பராம்பரிய வாழை ரகங்களை தேடித் தேடி விளைவிக்கும் தலைமை ஆசிரியர்!



நமக்கெல்லாம் கற்பூரவள்ளி, கதளி, ரஸ்தாளி, மோரிஸ், பூவன், மொந்தன், செவ்வாழை... என ஏழெட்டு வாழை ரகங்கள் மட்டுமே தெரியும். ஆனால், 37 வகையான பாரம்பரிய வாழை ரகங்களை தன் தோட்டத்தில் வளர்த்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோ பிரகாஷ். அரிய வகை பாரம்பரிய வாழை ரகங்களைத் தேடிச் சேகரித்து இயற்கை முறையில் வளர்ப்பதே இவரது குறிக்கோள்.  

அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜோ பிரகாஷ். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர். இப்போது இயற்கை விவசாயியாக மிளிர்கிறார்.
‘‘கடந்த நாலு ஆண்டுகளாகத்தான் வாழைப்பழத்துல இவ்வளவு ரகங்கள் இருக்குனு தெரியும். அதுக்கு முன்னாடி எல்லோரையும் போல நானும் சாதாரணமா பழத்தை வாங்கினோமா சாப்பிட்டமானு போயிடுவேன். ஆனா, இப்ப நானே இயற்கையில் விளையவச்சு சாப்பிடுறேன். இதன் சுவை கடைகள்ல வாங்கிச் சாப்பிடுகிற பழங்கள்ல துளியும் இல்ல. நான் இந்த ரகங்களைத் தேட ஆரம்பிச்சதுக்கு என் பேத்திதான் காரணம்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் ஜோ பிரகாஷ்.

‘‘சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பக்கத்துல முள்ளங்கினாவிளைனு ஒரு கிராமம். ஆங்கில இலக்கியத்துல எம்.ஏ., எம்.எட்., எம்.பில் முடிச்சேன். இதனுடன் இதழியலில் டிப்ளமோ படிச்சேன். 1980கள்ல ‘தினமணி’ பத்திரிகைல உதவியாசிரியரா பணியாற்றினேன். அப்புறம், ஆசிரியர் பணி கிடைச்சது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பணியாற்றினேன். ஆசிரியர் பணியின்போதே இயற்கை சார்ந்த வேலைகள்ல ஈடுபாடு அதிகமிருந்தது. நிறைவில் மார்த்தாண்டம் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரா பணியாற்றி 2015ல் ஓய்வுபெற்றேன்.

அதன்பிறகு என் பேத்தி பிறந்தாள். அவள் வளர்ந்து வர்றப்ப அவளுக்கு தினமும் மட்டி வாழைப்பழம் கொடுத்து வந்தோம். கடையில் வாங்குற அந்தப் பழங்கள் சுவையே இல்லாமல் இருந்துச்சு. செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பழங்கள்னு தெரிஞ்சது. சரி, நாமே வாழை மரம் வச்சு ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த வாழைப்பழங்களை உற்பத்தி பண்ணலாமேனு தோணுச்சு.

எனக்கு இயற்கை விவசாயம் பண்ணக்கூடிய நண்பர்கள் நிறைய இருக்காங்க. அவங்க இந்த ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டாங்க. வீட்டுக்குப் பின்னாடி 35 சென்ட் இடம் இருந்துச்சு. அதுல வெவ்வேறு ரகங்களை சேகரிச்சு நட ஆரம்பிச்சேன். நாலு ஆண்டுகள்ல 37 ரகங்கள் நட்டிருக்கேன்...’’ பெருமையுடன் சொன்ன ஜோ பிரகாஷ், தொடர்ந்தார்.

‘‘முதல்ல சிங்கன்னு ஒரு வெரைட்டி வச்சேன். இது ரொம்ப குளிர்ச்சி யான வாழைப்பழ ரகம். அந்தக் காலத்துல சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வர்றவங்களுக்கு, உடல் குளிர்ச்சிக்காக இந்தப் பழத்தைக் கொடுத்திருக்காங்க. இதன்பிறகு துளுவன், மட்டி, ஏத்தன், பேயன், பாளையங்கோட்டான், கதளினு பல ரகப் பழங்களை வச்சேன். இதெல்லாம் பாரம்பரியமான ரகங்கள். இதை வளர்க்க நான் எந்த செயற்கை ரசாயனங்களோ, உரங்களோ போடுறதில்ல. சாணி, குப்பை, வேப்பம்புண்ணாக்கு, மண்புழுனு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துறேன். பூச்சிகொல்லிக்கு வேப்ப எண்ணெயில் காதி சோப்பை கலக்கி அடிக்கிறேன். அவ்வளவுதான்.

