சிறுகதை - சேவலுக்கு சொர்க்கம்



“ஏய் ஆவுடை கிழவி, வெளியே வா…”

சேலையை இடுப்பில் சொருகிக் கொண்டு காலை 7 மணிக்கு அந்தக் குடிசை வீட்டு வாசலில் நின்றபடி கூச்சலிட்டாள் பாஞ்சாலி. அவளது கையில் “கொக் கொக் கொக்…” என்று பரிதாபமாகச் சத்தம் போட்ட சேவல்!
அந்தத் தெருவில் சைக்கிளில் பால் கொண்டு போன மணி, வீட்டு வேலைக்குப் புறப்பட்ட சரோஜா, கடைக்குப் போய்க்கொண்டிருந்த விஜயா எல்லோரும் திடீரென்று திரும்பினர். அவர்கள் பார்வை ‘இன்னாடா இது காலையிலேயே ஆரம்பிச்சுடுச்சா...’ என்று கூறின.பாஞ்சாலியின் சத்தம் கேட்டு சாவகாசமாக தலையை முடிந்தபடி வெளியே வந்த கிழவி, “இன்னாத்துக்கு இந்த குதி குதிக்கிறே…” என்றாள்.

“உன்னோட சேவலு என் சேவலைக் கொத்திடுச்சு பாரு...” என்றபடி கையிலிருந்த சேவலின் சிறகைப் பிரித்துக் காட்டினாள் பாஞ்சாலி.“அடியே... மேயப் போற சேவலுங்க இப்படித்தான் ஒண்ணுக்கு ஒண்ணு கொத்திக்கும். இதை சொல்ல வந்துட்டியே…” என்றாள் கிழவி அலட்சியமாக. பாஞ்சாலி விரலை உயர்த்த முயன்றபோது, “இதா, இந்த வேலையெல்லாம் வேணாம்… நானா என் சேவலுக்குக் கொத்தணும்னு சொல்லிக் கொடுத்தேன்..? வேணா என் சேவல்கிட்ட கொத்தாதேன்னு சொல்லிட்டுப் போயேன்…” என்று பொக்கை வாய் திறந்து நக்கலாகச் சொன்னாள் கிழவி.

ஆவுடையம்மாளைப் பார்க்கும்போது ஒரு படத்தில் மாவாட்டிக் கொண்டே வடிவேலுவிடம் பேசும் கிழவி போலத் தெரிந்தாள்.அந்த நேரம் பார்த்து, எதிர் வீட்டுக்குள்ளே இருந்து ஜனகா வெளியே வந்து, “ஏண்டி, காலையிலே…” என்றபடி மத்தியஸ்தம் செய்ய வந்தாள். “ஆவுடை கெழவி, உன் சேவலையும் காட்டு…” என்றாள் ஹைகோர்ட் நீதிபதி மாதிரி.இரண்டு சேவலையும் பார்த்த ஜனகா, “சரிதான், பாஞ்சாலி, உன் சேவலும் கெழவி சேவலை கொத்தியிருக்கு. ரெண்டும் சளைச்சதில்லை.

இதை பெரிசாக்காம வேலைய பாரு...” என்றாள். அங்கே ஓடி வந்த பாஞ்சாலியின் மகன் சிட்டி, “அம்மா, மாடி வீட்டுக்காரங்க வேலைக்கு வரலியான்னு கேக்கச் சொன்னாங்க...”  என்றதும் பாஞ்சாலி, கிழவியிடம், “இரு வெச்சுக்கிறேன் கெழவி... இன்னொரு தாட்டி என் சேவலுக்கு ஏதாச்சும் ஆனா, அவ்வளவுதான்...” என்று கையால் சேவலின் தலையைத் தடவியபடி வீட்டுக்குத் திரும்பினாள்.மத்தியஸ்தம் செய்ய வந்த ஜனகா, “ஏ ஆவுடை கெழவி, நீயும் பிடிவாதத்தை விட்டுப்புடேன். எதுக்கு வம்பு வளக்கறே... உன் சேவலையும் பாத்துக்க…” என்று அட்வைஸ் செய்துவிட்டுப் புறப்பட்டாள்.

