கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் நலம் காத்துக் கொள்வது எப்படி?



தேசமே கொரோனா பெருந்தொற்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் வெளியில் அல்லாடுபவர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், இறப்புகள் என எங்கும் ஓர் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலைமையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ‘தங்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது’ என்று அலட்சியமாக இருக்காமல், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கையாள வேண்டியதும் அவசியம் என்கிறார்கள்.

அப்படியானால், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் நலம் காத்துக் கொள்வது எப்படி?என்ன பிரச்னைகள் ஏற்படலாம்?கொரோனா முதல் அலையின்போது தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் அடுத்த 3 மாதங்கள் வரை ‘உடல் அசதியாக இருக்கிறது’ என்றனர். இருமலும் மூச்சுத் திணறலும் நாட்படும் பிரச்னைகளாக மாறின. பசி குறைந்தது. செரிமானம் சரியில்லை. தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி, மூட்டுவலி, மறதி, மனப்பதற்றம், படபடப்பு போன்றவை ஏற்படுவதாகச் சொன்னார்கள். புதிதாக சிலருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் துளிர்விட்டன. இன்னும் சிலருக்குப் பக்கவாதமும் மாரடைப்பும் எட்டிப் பார்த்தன.

மறு பரிசோதனை அவசியம் ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல், இந்தப் பிரச்னைகள் கொரோனா இரண்டாம் அலையிலும் ஏற்படலாம். இப்போது புதிதாக ‘கறுப்புப் பூஞ்சை’ என்னும் நோய் வருகிறது என்கிறார்கள். இவற்றுக்குத் தீர்வு காண கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசோதனைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம்.

மீண்டும் ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் சி.டி. ஸ்கேன், இசிஜி, எக்கோ மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் கொரோனாவின் தாக்கம் உடலில் நீடிப்பதைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, இதயத்தைக் காக்க முடியும். மூளையையும் அதோடு தொடர்புடைய நரம்புகளையும் பாதுகாக்க முடியும்.மூச்சுப் பயிற்சிகள் தேவை! பொதுவாக, ஆக்ஸிஜன் சிகிச்சை பெறும் அளவுக்கு கொரோனா தீவிரம் அடைந்தவர்களுக்கு நுரையீரலில் ‘ஃபைப்ரோசிஸ்’ (Fibrosis) எனப்படும் ‘நாரழற்சி’ ஏற்படுகிறது. இலவம் பஞ்சுபோல் இருக்க வேண்டிய நுரையீரல் திசுக்கள் தேங்காய் நார்போல் மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம். இந்தத் திசுக்களுக்குச் சுருங்கி விரியும் தன்மை இல்லை. ஆகவே இவை இருக்கும் நுரையீரலுக்குள் காற்று நுழைய வழியில்லை.

ஒட்டுப்போட்ட கார் டயருக்கு வேகம் குறைவுதானே! அதுபோல் நாரழற்சி ஏற்பட்ட நுரையீரலில் சுவாசம் குறையும். இதனால் இவர்களுக்கு இருமலோ, மூச்சுத்திணறலோ நீடிப்பது உண்டு.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட இவர்கள் மூச்சுப்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம்.மூச்சுப்பயிற்சிகளில் பிராணா யாமம் முக்கியமானது. இதை தினமும் காலை, மாலை தலா 15 நிமிடம் பயிற்சி செய்தால், பாதிப்புக்குள்ளான நுரையீரல்கள் விரியத் தொடங்கும்; அவை அதிக அளவில் காற்றைப் பெற்றுக்கொள்ள வழி செய்யும். அப்போது இருமல் கட்டுப்படும்; மூச்சுத்திணறல் விடை பெறும்.