சிறப்பா வளர்ந்துச்சு. சுவையும் நல்லாயிருந்துச்சு. இதை என் பேத்திக்குக் கொடுத்தேன். ரொம்ப ரசிச்சு சாப்பிட்டாள்...’’ என சிலாகிக்கும் ஜோ பிரகாஷ் சில ரகங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.
‘‘துளுவன்ல செவ்வாழைனு சொல்லப்படுற செந்துளுவன், கருந்துளுவன், அரித்துளுவன், அணில்துளுவன், வெள்ளைத்துளுவன்னு ஐந்து ரகங்கள் என்கிட்ட இருக்கு. இதேபோல, மட்டியில் மலைமட்டி, செம்மட்டி, தேன்மட்டி, கேரளாமட்டி, நாட்டுமட்டினு ஐந்து ரகங்களும்; ஏத்தனில் வாழி ஏத்தன், மைசூர் ஏத்தன், கல்ஏத்தன், அடுக்கு ஏத்தன், ஒற்றைக்கொம்பன்னு ஐந்து ரகங்களும்; கதளியில் ரசகதளி, பூங்கதளி, கற்பூரக்கதளி, பூஜாகதளி, ஆற்றுக்கதளினு ஐந்து ரகங்களும்; சிங்கனில் ஆற்றுச் சிங்கன், நெய் சிங்கன், தோட்டு சிங்கன், பேயன் சிங்கன், குதிரைவால் சிங்கன்னு ஐந்து ரகங்களும்; பேயனில் சக்கைப் பேயன், நாட்டுப்பேயன், புள்ளிப்பேயன், வரிப்பேயன்னு நான்கு ரகங்களும் இருக்கு.

இந்த நாட்டுப்பேயனை நம்மூர்ல நாட்டு வாழைப்பழம்னு சொல்வாங்க. இதுதவிர மூங்கில் வாழை, கூம்பில்லா வாழை, கல் வாழை, திண்டுக்கல் சிறுமலை வாழை, சேலம் கற்பூரவள்ளி, இந்தோனேஷியா வாழை, தாய்லாந்து வாைழ, பிலிப்பைன்ஸ் பிளான்டன், மோரிஸ், ரொபஸ்டா, ஏலக்கி, திருப்பாச்சினு மொத்தமா 37 ரகங்கள் இருக்கு. இதுல பல வாழை ரகங்கள் அழிஞ்சிட்டு வருது. இந்த ரகங்கள் இயற்கை விவசாயம் பண்ற விவசாயிகள்கிட்ட மட்டுமே கிடைக்குது.   

இதுல ஒற்றைக்கொம்பன் வெரைட்டியில் ஒரு குலை அல்லது ரெண்டு குலைதான் வரும். ஒரு குலையில் பத்து பழங்களே இருக்கும். அதன் எடை மட்டும் 13 கிலோ. அதாவது ஒரு பழத்தின் எடை ஒரு கிலோ 300 கிராம் வரும்! முன்னாடி எங்க குமரி பகுதியில் இது இருந்திருக்கு. இப்ப இல்ல. அதை நான் மீட்டெடுத்து என் தோட்டத்துல நட்டிருக்கேன். இந்த பழத்தை தனியொருவராக சாப்பிட முடியாது. நேந்திரம்பழம் மாதிரி இருக்கும். சுவையும் அதேபோலத்தான். ஆனா, அதைவிட மூன்று மடங்கு பெரிசு.

இதை அந்தக் காலத்துல திருவாங்கூர் மன்னரைப் பார்க்கப் போகும்போது தட்டுல வச்சு கொண்டுபோயிருக்காங்க. ஒரு சீப்பை வச்சால் அந்தத் தட்டே நிறைஞ்சிடுமாம். எனக்கு இதை ஒரு நண்பர் கொடுத்தார். இன்னைக்கு அங்கொன்றும் இங்கொன்றும் இந்த ஒற்றைக்கொம்பன் இருக்குது.அப்புறம், கூம்பில்லா வாழைனு ஒண்ணு. அதுல கூம்பு வரும். ஆனா, கடைசி பகுதி வரை காய் வந்திடும். கூம்பு பகுதி வராது. அதனால, இதன்பெயர் கூம்பில்லா வாழைனு சொல்வாங்க. இதுவும் அரிய வகைதான்.

