வலிமை ஹீரோயின் சீக்ரெட்ஸ்



ஹூமா குரேஷி... பாலிவுட்டில் செம ஸ்கோர் குவித்த ஏஞ்சல். ஆனால், கோலிவுட்டிற்கு அவர் ரஜினியின் ‘காலா’ ஹீரோயின். ஹூமா, இப்போது அஜித்தின் கதாநாயகி.
யெஸ். ‘வலிமை‘யில் சிறகடித்திருக்கிறார். மும்பையில் வசித்து வரும் பேபி, ‘‘கொரோனா நமக்கெல்லாம் மனிதநேயத்தின் மாண்பை புரிய வச்சிருக்கு...’’ என எமோஷனல் ஃபீல் கொட்டுகிறார். ‘வலிமை’ வட்டாரத்தில் அவரைப் பற்றி விசாரித்ததில் அள்ளிய தகவல்கள் இங்கே...

* அஜித்தின் ‘வலிமை’யில் ஹூமா வந்ததே, சுவாரஸ்யமானது. பலரும், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்தான் அவரை சிபாரிசு செய்திருப்பார் என நினைக்கிறார்கள். ஆனால், இயக்குநர் வினோத் டீம்தான் இவரை டிக் செய்தார்களாம்.படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.ஸோ, அவரது போலீஸ் டீமில் உள்ள லேடி போலீஸ்தான் ஹீரோயின் என்பதால், அதற்கேற்ற ஹைட் அண்ட் வெயிட்... ப்ளஸ் க்யூட்... ப்ளஸ் கம்பீரம் உள்ள ஹீரோயினாக தேடியிருக்கிறார்கள். ‘காலா’வில் ஹூமா பர்ஃபாமென்ஸ் நினைவுக்கு வரவே இவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

* வாரிசு அரசியல் எனப்படும் நெப்போடிசம் ஓங்கி இருக்கும் இண்டஸ்ட்ரியில் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி பட்டையைக் கிளப்புகிறார் என்பதால் இந்தித் திரையுலகில்  பலரும் ஹூமாவைப் பார்த்து வியக்கின்றனர். இவரது பூர்வீகம் தில்லி. அப்பா ரெஸ்டாரண்ட் ஓனர். கிட்டத்தட்ட பத்து ரெஸ்டாரண்ட்களுக்கு சொந்தக்காரர் இவர்.

‘சின்னதம்பி’ குஷ்பு போல, ஹூமாவுக்கு மூன்று அண்ணன்கள். அதில் ஒருவர் நடிகர்! தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் டிகிரி முடித்துவிட்டு, மாடலிங், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என பன்முகமாக பளபளத்தவர், அப்படியே அனுராக் காஷ்யப்பின் கண்ணில் பட்டு, ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்’ பாகங்களில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.
‘‘சின்ன வயசிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆர்வம்.

எதனால அப்படி தோணுச்சுனு தெரியல. ஆனா, நடிகையாகணும்னு நினைச்சேன். படங்கள்ல என்னோட பங்களிப்பும் இருக்கணும்னு விரும்பினேன். ‘நீங்க ஹீரோயினா ஆகாம இருந்திருந்தா, என்னவாகி இருப்பீங்க’னு எப்ப யார் கேட்டாலும் சினிமால என்ட்ரி ஆக போராடிட்டு இருப்பேன்னுதான் சொல்லுவேன்...’’ என்கிறார் ஹூமா.

*கோலிவுட்டில்  ஹூமாவைப் பற்றி இன்னொரு தகவலும் கசிகிறது. இவர் அஜித்துடன் எப்போதோ ஜோடி சேர்ந்திருக்க வேண்டியதாம். அஜித்தின் ‘பில்லா 2’வை இயக்கிய சக்ரி டோலட்டி, ஹீரோயினைத் தேடியிருக்கிறார். கிட்டத்தட்ட 700 ஹீரோயின்களைப் பார்த்தும் அவருக்கு திருப்தியில்லை. சரியாக அப்பொழுதுதான் ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்’ முதல் பாகம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தைப் பார்த்த சக்ரிக்கு, ஹூமாவைப் பிடித்துவிட்டது. உடனே ‘பில்லா2’வுக்காக அவரை கமிட் செய்துவிட்டார். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு அப்போது  துவங்காமல்  போனதால், கால்ஷீட் பிரச்னை காரணமாக ஹூமா ‘பில்லா2’வில் நடிக்க முடியாமல் போனதாம்.

* ரஜினியின் ‘காலா’விற்குள் ஹூமா வரக் காரணம், தனுஷ். இந்தியில் பரபரப்பாக பறந்த பொண்ணை ‘காலா’விற்காக அழைத்திருக்கிறார் தனுஷ். இந்த முறை கோலிவுட் சான்ஸை மிஸ் பண்ணக்கூடாது... ரஜினி சார் படம் வேறு என்பதால் உடனே ஹூமா கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

*ஹூமா புல்லட் ப்ரியை. மும்பை வீட்டில் சொந்தமாக என்ஃபீல்டு புல்லட் வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை வீதிகளில் ஹெல்மட் மாட்டிக்கொண்டு ஒரு பெண் புல்லட்டில் பறந்தால், அது ஹூமாவாகத்தான் இருக்கும். ‘வலிமை’யில் போலீஸாக நடிப்பதால், ஒரு காட்சியில் புல்லட் ஓட்டியும் நடித்திருக்கிறார்.

*அஜித்தின் ‘வலிமை’யை முடித்துவிட்டு, பாலிவுட்டில் அக்‌ஷய்குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தையும் முடித்திருக்கிறார். அது இந்த மே மாத இறுதி யில் வெளியாக வேண்டியது. லாக்டவுனால் ஓடிடி ரிலீஸா தியேட்டர் வெளியீடா என்ற பிசினஸ் ப்ளானிங்கில் மாட்டிக் கொண்டுள்ளது.

* கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ஹூமா, ‘‘லாக்டவுன் அர்த்தமுள்ளதாக்கி இருக்கு. வீட்ல இருந்தா புத்தகங்கள் நிறைய படிக்கறேன். நல்லா தூங்கி எழுறேன். வீட்டுல கார்டனிங் இருக்கறதால செடிகளுக்கு தண்ணீர் ஊத்துறேன்.. பொழுது இப்படி பயனுள்ளதாகவும் போகுது...’’என்கிறார்
சிரித்துக் கொண்டே!

மை.பாரதிராஜா