கொரோனாவை தடுக்கும் மாத்திரை..?



கொரோனாவின் முதல் அலையின்போது ஹெச்.சி.க்யூ எனும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைக்காக பல நாடுகள் போட்டிபோட்டன. பிறகு இந்த மாத்திரையால் எந்த பலனும் இல்லை என்பது தெரிந்ததும் அந்த நாடுகள் பின்வாங்கிக்கொண்டன.
இதுபோல கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் உச்சம் தொட்டபோது ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக தமிழ்நாடே அல்லோலகல்லோலப்பட்டது. இதனாலும் பெரிதாக பலன் இல்லை என்பதை அறிந்தபிறகே கொஞ்சம் அமைதியானது தமிழ்நாடு. இந்நிலையில் ஐவர்மெக்டின் (ivermectin) என்ற மாத்திரை புதிய அலையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த மாத்திரை கொரோனாவைத் தடுக்கும் ஆற்றல் உடையதாக சில மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ஐவர்மெக்டினின் அறிவியல் உண்மை, நம்பகத்தன்மை குறித்து உட்சுரப்பி மருத்துவரான சேஷாத்திரியிடம் பேசினோம். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் இவர். இப்போது இராணிப்பேட்டையில் உள்ள திருமலை மிஷன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். ‘‘கொரோனா முதலில் தாக்கியபோது அதை குணப்படுத்துவதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் ஏதாவது முறையில் இந்த நோயை தடுக்க முடியாதா என்று எல்லா நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டன.

இந்த நேரத்தில்தான் ஹெச்.சி.க்யூ போன்ற மருந்துகள் வந்தன. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த மாத்திரைதான் இது. மலேரியா, முடக்குவாதம் போன்றவற்றை தடுப்பதற்காக இதைப் பயன்படுத்திவந்தனர். ஆய்வுக்கூடங்களில் செயற்கையாக கொரோனா வைரஸை உருவாக்கி, அதனுடன் இந்த மாத்திரையைச் சேர்த்து மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். இது கொரோனா வைரஸை ஓரளவு கட்டுப்படுத்துவதாகக் கண்டுபிடித்தார்கள். அதனால்தான் முதல் அலையில் இந்த மாத்திரைக்கு உலகளவில் போட்டி ஏற்பட்டது.

சிகிச்சைக்கு இதனை பயன்படுத்தினார்கள். இந்நிலையில் ஹெச்.சி.க்யூ மாத்திரைகளை எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளி களைக் கட்டுப்பாடான ஒரு சோதனையில் (கன்ட்ரோல் கிளினிக்கல் டெஸ்ட்) ஆராய்ந்தனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த மாத்திரைக்கு பெரிதாக இல்லை என்பதைக் கண்டுபிடித்தனர்.

கட்டுப்பாடான சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் எல்லா மருத்துவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் ஹெச்.சி.க்யூவை உலக சுகாதார நிறுவனமும், இந்தியா போன்ற நாடுகளும் சிகிச்சைப் பட்டியலில் இருந்து நீக்கின...’’ என்கிற சேஷாத்திரி, இந்தியாவில் சில காலம் இந்த மாத்திரை எப்படி பயன்பாட்டில் இருந்தது என்பதைக் குறித்தும் விளக்கினார்.

‘‘பரிசோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட வைரஸுக்கு எதிராக வேலை செய்கிறது; ஆனால், நோயாளிகளைக் குணப்படுத்தாது எனும்போது வைரஸைத் தடுப்பதற்கான ஒரு மருந்தாக ஹெச்.சி.க்யூவைப் பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை பல்வேறு நாடுகளில் நிலவியது. அதனால் இதைப் பயன்படுத்தினார்கள். இந்தியாவிலும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒன்றிய அரசு ஹெச்.சி.க்யூவை முன்களப்பணியாளர்கள்  பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது.

அண்மையில் கூட இந்தியாவின் மருத்துவப்பத்திரிகை ஒன்று செய்த ஆய்வில் இந்த மருந்தால் தடுப்புப்பயன் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது...’’ என்கிற மருத்துவரிடம், ‘‘இதுமாதியான அந்தஸ்தைத்தான் ஐவர்மெக்டினிக்கும் கேட்கிறார்களா..?’’ என்றோம்.‘‘இந்த இரண்டு மாத்திரைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஹெச்.சி.க்யூ மாதிரியே ஐவர்மெக்டினும் வளர்த்தெடுக்கப்பட்ட வைரஸைக் கட்டுப்படுத்துகிறது.ஆனால் தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதில் உள்ள வேறுபாடுகள் இரண்டையும் பிரிக்கிறது. ஹெச்.சி.க்யூவை சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள். ஆனால், ஐவர்மெக்டினை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

காரணம், ஆப்பிரிக்க நாடுகளில் யானைக்கால் நோய் வராமல் தடுப்பதற்காக இந்த மருந்தை கொடுத்து வந்தனர். இதனால் ஹெச்.சி.க்யூ மாதிரியே கொரோனாவின் முதல் தாக்கத்தின்போதே பல நாடுகள் இந்த மருந்தை சிகிச்சைக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஹெச்.சி.க்யூ மாதிரியே இதுவும் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் பெரிய பலனை அளிக்கவில்லை. அதனால் இந்த மாத்திரையையும் சிகிச்சைக்கான பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் நீக்கியது...’’ என்கிற சேஷாத்திரி, இந்த மருந்தை பலர் தடுப்புக்காக சிபாரிசு செய்வதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.

