உனக்கு 76... எனக்கு 80...



இத்தம்பதிகளின் வாழ்க்கையை தெரிஞ்சுக்குங்க

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த டி.பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் குஞ்சிதபாதம். இவரது மனைவி 76 வயதான வசந்தா. குழந்தைகள் இல்லாத இந்த தம்பதி அதே ஊரில் வாடகை குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். தள்ளாத வயது என்ற எண்ணம் சற்று கூட இல்லாமல் இளைஞராக மாறி சுறுசுறுப்பாக, தினமும் சுமார் 20 கிமீ சைக்கிளில் சென்று பனை ஓலை விசிறி விற்பனை செய்து வருகிறார் குஞ்சிதபாதம்.

தினக்கூலியாக வேலைபார்த்துக் கொண்டிருந்த குஞ்சிதபாதம், தனது உறவினர் ஒருவர் மூலம் பனை ஓலை விசிறி செய்யக் கற்றுள்ளார். அதன் மூலம் தங்களது வாழ்க்கையை ஓட்டலாம் என்ற நம்பிக்கையில் கடந்த 40 வருடங்களாக கையாலேயே பனை ஓலை விசிறி செய்து, விற்பனை  செய்து வருகிறார். “எனது பணிக்கு மனைவி உதவியாக இருக்கிறார்...” என்று கூறும் குஞ்சிதபாதம், “இன்றைக்கும் விசிறிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது...” என்கிறார். ஒரு நாளைக்கு 15 விசிறிகள் வரை செய்யும் இந்த தம்பதி, விசிறி ஒன்றை ரூ.15க்கு விற்கிறார்கள்.

“என் சைக்கிளும் பழுதாகிவிட்டது. புது சைக்கிள் வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு வசதி இல்லை. நாங்கள் முதியோர் உதவித் தொகை வாங்குகிறோம். இதை வைத்துதான் சமாளித்துக் கொண்டிருக்கிறோம். கிராமம், கிராமமாகச் சென்று விசிறியை விற்று சம்பாதித்து வருகிறேன். எனது பலமே என் மனைவிதான். அவர் கொடுக்கும் ஊக்கத்தால்தான் தொடர்ந்து கடினமாக உழைக்க முடிகிறது...” என்று தெரிவித்திருக்கிறார் குஞ்சிதபாதம்.

அன்னம் அரசு