ஆவுடையம்மாளுக்கு 75 வயதானாலும் சண்டை போட்டால் 25 வயதாகிவிடுவாள். அவளது குடிகார புருஷன் செத்துப் போய் 10 வருஷம் ஆச்சு. பெத்த பிள்ளைகள் கவனிப்பதில்லை. ஒரே பெண்ணின் பேத்தி அடுத்த ஊரில் வறுமையில் வாடுகிறாள். ஆவுடை கிழவி தனியாளாய் இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடுகிறாள். வீட்டில் 2 ஆடு, ஒரு மாடு, நான்கு கோழி, 2 சேவல் எல்லாம் இருக்கிறது. ஆட்டுப் பால், மாட்டுப் பால், முட்டை வியாபாரம் என்று குறைவில்லைதான். தனியாக வசித்தாலும் தைரியமான கிழவி அவள். பிள்ளைகள் எப்போதாவது வீட்டுக்கு வந்தால் கிழவிக்குப் பணமெல்லாம் தரமாட்டார்கள். ஆட்டை விற்றால், பங்கு கேட்பார்கள். மசியமாட்டாள் கிழவி. அதே சமயம், குருவி மாதிரி சேர்க்கும் பணத்தை, கஷ்டப்
படும் பேத்தியை வரவழைத்துக் கொடுப்பாள்.

படித்த, நகர்ப்புற வாழ்க்கையில் வாழும் ஆண்களுக்குக் கூட தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பதில்லை. உதவாக்கரை கணவன், வறுமை, படிப்பறிவின்மை என்று சிக்கித் தவிக்கும் கிழவிக்கு வலிமையான மனம் வந்துவிடுகிறது. அதற்கு ஓர் உதாரணம் ஆவுடையம்மாள்.பொதுவாகவே கிழவியிடம் யாரும் வம்பு வைப்பதில்லை. அவளும் தேவையில்லாமல் வம்புக்குப் போகமாட்டாள். யாராவது இளக்காரம் செய்தாலோ, வம்பு செய்தாலோ  ஏமாற்றினாலோ விடமாட்டாள்.

பாஞ்சாலி அப்படி என்ன செய்தாளோ தெரியாது. ஆனால், ‘ஏதாவது செஞ்சிருப்பா. அதான் ஆவுடை கிழவியின் கோபத்தை சம்பாதிக்கிறா’ என்று எல்லோரும் நம்புகிறார்கள்.
காலையில் பாஞ்சாலி சண்டைக்கு வந்தது நியாயமே கிடையாது என்று கிழவி நம்பியது நிஜம் என்று ஒரே வாரத்தில் நிரூபணம் ஆயிற்று.அன்று மதியம் எங்கேயோ குப்பை பொறுக்கப் போன ஆவுடையம்மாள் சேவல் திடீரென்று ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டு, குடிசைக்குள் ஓடி வந்து சுருண்டது. ஆவுடையம்மாளுக்குக் கோபம் பொங்கியது. காரணம், சேவலின் கண்ணுக்குக் கீழே ரத்தக் காயம். கால் வேறு நொண்டுகிறது. உடலெங்கும் குதறியது போல ரத்தம்.

 சேவலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்கூலுக்குப் போய் திரும்பி வந்த பக்கத்து வீட்டு மாலா, “ஆயா, அவுங்க வீட்டு சேவல்தான் கொத்திட்டிருந்தது. அதை அவங்களே வேடிக்கை பாத்தாங்க...” என்று பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லி விட்டு ஓடிவிட்டாள். ஆவுடை கிழவிக்கு கோபம் இரு மடங்கானது.பாஞ்சாலி வீட்டு வேலையெல்லாம் செய்து தெருவில் வந்து கொண்டிருந்தாள். அதற்காகவே காத்திருந்த ஆவுடை கிழவி தனது சேவலை அவள் முகத்துக்கு நேரே காட்டி, “இதப் பாரு... என் சேவலுக்கு என்ன ஆயிருக்குன்னு...”
என்றாள்.