செம்மட்டி பழம் மருத்துவ குணம் உள்ளது. சர்க்கரை அவ்வளவா இருக்காது. அதனால, சுகர் உள்ளவங்க இந்தப் பழத்தைச் சாப்பிடலாம். இந்தப் பழத்தை குழந்தைகளுக்கு தேன்ல தடவி கொடுத்தால் நல்லது.  இந்தோனேஷியா வாழை மேலிருந்து கீழாக பெரிசா காய்க்கும். ஆனா, சுவையா இருக்காது.

அதனால,  அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். அப்புறம் என் பொண்ணு சிங்கப்பூர்ல இருந்தாள். அவளைப் பார்க்கப் போனப்ப அங்கிருந்து பிலிப்பைன்ஸ் பிளான்டன்னு ஒரு ரகம் வாங்கிட்டு வந்தேன். இந்த ரகம் அங்க ரெண்டடிதான் வளருது. இங்க வச்சதும் நாலடி உயரம் வந்தது. இப்ப ஒரு குலை தார் அறுத்திருக்கேன். நம்ம ரொபஸ்டா மாதிரியே சுவையிருக்கு...’’ என்கிறவர், இப்போது இன்னொரு பகுதியில் இடம் வாங்கி இந்த வாழை ரகங்களை நட்டு வருகிறார்.  

‘‘இப்ப சேனம்விளைனு ஒரு கிராமத்துல தங்கியிருக்கேன். அங்க 45 சென்ட் இடம் வாங்கி, அதிலும் வாழை ரகங்கள் நட்டிருக்கேன். மொத்தமா 80 சென்ட் இடத்துல இந்த வாழை மரங்களைப் போட்டியிருக்கேன். 1965ல் கேரளா ஆய்வாளர் ஜேக்கப் குரியன் என்பவர் கொல்லம் முதல் குமரி வரை திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து 165 வகையான வாழை ரகங்களை பதிவு செய்ததா சொல்றாங்க. இந்தத் தகவலை சமூக வலைத்தளத்துல படிச்சேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நாற்பதுக்கும் மேற்பட்ட வெரைட்டி இருந்திருக்கு. இதுல 30 ரகங்கள் என்கிட்ட இருக்கு. இன்னும் உள்ள ரகங்களைத் தேடிட்டு இருக்கேன்.

ஒரே ஒரு காய் காய்க்கிற வாழை ரகம் இருக்குதுனு சொல்றாங்க. அதையும் தேடுறேன். முன்னாடி நிறைய பயணம் பண்ணினேன். இப்ப கொரோனாவால போக முடியல. எனக்கு தமிழ்நாடு முழுவதும் நண்பர்கள் இருக்கிறதால அவங்க மூலம் பல வெரைட்டி வாங்க முடியுது. என் தோட்டத்துல மற்ற ஊர்கள்ல உள்ள பாரம்பரிய ரகங்களையும் நடுறேன். எவ்வளவு ரகங்கள் கிடைக்குதோ அவ்வளவும் நடணும்னு நினைக்கிறேன்.  

எங்க ஊர் தகவமைப்புக்கு இந்த வாழைக் கன்றுகள் எல்லாேம நல்லா வளருது. வாழைக்கு தண்ணீர்தான் ரொம்ப முக்கியம். அப்புறம், உரம். இதை சிறப்பா செய்தால் எந்த மண்ணுக்கும் வாழை ரகங்கள் வாழையடி வாழையா நல்லா வளரும்...’’ என்கிறவர், ‘‘இதுல வர்ற பழங்கள் எதையும் நான் விற்கிறதில்ல. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிஞ்சவங்களுக்கும் கொடுக்குறேன். போலவே, கன்றுகளையும் கேட்கிறவங்களுக்கு இலவசமா கொடுத்து வளர்க்கச் சொல்றேன். யாருக்காவது வேணும்னாலும் என்னை அணுகலாம். சமீபத்துல கூட வேலூர் விஐடியில் இருந்து வந்து என்கிட்ட பத்து ரக கன்றுகளை வாங்கிட்டு போனாங்க.

என்னுடைய நோக்கமெல்லாம் அழிஞ்சு வர்ற வாழை ரகங்களை மீட்டெடுத்து வளர்க்கணும் என்பது தான். அப்புறம், எல்லோரும் வீட்டுல ஒரு வாழைத்தோட்டத்தையோ அல்லது ஒரு வாழை மரத்தையோ நட்டு வளர்க்கணும். இயற்கையா விளைவிக்கப்பட்ட ஆரோக்கியமான பழங்களையே சாப்பிடணும். அதுவே என் ஆசை...’’ என்கிறார் 64 வயதாகும் ஜோ பிரகாஷ்.

பேராச்சி கண்ணன்