கறுப்பு பூஞ்சை தாக்கலாம்... உஷார்! டாக்டர் சென்பாலன்



மழை பெய்த மறுநாள் சுற்றுப்புறத்தில் காணும் பூஞ்சைகளைப் போன்றதுதான் மியூகோரேல்ஸ். இதைத்தான் மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக கறுப்பு பூஞ்சை
என்கிறார்கள் இந்த மியூகோரேல் வரிசையில் ஏழு பூஞ்சைக் குடும்பங்கள் உள்ளன.  இந்த ஏழு குடும்பத்தின் கீழும் பல பூஞ்சை சிற்றினங்கள் உள்ளன.

இவை சாதாரணமாக மனிதர்களைத் தாக்கி நோயை உண்டாக்குவதில்லை. ஆனால், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது (கட்டுப்பாடில்லாத சர்க்கரை, எயிட்ஸ், புற்று நோய்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, வேறு தீவிர நோய்கள், ஸ்டீராய்டு சிகிச்சை போன்றவற்றின்போது) உடலைத் தாக்கி நோயை உண்டாக்குகின்றன.
இந்தத் தொற்றைத்தான் மியூகார்மைகோசிஸ் என்று அழைக்கிறோம்.

இப்படி நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தாக்கும் தொற்றுகளை opportunistic infection  சந்தர்ப்பவாத தொற்று  என அழைக்கிறார்கள். இதனால்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பின் நோயாளிகளை யாரும் அணுக முடியாத சுத்தமான தனியறையில் வைக்கிறார்கள். இந்த பூஞ்சைகள் saprotrophic எனும் வகையைச் சேர்ந்தவை. அதாவது மட்கும் கரிமப் பொருட்களில் இருந்து தங்களுக்குத் தேவையான உணவை இவை பெற்றுக்கொள்ளும். இறந்த உடல்கள், மரக்கட்டைகள், மட்கும் இலைகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பழங்கள், சாணி உள்ளிட்ட விலங்குக் கழிவுகள் போன்றவற்றில் வளரும்.

இவற்றின் ஸ்போர்கள் காற்றில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவரின் சுவாசப்பாதையில் நுழையும்போது நோயை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் தோலில் உள்ள காயம் மூலமாகவும் உள் நுழைகின்றன. இந்த பூஞ்சைகளால் ஐந்து வகையான தொற்றுகள் ஏற்படலாம்.

1.மூக்கு  கண்  மூளைத் தொற்று.
2.நுரையீரல் தொற்று.
3.தோல் தொற்று.
4.குடல் தொற்று.
5.பிற உறுப்புகளில் அல்லது  உடல் முழுவதும் பரவிய தொற்று.

இவற்றில் முக்கியமானது மூக்கு  கண்  மூளைத் தொற்று. இப்போது அதிக நபர்களைப் பாதிப்பதும் இந்தத் தொற்றுதான். மூக்கினுள் நுழையும் பூஞ்சைகள் சைனஸ் எனப்படும் காற்று அறைகளில் தங்கி வளரும். அங்கிருந்து பரவி கண்களுக்குள் செல்லும். அப்படியே கண்களைத் தாண்டி மூளைக்குப் பரவி உயிரைக் கொல்லக்கூடியவை இந்தப் பூஞ்சைகள். முகத்தில் வீக்கம், வலி, மரத்துப் போதல், கண்களில் வீக்கம், பார்வைக் குறைபாடு போன்றவை இந்த நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.

இந்த நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து வெகுவிரைவில் சிகிச்சையைத் துவங்குவது உயிரிழப்பைக் குறைக்கும். ஆண்ட்டி ஃபங்கல் எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் இந்நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோல, எதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதோ அதையும் உடனடியாக சரி செய்யவேண்டும். உதாரணமாக சர்க்கரை நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடனே கட்டுப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உயிரிழப்பை, பார்வை இழப்பைக் குறைக்கலாம். ஆயினும் சிலநேரங்களில் தொற்று முற்றிய நிலையில் உயிரைக் காப்பாற்ற வேண்டி அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புகளை அகற்ற வேண்டி வரலாம்.

இப்போதைய கொரோனா காலகட்டத்தில் திடீரென மியூகார்மைகோசிஸ் நோய் பரவுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆக்சிஜன் செலுத்துதலின் தொற்று வாய்ப்பு, ஸ்டீராய்டு பயன்பாடு, அதிக சர்க்கரை நோயாளிகள், கொரோனாவின் காரணமாக உடலில் அதிகரிக்கும் இரும்பு அயனிகளின் அளவு... எனப் பல கருதுகோள்கள் இருந்தாலும், இதுதான் காரணம் என்று உறுதியாகக் கண்டுபிடிக்க மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. முழுமையான ஆராய்ச்சிக்குப் பின்னரே நோய் பரவலின் காரணங்கள் தெரியவரும்.

இப்போது இந்த நோய் பரவுவதைத் தடுக்க மருத்துவமனை ஐ.சி.யூ.க்களில் சுத்தத்தைப் பேணுவதும், ஆக்ஸிஜன் கொடுக்கும் கருவியில் உள்ள நீரை அடிக்கடி மாற்றுவதும், ஸ்டீராய்டு உள்ளிட்ட மருத்துகளைக் கவனமாகப் பயன் படுத்து வதும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை தாக்குதல் எளிதில் நிகழும் என்பதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். அதிக பூஞ்சை ஸ்போர்கள் இருக்க வாய்ப்புள்ள இடங்களை (விலங்குக் கழிவுகள், மட்கும் குப்பை கொட்டப்படும் இடங்கள், தூசி மிகுந்த பழைய கட்டடங்கள்) தவிர்ப்பதும் நல்லது.

மருத்துவரின் அறிவுரை இன்றி ஸ்டீராய்டு, ஆன்ட்டிபயாடிக் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதும் தவறு. பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு முன் தாமாக நிறுத்துவதும் தவறு.
கொரோனா தாக்குதலுக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாலும் முகத்தில் வலி, கண்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகவும்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது கொரோனா தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதுதான்.