வலைப்பேச்சு



@Kannan_Twitz - கிடைக்க முயற்சி செய்யணும், இல்லையினா கடக்க முயற்சி செய்யணும்... அவ்வளவுதான் வாழ்க்கை!

@_Tamilarasi_ - பாரமாக இருப்பதை விட தூரமாக இருப்பதே மேல்!

@i_akaran - எப்போது நீங்கள் சம்பாதித்த பணத்தை நீங்களே உங்கள் இஷ்டத்திற்கு செலவு செய்ய மனம் வருவதில்லையோ... அப்போதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள்!

@akalvizhi - சிறை திறப்பில் அல்ல... சிறகு விரிப்பில்... #சுதந்திரம்!

@JeyaKris_offl - அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது - எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே...

@Akshayacutee1 - நம்மை புரிந்து கொள்ள ஓர் உறவு இருக்குமேயானால் அது நம் தனிமை மட்டுமே...

@Subbumeil - வாழ வீடு கட்டறவங்களை விட வாடகை கிடைக்க வீடு கட்டறவங்களே அதிகம்!

@prakashT_ - பிறர் நேசிக்கிறார்கள் என நினைத்து நினைத்தே தன்னைத்தானே நேசித்துக் கொண்டிருக்கின்றனர் பலர்...

@oorkkavalaan - ‘முள்ளை’ மிதிக்கும் அதே செருப்புதான் ‘மலரையும்’ மிதிக்கின்றது...

@சாத்வீக சைத்தான் - இலக்கை எட்டும்வரை நமது வெற்றி உறுதி செய்யப்படவில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

@Vinayaga Murugan - ஜல்லிக்கட்டில் வென்று முதலிடத்துக்கு வந்தவருக்கு கார் பரிசு. இரண்டாவது இடத்துக்கு வந்தவர் எனக்கு பரிசு எதுவும் தரவில்லை என்று பேட்டி தருகிறார். இன்னும் பலர் தங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள்.  மாடு பிடிப்பது விளையாட்டு என்றால் அவங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு தரலாம் இல்லையா? பாடி பில்டிங்கைக் கூட விளையாட்டாக அங்கீகரித்து  அரசு வேலை தருகிறார்கள். ஒருவேளை மாடு பிடிப்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தர முடியவில்லை என்றால் அவர்களது பயிர்க்கடனை தள்ளுபடி செய்யலாம்.

@Ramanujam Govindan - வாழ்க்கையே வெறுத்து விட்டது என்று யாருக்கேனும் செய்தி அனுப்பிவிட்டு கூகுளைத் திறந்தால் ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’ எனச் சொல்கிறது! - #செயற்கை_அறிவு

@Prabhakaran Namashivayam Rajendran - பத்து வருடங்களுக்கு முன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சிகிச்சையால் என் தந்தை புற்று நோயிலிருந்து மீண்டு வந்தார். இன்று தந்தை நலமுடன் இருக்கிறார்.தனிப்பட்ட முறையில் நான் மருத்துவர் சாந்தாவிற்கு நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன். அவரது மறைவிற்கு இரங்கல்கள்!

@அ. பாரி - முக்கால் கிலோ மட்டனுக்கு மொதோ வேலையா கால் கிலோ எலும்பை வெட்டிட்டுத்தான் கறிக்கே நவுந்தான். எடை போட்டா 560தான் இருக்கு. மீதத்திற்கு கறியில் வைக்கிறான், பிறகு எடுக்கிறான், தத்தளிக்கிறான், தவிக்கிறான்... கடைசியில் எலும்புக்குத்தான் போகுது கை...
‘வையி வையி... இங்கிட்டு ஜவ்வு கெடக்கே... அதையும் சேர்த்து வையி...’‘இல்ல சார்... இதில கறியும் இருக்கு சார்...’  ‘இனி உங்கடைக்கு நான் வருவேன்?’ என்பதை சொல் கொண்டு சொல்லாமல் உணர்த்திவிட்டு வந்தேன்.

