பின்னங்கழுத்தில் மயில் படம் பச்சை குத்தாதவள்!



நீ என்மேல் கோபப்பட்டதே இல்லை. தேனிலவு நாளில், கொடைக்கானல் ஏரியில்  என்னுடைய பழைய காதலைப் பற்றிச் சொன்னேன். ஒரு நொடி கலக்கமடைந்தாலும், திரண்ட கண்ணீரை ஏரிக்குள் சுண்டியெறிந்துவிட்டு ‘இனிமே எம்மேல அன்பா இருப்பீங்கதான?’ எனக் கேட்டாய். இருபது வருடங்கள் கழிந்துவிட்டன என்றாலும் அந்தக் கணத்திலிருந்து நீ கேட்டதுபோலத்தான் இருக்கிறேன்.

நம் திருமணத்திற்கு முன் என்னுடைய நண்பர்களின் மனைவிமார்கள் கருவுற்றிருக்கும்போது, ஆள் வைத்து பலகாரம் செய்து கொண்டு போய்க் கொடுத்திருக்கிறேன். நீ என்னை விட நூறு மடங்கு உயர்ந்தவள். நான் நேசித்த தேவி பிறிதொருவனைக் கரம் பிடித்து சூலுற்றிருந்த பொழுதில், மகிழ்ச்சியுடன் இனிப்புகள் செய்து என்னிடம் கொடுத்து அனுப்பி வைத்தவளல்லா நீ! கண்ணன் பிறந்ததும் நீ திடீரென எப்படித் தாயாக மாறினாய் என்பது  ஆச்சரியமாகவே இருக்கிறது.

கண்ணன் உதடு சுழித்து அழுவது பசிக்காக என்பதை நீ எப்படி உணர்ந்து  மார்பில் உதடு பொருத்தினாய்? பால்குடிக்கும் சுகத்தில் தூங்கியவனின் காதுகளை லேசாகச் சுண்டிவிட்டால் மீண்டும் உதடசைத்துப் பாலுறுஞ்சுவான் என்ற நுட்பத்தை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? நடைபழகத் தொடங்கிய நாட்களில், வலதுகை ஆள்காட்டி விரலால் உதடுகளைத் தொட்டால் அது பசிக்கிறது என்பதற்கான சைகை என்பதை எப்படிப் புரிந்துகொண்டாயோ?கண்ணன் பிறந்த சில மாதங்களுக்குள்ளாகவே, என் உடலின் வேட்கை உன்னை  கருக்கலைப்புச் செய்ய வைத்தது. அதை எப்போது நினைத்தாலும்  என்மேல் வெறுப்பு வரும்.  

மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிக் கொடுத்து  கரு கலைக்கப்பட்ட அந்த இரவு நினைவில் இருக்கிறதா? வேகவைத்த கேரட்டை மசித்து ஊட்டி கண்ணனின் வயிற்றை நிரப்பி உறங்கச் செய்த பின் படுக்கச் சென்றாய். விடியற்காலை மூன்று மணியிருக்கும். அழுதுகொண்டே என்னை எழுப்பினாய். நீ நைட்டியுடன் நடுநடுங்கியபடி நின்றிருந்த கோலம் அதற்கு முன் நான் பார்த்திராதது. ‘எனக்கு பயமா இருக்குதுங்க. லைட்டைப் போட்டுப் பாருங்களேன்’ என்றபடி தோளில் சாய்ந்தாய். தரையில் கட்டிகட்டியான இரத்தத் துண்டுகளுடன் கருநிறத்தில் இரத்தம் மெல்ல வழிந்துகொண்டிருந்தது. உன் இரண்டு முழங்கால் வழியாகவும் அது கீற்றாக இன்னும் இறங்குவதைப் பார்த்ததும் பதறினேன்.  

உன்னை அமைதிப்படுத்தி, சுடுதண்ணீர் வைத்து இரத்தக் கட்டிகளைச் சுத்தப்படுத்தி, குளிக்க வைத்தேன். அப்போது நீ சொன்னது இன்னும் உறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நீங்கமட்டும் இல்லன்னா நான் என்னாவேன்னே தெரியல...’உனக்கு மரணத்தைப் பற்றியும் ஏதும் தெரியாது என்பதை  என்னுடைய அப்பாயி இறந்தபோது தெரிந்து கொண்டேன்.  நாம் திருமணமான புதிதில் விருந்துக்கு வரவேண்டும் என வற்புறுத்தியதே அப்பாயி மட்டும்தான். சின்ன வயதில் எனக்குச் சோளதோசை சுட்டுப்போட்ட  அப்பாயி, நமக்கு பருப்புக் குழம்பு, கத்திரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வறுவல் என விருந்து வைத்தது.