‘‘தடுக்கும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால் அதை பெரிய சாம்பிள் ஸ்டடி மூலமே நிரூபிக்க வேண்டும். அதையும் கட்டுப்பாடான சோதனையின் மூலமே நிரூபிக்க வேண்டும்.
உதாரணமாக, இந்த மாத்திரை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துகிறது என்று சோதனைக்கூடத்தில் முடிவு வெளியானது. உடனே கொரோனாவில் பாதிக்கப்பட்ட பல தெற்காசிய நாடுகள் இந்த மருந்தை சாதாரண மக்களுக்கும் கொடுத்து, கட்டுப்பாடான சோதனைக்கூடங்களில் ஆராய்ந்தன.

இதுமாதிரி பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்தன. இதையெல்லாம் சேர்த்து ஓர் ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதை மெட்டா அனாலிசிஸ் என்பார்கள்.

இந்த மெட்டா அனாலிசிஸ் முடிவை வைத்துக்கொண்டுதான் பிரிட்டன் மற்றும் சில அமைப்புகள் கொரோனாவைத் தடுப்பதற்கான மாத்திரையாக இதை சிபாரிசு செய்கின்றன...’’ என்கிற சேஷாத்திரி, ஐவர்மெக்டின் குறித்து மேலும் விவரித்தார்.

‘‘ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மாத்திரையை யானைக்கால் நோயைத் தடுப்பதற்காக பலகாலமாக பயன்படுத்தி வருவதாக சொன்னேன். அந்த நாடுகள் கொரோனாவால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாததை வைத்து இந்த மருந்துக்கு தடுப்புக்கு ஆதரவான குரல்கள் கேட்கின்றன.

அத்துடன் பிரேசிலில் கொரோனா தாண்டவமாடியபோது அந்த நாடு முழுவதும் லாக்டவுனில் இருந்தது. அந்த நாட்டின் சில பிரதேசங்கள் இந்த மாத்திரையை ஒரு தடுப்பு மருந்தாக பயன்படுத்தியது. இந்த மாத்திரையால் பயன் உண்டு என்பதை அந்த நாடு அறிவியல் ரீதியாக வெளியிட்டிருக்கிறது...’’ என்கிற மருத்துவர், இந்த மருந்தை தடுப்பாக பயன்படுத்துவதில் உள்ள தடைகள் குறித்தும் விளக்கினார்.

‘‘மெட்டா அனாலிசிஸ் செய்வதை ஒரு அறிவியல் பார்வையாக எடுத்துக் கொள்ளமுடியாது என்று உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற சி.டி.எஸ் எனப்படும் ‘சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல்’ அமைப்பும் சொல்கின்றன. கொரோனாவை தடுப்பதற்கான மருந்தாக இதை அறிவித்து விட்டால் எல்லா நாடுகளுமே இந்த மருந்தை ஒரு பாலிசியாக அறிவித்துவிடும். பாலிசியாக அறிவித்துவிட்டால் அந்த மாத்திரையால் ஏற்படும் விளைவுகளுக்கு உலக அமைப்புகளுக்கும், நாடுகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை ஏற்படும். பக்கவிளைவுகள் பெரிதாக இல்லை என்றாலும் தாறுமாறான அளவில் எடுக்கும்போது பிரச்சனை ஏற்படும்.

ஒருவேளை இந்த மருந்தை பல கோடிப் பேருக்கு கட்டுப்பாடான முறையில் பரிசோதித்து, அதன் பலன்களை வெளியிட்டால் இந்த அமைப்புகள் செவிமடுக்கலாம். ஆனால், கொரோனாவுக்குத் தடுப்பூசி தட்டுப்பாட்டுடன், முறையான மருந்துகளும் இல்லாத நிலையில் இந்தியாவில்கூட சில மருத்துவர்கள் இந்த மாத்திரையைத்தான் தடுப்பாக பயன்படுத்தக் கொடுக்கிறார்கள்.

இந்த மாத்திரை வெகுமக்களுக்கும் நம்பிக்கையைத் தர பலகோடிப் பேரை ஓர் இடத்தில் கூட்டி ஆய்வு செய்யவேண்டிய சூழ்நிலை மருத்துவ உலகுக்கு இருக்கிறது. ஆனால், இது முடியாத விஷயம். இப்படி இருக்கையில் இந்த மருந்து இல்லாவிட்டாலும் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் சமூக தடுப்பூசி எனும் மாஸ்க், கூட்டத்தை தவிர்த்தல், சானிடைசர்தான்...’’ என்று அழுத்தமாக முடித்தார் மருத்துவர்.

டி.ரஞ்சித்