அதற்கு பாஞ்சாலி, “அடப் போ கெழவி, நானே இன்னிக்கு நிறைய வேலைன்னு இப்பதான் வர்றேன். என்கிட்ட இதைக் காட்டறியே... ரெண்டும் சண்டை போட்டிருக்கும். அதான்...” என்றாள்.
“அன்னிக்கு இதே மாறி ஆனப்ப வந்தியே, இப்ப என்ன சொல்றே..? உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா...” என்றாள் ஆவுடை கிழவி.
பாஞ்சாலி அதைச் சட்டை செய்யாமல் போய்க் கொண்டிருந்தாள். கிழவிக்கு நெஞ்சை அடைத்தது! வழக்கம்போல் ஜனகா வந்து சமாதானம் செய்ய வீட்டுக்குள்
திரும்பினாள்.

ஒரு வாரம் கழித்து காலையில் பாஞ்சாலி திடீரென்று ஜனகா வீட்டுக்கு ஓடி வந்து, “அக்கா, என் சேவலைக் காணோம். கெழவிதான் எடுத்துருக்கும்...” என்று புகார் சொன்னாள். “இரு பாஞ்சாலி, அவசரப்பட வேணாம். கொஞ்சம் பொறுமையா தேடுவோம்...” என்றாள் ஜனகா.இருவரும் ஆவுடை கிழவி வீட்டுக்கு வந்தனர். மணி ஆறரை ஆகிவிட்ட பிறகும் கிழவி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஜனகாவும் பாஞ்சாலியும்  “ஆவுடை கிழவி!” என்று கத்தினர்.

கண்களைக் கசக்கியபடி கலைந்த தலையோடு வெளியே வந்த ஆவுடையம்மாள், “என்ன ஆச்சு?”  என்றாள் விஜய் சேதுபதி போல. ஆனால், பாஞ்சாலியோ அஜீத் மாதிரி, “தெறிக்கவிடலாமா...” என்பது போல் பார்த்தாள். ஜனகா வடிவேலு போல குழம்பினாள்,விஷயத்தைக் கேட்ட பின், “இத பாரு பாஞ்சாலி, நமக்குள்ளே தகராறு வேணாம்...” என்று கூறிக்கொண்டிருந்தபோது, மூலை வீட்டு சங்கரி ஓடி வந்து, “பாஞ்சாலி, உன் சேவலை யாரோ தெருவோரத்துலே அம்மன் கோயில் வாசல்லே காவு கொடுத்திருக்கானுங்க...” என்று பதறியபடி கூறினாள்.

ஜனகா, “பாத்தியா பாஞ்சாலி... யாரோ திருட்டுப் பயதான் இதைச் செஞ்சிருக்கணும். ராத்திரி கூட குடிசைக்குள்ளே உன் சேவல் இருந்துச்சுன்னு நீயே சொன்னியே...”
என்றாள்.பதறியபடியே மூவரும் ஓடிப் போய்ப் பார்த்தபோது, சேவல் தலை வெட்டுப்பட்டுக் கிடந்தது. அதிர்ச்சியில் நின்றிருந்தாள் பாஞ்சாலி.“அம்மனுக்கு காவு கொடுத்திருக்கானுவ போல... என்ன வினையோ...” என்று ஜனகா கூறினாள். தொடர்ந்து, “இதை யாரும் தொடக் கூடாது. சமைக்க எடுக்கக் கூடாது...”
என்றாள்.

அப்போது ஆவுடை கிழவி, “பாஞ்சாலி போனது போகட்டும், ஏதோ தெய்வ குத்தம் போல. உனக்கு வேணும்னா என் சேவலை எடுத்துக்க…” என்றாள். வேண்டாம் என்று மறுத்தாள் பாஞ்சாலி. அவள் மனசுக்குள் ஏக்கமும் துக்கமும் போட்டி போட்டு வந்தன.ஒரு வாரம் போனது. ஜனகா ஆவுடை கிழவியைப் பார்த்து, “ஏ கெழவி அந்த சேவலுக்கு என்ன ஆயிருக்கும்னு நினைக்கிறே...” என்று கேட்டாள்.

சாணி தட்டிக்கொண்டே சொன்னாள் ஆவுடை கிழவி: “பாஞ்சாலியோட சேவல் நிறைய புண்ணியம் பண்ணியிருக்கு. அதுக்கு சொர்க்கத்தை நான்தான் வாங்கிக் கொடுத்தேன்...” என்று பட்டென்று சொன்னதும் திகைத்தாள் ஜனகா.

- சியாமளா கோபாலன்