அப்பாயி இறந்த அன்று சாவு வீட்டில் நீ கேட்டாய் ‘பாட்டன் இறந்து எத்தனை வருசம் இருக்கும்?’ நான் ‘பதினைஞ்சு வருசம் இருக்கும்’ என்றேன். ‘பாவம் அப்பாயி. ரொம்ப வருசமா தனியா இருந்து தனியாவே போயிட்டாங்கல்ல...’ என்றாய்.‘அப்படியில்ல. மேல எங்க பாட்டன் காத்திருப்பாங்க. அப்பாயி நேரா அவங்ககிட்ட போயிரும்...’ என்றேன்.
‘எப்படிச் சொல்றீங்க?’  எனக் கேட்டாய்.

‘பாட்டன் பின்னங்கழுத்துல மயில் படம் பச்சை குத்தியிருந்தாங்க. அதுமாதிரியே, அப்பாயியும் பச்சை குத்திக்கிச்சு. எத்தனை வருசமானாலும், எந்த உலகமானாலும் இதை வச்சு ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் அடையாளம் கண்டுக்குவாங்கன்னு ஊருல சொல்லுவாங்க...’ என நான் சொன்னது உனக்குப் புதிர் மாதிரி இருந்திருக்கும்.கண்ணன் பிறந்து மூன்று வருடங்கள் நாம் நிம்மதியாக வாழ்ந்திருப்போமா! தொழில் துரோகம் வாழ்க்கையைச் சீர்குலைத்துப் போடும் என்பதை அப்போது நாம் அறியவில்லை.

சில ஆயிரங்களில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, இரண்டு பேர் பல லட்சக் கடனாளியாக்கி விட்டு எங்கோ ஓடிவிட்டார்கள். கடனை அடைத்தாக வேண்டிய சூழலில் நீ உன்னுடைய நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்தது மட்டுமல்லாமல், மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தைக் கோர்த்துக்கொண்டு தாலிக்கொடியையும் கொடுத்தாய்.

இன்றுவரை, மஞ்சள் கயிறு கறுத்துப் போனதும் புதுக்கயிறு வாங்கித் தருகிறேனே தவிர, கொடி என்பது வெறுங்கனவாகவே இருந்து வருகிறது. ஆனாலும், நீ அதுகுறித்து ஒரு கடுஞ்சொல்கூட என்னிடம் பேசியதில்லை. நானோ தெருவில், வழியில் தென்படுகிற ஒவ்வொரு பெண்ணின் கழுத்திலும் என்ன கிடக்கிறது என்பதைக் குற்றவுணர்வுடன் பார்க்கிறேன்.
இரண்டாவதாக பெண்பிள்ளை இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டேன். அதனால் இன்றுவரை உடல்வலியை அனுபவித்து வருகிறாய்.

அம்ரிதா   பிறந்துவிட்ட கர்வத்தில் நான் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையென்பதுதான் நிஜம். உன் கோல நோட்டை ஒருநாள் புரட்டினேன். ‘வலி’ என்ற ஒற்றைச் சொல்லை நுணுக்கி பத்துப் பக்கங்களில்  எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். எந்த அளவிற்கு வலி, வாதை செய்தால் இப்படி எழுதியிருப்பாய்!நம் இருபக்க உறவுகளும் நமக்குச் சரியாக அமையவில்லை என்பது பற்றி ஆதங்கத்துடன் பலமுறை பேசியிருக்கிறோம். உன் அப்பாவின் இறப்பிற்குப் பிறகு  ‘தனியாளாக அம்மா இருக்குமே! நம்முடன் இருக்கட்டுமா?’ எனக் கேட்டாய். ‘சரி’ என்றேன். ஆனால், பொழுதெல்லாம் வலியைச் சுமக்கும் உனக்கு ஏவல் செய்யத்தான் கூப்பிடுகிறோம் என நினைத்து அவர் வரவில்லை.

என் அக்காள்கள் இருவரும் உன் அம்மாவிற்குச் சளைத்தவர்கள் அல்ல.  நெருக்கடிக் காலத்தில் சகலரும் ஒதுங்கிக் கொண்டதுபோலத்தான் அவர்களும். இரு அக்காள்களுக்கும், அவர்களின்  பிள்ளைகளுக்குமே என் வருமானத்தின் பெரும்பகுதி போனது. இன்று நம் பிள்ளைகளை ஆளாக்கத் தடுமாறுகிறேன். கண்ணனின் மேற்படிப்புக்கு ஏதும் உதவுவார்கள் என யாசகமாய் அவர்களின் வாசலை மிதித்தேன். அவர்கள் அதற்கு முன்னமே கதவடைப்பு செய்து விட்டார்கள். இதை நான் உன்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறேன்.

