ரெய்டு



நாற்பத்தைந்து கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 150 கோடியை அள்ளிய இந்திப்படம், ‘ரெய்டு’. ஹாட் ஸ்டாரில் பார்க்க கிடைக்கிறது. திறமை வாய்ந்த ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக். அவருடைய நேர்மையின் காரணமாக அடிக்கடி டிரான்ஸ்பர் செய்யப்படுபவர். இப்போது லக்னோவிற்கு மாற்றலாகி வருகிறார். அதுவும் வருமான வரித்துறையில் டெபுடி கமிஷனராக. அங்கே வரி செலுத்தாமல் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து வருமான வரித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார் அரசியல் செல்வாக்கு மிகுந்த ரமேஷ்வர்.

ஒரு நாள் திடீரென்று அவர் வீட்டுக்கு ரெய்டுக்கு வருகிறார் அமய். வீட்டில் சல்லடை வைத்து தேடியும் கருப்புப் பணம் கிடைப்பதில்லை. ஏமாற்றமடையும் அமய்க்கு கருப்புப் பணம் எங்கிருக்கிறது என்று அனாமதேயமாக தகவல் கிடைக்கிறது. வெற்றிகரமாக சோதனையை முடித்து கோடிக்கணக்கான கருப்புப் பணத்தைக் கைப்பற்றுகிறார் அமய். அதிர்ச்சியில் நிலைகுலைந்து போகிறார் ரமேஷ்வர். அவருக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை. ரமேஷ்வர் வீட்டில் எங்கே கருப்புப் பணம் இருக்கிறது என்று அமய்க்கு யார் தகவல் கொடுத்தது என்பதே டுவிஸ்ட்டான திரைக்கதை.

நிஜத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. நேர்மையான வருமான வரித்துறை அதிகாரியாக கெத்து காட்டியிருக்கிறார் அஜய் தேவ்கன். படத்தின் இயக்குநர் ராஜ்குமார் குப்தா.