ஏம்யா, அப்ரசண்டிகளை வச்சிட்டு அவசரத்துக்கு வெளியில் ஓடும் போது, தொழில் நேக்கை சொல்லிக் கொடுத்துட்டு போக மாட்டியளா..?
கவரை இன்னும் இவ பிரிக்கல. பிரிச்சி பார்த்தா, “ஒம் மூஞ்சிய பார்த்திருப்பான்...’’ என்று சிம்பிளா முடித்துக் கொள்வாள்!  

@இந்திரா கிறுக்கல்கள் - ‘‘நீ என்னைய அந்த படத்துல பாத்துட்டியா சூரி?’’பார்ன் மூவியில் நடித்த தன் தாயின் கேள்விக்கு முகம் திருப்பிக்கொள்ளும் சூரியை, மருத்துவமனை வார்டு வாசலில் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள் லீலா.‘‘அதொன்னும் பெரிய கொல குத்தமில்ல. டாக்டர், டிரைவர் மாதிரி அதுவும் ஒரு வேலை. நான் நடிகையாகணும்னு ஆசப்பட்டேன், நடிச்சேன்...’’ரொம்பவே நிதானமாய் சொல்லிக் கொண்டிருந்த தாய் லீலாவிடம், வருத்தம் தொனித்த குரலில் கேள்வியொன்றை முன்வைக்கிறான் சூரி.

‘‘உங்கள யாராவது பெரிய ஹீரோயினாக்குறேன்னு சொல்லி, ஏமாத்தி நடிக்கவச்சுட்டாங்களா?’’தான், ஏமாந்த கதையொன்றை அழுகையோடு சொல்லப்போகிறாள் என்றபடி காத்திருக்கும் மகனைப் பார்த்து வாஞ்சையோடு புன்னகைக்கிறாள் லீலா.
‘‘இல்ல, தெரிஞ்சேதான் நடிச்சேன்...’’‘‘...’’ ‘‘அந்தப் படத்தப்பார்க்க லட்சம்பேர் இருக்குறப்ப, நடிக்க நாலுபேர் இருக்கத்தானே செய்வாங்க..? ஆனா, பாக்குறவங்கள விட்டுட்டு நடிக்கிறவங்கள மட்டும் தப்பா பேசுற உலகமிது.

பத்தாயிரம் வருசத்துக்கு முன்னாடி யாராச்சும் துணி போட்டாங்களானு தெரியாது. நூறு வருசத்துக்கப்புறம் யாரும் போடுவாங்களானும் தெரியாது. இதுல கொஞ்ச வருசம் மட்டும் வாழுற மனுசங்க, இதுதான் சரி இதெல்லாம் தப்புனு சொல்லிப்பாங்க. அதையும் அவங்க வசதிக்கேத்த மாதிரி அப்புறம் மாத்திப்பாங்க...’’பிறகு நிலைக்கதவில் கையூன்றியவாறு, வெகு நிதானமாய் அதைக்கூறுகிறாள். ‘‘‘சக்திமேல் பக்தி வை’ங்குற ஒரு படம் கேள்விப்பட்டிருக்கியா? அதுல நான் அம்மனா நடிச்சிருந்தேன். அதைப் பாக்குறவங்களுக்கு அப்டி, இதைப் பாக்குறவங்களுக்கு இப்டி.

ஆனா, நான் கடைசிவரைக்கும் லீலா மட்டும்தான்...’’சிரித்துக்கொண்டே நகர்ந்தவளின் வெற்றிடத்தை கேமரா காட்சிப்படுத்துகிறது.
படம்: ‘சூப்பர் டீலக்ஸ்’‘பார்ன் மூவீல நடிச்சாலும் அவங்களும் மனுசங்கதானே!’ என்கிற சமீபத்திய அங்கலாய்ப்புகளையும், மேற்குறிப்பிட்ட காட்சியையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம்.அடல்ட் மூவீஸின் நடிகைகள் மீதிருக்கும் தவறான பிம்பங்களை உடைப்பது நல்ல நோக்கம்தான். ஆனால், அதுவேதான், பார்ன் மூவீஸ் நடிப்பின் மேலிருக்கும் பாவபிம்பத்தை இன்னும் வேரூன்றச் செய்கின்றன என்பதை நாம் ஏன் யோசிப்பதில்லை?