என்னுடைய பால்யத்தைப் பற்றிப் பலமுறை  கேட்டிருக்கிறாய். ரசிப்பதற்கு ஏதும் இல்லாத பசித்த வயிற்றுக்காரனின் பால்யம் புலம்பலாகவே இருந்ததைக் கேட்டு விழி கசிந்திருக்கிறாய்.
எனக்கு முதல்முறையாக அம்மை போட்டபோது உடல் எரிந்தது. முதல் தண்ணீர் ஊற்றியதுமே பச்சைநாடன் வாழைப்பழமும், வெங்காயம் போட்ட முட்டைஆம்லெட்டும் அம்மா கொடுத்தார். தொடர்ந்து மூன்று நாட்களும் இதேபோல் கொடுக்க, எனக்கு மீண்டும் அம்மை போடாதா என ஆசைப்பட்டேன் என்ற கதையை உன்னிடம் சொன்னேன். எனக்காக உச்சுக் கொட்டினாய்.
என்னை இன்னுமொரு குற்ற உணர்ச்சி வதைக்கிறது.

உன் சின்னவயது ஞாபகங்களைப் பற்றி நான் ஒருமுறைகூடக் கேட்டதில்லை. ஒருமுறை தெற்குவீதி வழியே செல்ல நேர்ந்தபோது ஒரு குறுகலான சந்தைக் காட்டி, ‘இங்கதான் நான் படிச்ச சுப்பையா நாயுடு ஸ்கூல் இருக்கு; சந்து இன்னும் அப்படியேதான் இருக்குது;  லச்சுமிப்பாட்டி இங்கதான் உக்காந்து தீனி விக்கும்’ எனக் கண்கள் விரிய, கையை ஆட்டி ஆட்டி சந்தோசத்துடன் பேசிக்கொண்டே வந்தாய். அதற்குப் பிறகு இன்றுவரை அப்படியொரு முகமலர்ச்சியை உன்னிடம் நான் கண்டதில்லை.

நீ இதுவரை கோயிலுக்குக்கூடத் தனியாகப் போனதில்லை. வீட்டிலிருந்து தனியாகக் கிளம்பி ஊருக்குச் சென்றதில்லை. காய் வாங்க, மருந்து வாங்க என எதற்கும் கடைவீதிக்கு தனித்துப் போனதில்லை.  உன்னை ஏனோ ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டாய். எதையும் தனித்து எதிர்கொள்ளப் பழகு என்றால் ‘அதான் நீங்க இருக்கீங்கல்ல! பாத்துக்குவீங்க’ எனச் சமாதானம் சொல்வாய்.

‘தோள்பட்டைச் சதை இறுக்குது. பின்முதுகு எலும்பை சதை கவ்வுறதுனால, எறும்பு சாரைசாரையாய் ஊர்ற மாதிரி வலி உடம்பு பூரா ஊறுது. கண்களை முழுசாத் திறக்க முயற்சிக்கிறேன்.  இப்போ பின்னந்தலையிலும் வலி.  எதனால எனக்கு இப்படி ஆகுது? இந்த வலி எப்போ விலகும்? நான் இறக்கிற நாள்லயா?’ எனக் கேட்டுவிட்டு நேற்று  மயங்கிச் சரிந்த நீ இன்னும் கண் திறக்கவில்லை.

என் மிகப்பெரிய கவலை,நான் மரணிப்பதற்கு முன்பாக நீ இறந்துவிடக் கூடாது என்பதுதான். அப்படி நேர்ந்துவிட்டால், எங்கு போவது? எந்தத் திசையில் பயணிப்பது? எவ்வளவு காலம், எந்த இடத்தில் எனக்காகக் காத்திருப்பது என்பது குறித்து ஏதொன்றும் அறியாதவளா யிற்றே நீ! என்னுடைய பாட்டன் முன்கிளம்பிப் போனாலும், பின்னங்கழுத்தில் பச்சை குத்தப்பட்ட மயில்படம் அப்பாயியைக் கண்டுகொள்ள உதவியிருக்கும். அப்படியேதும் நம்மிடையே இல்லையே!

நாம் இன்னும் வாழவேண்டிய காலம் நிறைய இருக்கிறது. கடைசியில் உனக்கு முன்னதாக நான் கிளம்பிப் போய்க் காத்திருப்பேன். பின்னரே நீ வரவேண்டும். உன் பள்ளிக்கால சந்தோசங்களைச் சொல்லிச் சிரித்த முகக்குறிப்புகளை நினைவில் வைத்திருக்கிறேன். மயில் படத்திற்குப் பதிலாக அதை வைத்து உன்னை அடையாளம் கண்டு அழைத்துக் கொள்வேன். இப்போது கண் திற!

புலியூர் முருகேசன்