுக் காலத்தில், காவிரியைக் கடந்து செல்வதற்கான படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது காவிரியின் மறுகரையில் உள்ள உறவினர்களைப் பார்க்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர்.

இதைக் கண்ட 20 வயது தட்சிணாமூர்த்தி என்ன செய்வதென்று யோசித்தார். கார் சக்கரத்திலுள்ள ரப்பா் டியூப்களைக் கத்தரித்து ஒரு பகுதியை ஒட்டி அதில் காற்றை நிரப்பினார். அதன் அடியில் உலோகத்தாலான தகடுகளை வைத்து மிதியடி தயாரித்தார்.ம்ஹூம். சரிவரவில்லை. 15 முறை தோற்றவர், 16வது முறை வெற்றி பெற்றார்!

நீரின் மீது வைத்த மிதியடி மிதவையில் தனது கால்களை மாட்டி அதனுடன் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை கைகளால் தூக்கி, அதேநேரத்தில் காலையும் உயா்த்தி தரையில் நடப்பதுபோல நடந்து சென்றார். சக்சஸ்!இவர், ஏற்கெனவே நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளையும், சுண்ணாம்புக் கற்களை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கியும் சாதனை படைத்துள்ளார்!

அன்னம் அரசு