106 வயதில் இசை ஆல்பம்!



பிரான்ஸில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கொலட் மாஸ் என்ற பெண்மணி. ஹோம் ஸ்கூலிங் முறையில் கல்வி கற்றதால் வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் செல்ல முடியாத நிலை. கண்டிப்பான அம்மா, எப்போதுமே வேலையில் மும்முரமாக இருக்கும் அப்பா. இப்படியான சூழலில் வளர்ந்த கொலட்டிற்கு இசையின் மீது ஆர்வம் வருகிறது. ஆனால், அதை வெளிப்படுத்த எந்த வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.

இரண்டு உலகப் போர்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதே கொலட்டின் குடும்பத்துக்குப் பெரும்பாடாகிவிட்டது. 10 வயதிலிருந்து  கிடைக்கும் நேரங்களில் ரகசியமாக பியானோ வாசிப்பதைக் கற்றுக்கொண்டார். மத்திய வயதில் கொலட் வெளியிட்ட முதல் ஆல்பம் அவருக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவில்லை.

சோர்ந்துபோகாமல் விடாமுயற்சியுடன் அடுத்தடுத்து ஐந்து ஆல்பங்களை வெளியிட்டார். பிரான்ஸ் முழுவதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்த உற்சாகத்தில் இப்போது ஆறாவது ஆல்பத்தை வெற்றிகரமாக வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டார். கொலட்டின் வயது 106.

த.சக்திவேல்