சில்க் ஸ்மிதாவை ஏற்றுக்கொள்ள ‘டர்ட்டி பிக்சர்’, ஷகீலாவை கொண்டாட ‘குக் வித் கோமாளி’ என ஆரம்பித்திருக்கும் இத்தகைய சிலாகிப்புகளுக்கு எனவே இனி ஷர்மிலியைக் கொண்டாட, ரேஷ்மாவைக் கொண்டாட என தனித்தனி நிகழ்ச்சிகள் வந்தாக வேண்டும், அப்படித்தானே!?
மீடியாவின் நோக்கம், இவர்களை வெளிக்கொண்டு வருவதல்ல; இவர்கள் மூலம் நிகழ்ச்சிக்கு கவன ஈர்ப்பைக் கொண்டுவருவது மட்டுமே.

பெண்ணுடல் என்பதைப் புனிதப்படுத்துவதன் லேட்டஸ்ட் வெர்சன்தான் இந்தக் கொண்டாட்டங்கள். ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே, அவளுக்கும் மனசிருக்கும்தானே’ என்கிற ரீதியில் குவியும் கமெண்ட்டுகள் எல்லாமே, ‘உன் உடம்பு கோயில் மாதிரி’ என்கிற கண்ணோட்டத்தின் வெளிப்பாடுதான்.

எல்லாவற்றையும் மீறியதொரு பரிதாப உணர்வு இவர்கள் மீது விழுவதை உணரமுடிகிறதா?
இங்கு தேவையெல்லாம், பார்ன் திரைப்படங்களின் நடிகைகள் மீதான பரிதாப உணர்வோ அல்லது அவர்களைப் புனித ஆத்மாக்களாக்கும் முயற்சிகளோ அல்ல. மாறாக, அவற்றில் நடித்த out of focus ஆண்களைப் போலவே, பெண் தன் உடலை வெளிப்படுத்துவதும் அப்படியொன்றும் பாவ காரியமல்ல என்பதும், நீங்களும் நானும் செய்துகொண்டிருப்பது போல் அவள் செய்வதும் / செய்ததும் ஒரு வேலைதான் என்பதுமான புரிந்துணர்வுதான்.

@KR Athiyaman - பல வெட்டிச் செலவுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கும் மத்திய, மாநில அரசுகள் அடையாறு கேன்சர் மையத்திற்கு ரூ.1000 கோடியை (வருடத்திற்கு ரூ.100 கோடியாக, பத்து வருடங்களுக்கு) அளிக்க வேண்டும். இதன் கிளைகளை நாடு முழுவதும் ஏற்படுத்த வகை செய்ய வேண்டும். அதுதான் மருத்துவர் சாந்தா அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக, மரியாதையாக இருக்கும்.

@Rajesh Kumar - அமெரிக்க அதிபர் பதவியேற்பு என்பது நினைவு தெரிந்த நாளில் இருந்து ‘மற்றும் ஒரு நிகழ்ச்சி’. இம்முறை அப்படி இல்லை. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள். ஒரு போர் நடக்கும் நாட்டின் அமெரிக்க ஏரியா போல 25,000 தேசிய ராணுவ வீரர்களுடன் வாஷிங்டன் டிசி மொத்தமும் பாதுகாக்கப்பட்ட ஏரியாவாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

போலி அனுமதிச் சீட்டு, இரண்டு கைத்துப்பாகிகள், 500 குண்டுகளுடன் டிசியில் நுழைய முயன்ற ஒருவனை கைது செய்திருக்கிறார்கள். கலவரம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற FBI எச்சரிக்கையால் எல்லா மாநில தலைநகரங்களும் கலவரத்துக்கு தயாராகின்றன. ஒரு கீழ்மை குணம் கொண்டவன். நான்கே வருடங்கள். ஒரு தேசத்தின் ஆன்மாவை முற்றிலுமாக சிதைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறான்.

@Paadhasaari Vishwanathan - தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; நன்மையின் கனிகள் உயிரில் கனிந்து, தானே உதிர்வது.