இப்படியும் செய்யலாம்….பலூனில் காற்றை ஊதிப் பயிற்சி செய்யலாம். ஸ்பைரோமீட்டர் கருவியில் காற்றை ஊதிப் பார்க்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்கு இவை தேவை.
நடைப்பயிற்சி நல்லதுமத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல கொரோனா நேரடியாக இதயத்தைத் தாக்கி அழற்சியை உண்டாக்குவது ஒருபுறம் என்றால், பாதிக்கப்பட்ட நுரையீரலிலிருந்து போதுமான ரத்தமும் ஆக்ஸிஜனும் கிடைக்காமல் இதயம் அவதிப்படுவதும் உண்டு. இந்தப் பாதிப்பு உடலில் கொரோனா தொற்று மறைந்தபிறகும் சில காலம் நீடிக்கிறது. இதனால் இதயத்தின் செயல் திறன் குறைகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு பெற தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம். நடைப்பயிற்சியை ‘இரண்டாவது இதயம்’ என்று கூறுவார்கள். இதன் பலனால், இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். அப்போது இதயத்துக்குச் சுமை குறையும். இரவு நேர இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற தொல்லைகள் அடங்கும். உடலில் பழைய உற்சாகம் ஊற்றெடுக்கும்.  

என்ன உணவு எடுப்பது?
கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், குறைந்தது 6 மாதங்களுக்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகரிக்க வேண்டும். காலையில் ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, பருப்பு, சாம்பார், சட்னி சாப்பிடலாம்.
மதியம் சோறு, சப்பாத்தி, பாசிப்பருப்பு சாம்பார், கீரை, மிளகு ரசம், மோர், தயிர். தினமும் ஒரு காய்கறி கூட்டு, ஒரு பொரியல், ஒரு பழம். மாலையில் பாதாம், பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, பொரிகடலை, சூப், பழச்சாறு நல்லது. கொய்யா, நெல்லி, ஆரஞ்சு மற்றும் உலர் பழங்களும் முளைகட்டிய பயறுகளும் உதவும். காளான், மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

இடைவேளையில் மஞ்சள் பால், மிளகுப் பால், சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது ஆரோக்கியம் தரும். இரவு உணவு அடை மாவில் செய்த இட்லி, தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். வாரம் 2 முட்டை அவசியம்; தினமும் அரை லிட்டர் பால், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இனிப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மது, புகை வேண்டாம்.

மன அமைதி காக்க…

கொரோனாவின் தாக்கம் மறைமுகமாகத் தொற்றாளரின் மனத்தையும் பாதிக்கிறது. நோய் கொடுத்த கவலை, நோய் குறித்த அச்சம் போன்றவை ஒருபுறம் என்றால், சிகிச்சையின்போது தனிமை, பணம் இழப்பு, பணி இழப்பு, சமூக விலகல், வருமானம் குறைந்ததால் எதிர்காலம் பற்றிய கவலை போன்றவையும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இதனால் இவர்கள் எப்போதும் உள்ளம் சோர்ந்து காணப்படுவதுண்டு.

இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க, இவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதுமே தனிமை உணர்விலிருந்தும் விலகிவிட வேண்டும். தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சமூகத்துடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன், உறவினருடன், நண்பர்களுடன் உரையாடுவது, புத்தகம் வாசிப்பது, பிடித்த இசை கேட்பது, யோகா, தியானம் ஆகியவை மனச்சோர்வுக்கு மருந்தாகும். பால் தயிராக வேண்டுமானால் உறைமோர் அவசியம். அதுபோல் அழுத்தத்தில் அழும் ஆழ்மனம் அமைதி அடைய வேண்டுமானால் 6 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். வைட்டமின்டி கிடைக்க காலை வெயிலில் அரை மணி நேரம் நிற்கலாம், நடக்கலாம்.

உயிர் காக்கும் தடுப்பூசி!

இறுதியாக இது ரொம்ப முக்கியம். கொரோனா மறு தொற்று ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். முதல் தவணையானாலும் சரி, இரண்டாம் தவணையானாலும் சரி, தொற்று குணமான 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதுதான் அவர்களை கொரோனாவிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றும்.l

டாக்டர் கு.கணேசன்