சிசேரியன் சரியா..? தவறா..?



திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மக்களின் நலன் சார்ந்த பேச்சுக்களும், அறிக்கைகளும், செயல் திட்டங்களும் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. அதன் சாரமாக தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் ஒரு கூற்றை முன்வைத்தார்.“விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றெடுப்பது தமிழகத்தில் அதிகரித்து விட்டது. விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்புடையதல்ல. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு
ஊக்குவிக்கப்படும்...” என தெரிவித்திருந்தார்.   

“அமைச்சர் இப்படி சொன்னதற்கு காரணம் இருக்கிறது. பெரும்பாலான சிசேரியன்கள் உடல் நலம் தொடர்பான காரணங்களாலேயே நடைபெறு கிறது. என்றாலும் ஜாதகத்திற்காக நல்ல நேரம் அல்லது நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்யச் சொல்லும் மக்கள் இருக்கிறார்கள்...’’ என்று ஆரம்பித்தார் மகப்பேறு மருத்துவர் அஞ்சுகம் பூபதி.“குழந்தை உட்கார்ந்த நிலையில் இருக்கும் போது; இடுப்பு எலும்பு குறுகலாக இருந்து நார்மல் டெலிவரிக்கு ஏற்றதாக இல்லாதபோது; குழந்தையின் எடை அதிகமாக இருந்து இந்த எலும்புக்கு இறங்காமல் இருக்கும்போது;  நீர் சக்தி குறைவாக இருக்கும்போது;

பிரசவிக்கையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் போது… போன்ற காரணிகளினால் சிசேரியனைத் தவிர்க்க முடியாது...” என்கிறார் அஞ்சுகம் பூபதி.முதல் குழந்தை சிசேரியனில் பிறந்து, சிறிய இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிரசவிக்கும் போது சிசேரியன் என்பது 95% சாத்தியம் என்கிற அஞ்சுகம், ஒரு சிலருக்கு முதல் குழந்தை சிசேரியனில் பிறந்திருந்தாலும் ஸ்கார் ஹீல் ஆகியிருந்தால்; குழந்தை சராசரி எடையில் இருக்கும் போதும்; பிபி, சுகர் நார்மலாக இருக்கும்போதும்…Vaginal Birth After Caesarean Delivery முயற்சி செய்யலாம் என்கிறார்.  
 
“மேற்கண்ட காரணங்களை முன்கூட்டியே ஒரு மருத்துவரால் பரிசோதனை முறையில் கணிக்க முடிகிறது என்றால், பனிக்குடம் உடைந்து வலி வரும் வரை காத்திருக்காமல், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும்போது சிசேரியனை திட்டமிட்டு செய்யலாம். அதேவேளையில் சிசேரியனை எல்லோருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. தாய்க்கோ, சேய்க்கோ அல்லது இருவருக்குமோ சிக்கல் ஏற்படக்கூடிய சூழல்களில் மட்டுமே மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கிறார்கள்.

எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம், ‘முதலிலிருந்து ஒரு மருத்துவரிடம் பத்து மாதம் பரிசோதித்து வருகிறோம். எப்படி சிசேரியன் ஆச்சு?’ உண்மையில் 10%தான் எந்த பிரச்னையும் இல்லை, நார்மல் டெலிவரி செய்யலாம் என்று சொல்ல முடியும். மீதமுள்ள 80 - 90% பிரசவ வலி நேரத்தில்தான் கணக்கிட முடியும். அச்சமயத்தில் சிசுவின் தலை ரொட்டேட் ஆகிறதா, தலை கீழே இறங்கி வருகிறதா, கர்ப்ப வாய் திறக்கிறதா… என்பதெல்லாம் அப்போதுதான் தெரியும்.  ஸ்டேஜ் ஆஃப் லேபர் என்று இருக்கிறது. இதெல்லாம் வைத்துதான் முடிவு செய்ய முடியும்.
ஒருசிலர் சித்திரையிலோ, ஆடியிலேயோ குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே பிரசவம் நடைபெற வேண்டும் என சிசேரியன் செய்யச் சொல்கிறார்கள்.

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் 37 - 38 வாரங்களும், சுகர் இருப்பவர்களுக்கு 39 வாரங்களும் இருக்க வேண்டும். இதைத் தாண்டி தன்னுடைய மகள் இந்த வலியினைத் தாங்குவாளா... அழுவாளே… என்றெல்லாம் சிலர் சிசேரியன் செய்யச் சொல்கிறார்கள். வலியைத் தவிர்ப்பதற்காக சிசேரியன் செய்வது உகந்ததல்ல. இங்கு குழந்தையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. குழந்தையின் சார்பில் யார் பேசுவது? எனவே மருத்துவக் காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக சிசேரியனை தேர்ந்தெடுப்பது அவ்வளவு நல்லதல்ல...” என்கிறார் மருத்துவர் அஞ்சுகம்.

விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்புடையதல்ல என்ற அமைச்சரின் கூற்றில் சிக்கல் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அரவிந்தன்.
“ஒரு பெண் பல காரணங்களால் சிசேரியனைத் தேர்வுசெய்யலாம். இயல்பான பிரசவத்தால் ஏற்படக்கூடிய சொல்லொணாத வலியும் வேதனையும் அதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.
பிரசவ வலி எடுத்து இடுப்பு நோகப் பிள்ளை பெற்றெடுப்பதுதான் தாய்மைக்குரிய பண்பு என்னும் நம்பிக்கை நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வலிக்க வலிக்கப் பிள்ளை பெற்றால்தான் தாய்மை முழுமை அடைகிறது என்னும் நம்பிக்கை இதன் நீட்சியாக நிலவுகிறது.

எனவே, எனக்கு அந்த வலியைத் தாங்க முடியாது, தயவுசெய்து சிசேரியன் செய்துவிடுங்கள் என்று ஒரு பெண் கேட்பதைப் பாவச் செயலாகப் பார்க்கும் மனப்பான்மை நம் சமூகத்தில் இருக்கிறது.வலியைத் தாங்க முடியாமல் சிசேரியனை தேர்வு செய்யும் உரிமையைப் போலவே, தான் நம்பும் ‘நல்ல’ நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புவதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு. இது மூட நம்பிக்கை என்று கருதுபவர்கள் அதற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டுமே தவிர அந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான அந்தப் பெண்ணின் உரிமையைப் பறிக்க முடியாது.

இதைச் செய்தால் இன்ன பலன், இன்ன கஷ்டத்திற்கு இன்ன பரிகாரம், இந்தக் கோரிக்கைக்கு இந்த வேண்டுதல் என்று பல விதமான விரதங்களும் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் உலகம் முழுவதும் உள்ளன. ஜாதகத்தை நம்புவதும் அத்தகைய பழக்கம்தான்.மக்கள் சோதிடத்தை நம்புவதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்றால் அதே சோதிடத்தின் அடிப்படையில் தன் குழந்தைப் பிறப்பைத் தேர்வு செய்யும் உரிமையை மட்டும் ஏன் இயல்புக்கு விரோதமானதாகப் பார்க்க வேண்டும்?

இந்த நம்பிக்கை சரியா தவறா என்பதல்ல இங்கு கேள்வி. அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கும் உரிமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி. நம்பிக்கையைக் கொண்டிருக்கும் உரிமை இருக்கும் என்றால் அதன் அடிப்படையில் தன் குழந்தை பிறக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பும் உரிமையும் அதன் தொடர்ச்சிதானே.

தன் குழந்தை நல்ல நேரத்தில் பிறந்து நல்ல வாழ்க்கையைப் பெறுவதற்காக சிசேரியன் தரும் உடல் உபாதைகளைப் பொறுத்துக்கொள்வதைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு விதத்தில் தியாகம்தானே?  தாய்மை எனப் புனிதப்படுத்தப்படும் குணங்களில் இந்தத் தியாகமும் அடங்காதா..?” என்ற கேள்வியினை முன் வைக்கும் அரவிந்தன், சுகப்பிரசவம் என்னும் சொல்லாடலும் பெண்களால் கேள்விக்கு உட் படுத்தப்படுகிறது என்கிறார். “ஆங்கிலத்தில் நார்மல் டெலிவரி என்பது தமிழில் சுகப் பிரசவம் என வழங்கப்படுகிறது. இந்தச் சொல்லாடலையே கேள்விக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சுகம் என்றால் யாருக்குச் சுகம், பொறுக்க முடியாத வலியில் என்ன சுகம் வேண்டியிருக்கிறது என்று பெண்கள் கேட்கும் கேள்வியை அமைச்சரும், சுகப் பிரசவம் என்று பழக்கத்தின் காரணமாகச் சொல்பவர்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இயல்பான பிரசவம் அல்லது இயல்பு வழிப் பிரசவம் என்று சொல்லிப் பழகலாம். இது வெறும் சொல்லாடல் குறித்த பிரச்னை அல்ல. பிரசவம் குறித்த பொதுப்புத்தியின் பிரச்னை. இந்தச் சொல்லாடலும், சிசேரியன் அல்லது இயல்புவழிப் பிரசவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பெண்ணின் உரிமையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை...” என்னும் அரவிந்தன், இன்னொரு சிக்கலையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

‘‘இயல்பு வழிப் பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியன் பிரசவத்தால் மருத்துவமனைகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் பல தனியார் மருத்துவமனைகள் தேவையற்ற சமயங்களிலும் சிசேரியனைப் பரிந்துரைக்கின்றன என்னும் குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதைக் கண்காணித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரின் நோக்கம் இதுதான் என்றே நினைக்கிறேன்...’’ என்கிறார் அரவிந்தன்.

சிசேரியனால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து!

சிசேரியன் பிறப்புகளில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் சிசேரியன் பிறப்புகள் அபாயகரமாகவே அதிகரித்திருக்கின்றன. இது நடுத்தர, பணக்கார வர்க்கத்தில்தான் அதிகமாம்.“மருத்துவக் காரணங்களுக்கல்லாமல் செய்யப்படும் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருக்கிறது. சிசேரியனால் கர்ப்பப்பை சிதைவுறுவது, நஞ்சுக் கொடி (placenta) குறைபாடு போன்றவற்றுக்கு வாய்ப்புண்டு.

சிசேரியனால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்னைகள், ஒவ்வாமைகள், ஆஸ்துமா, நோய் தடுப்புச் சக்தியில் மாற்றம் ஆகியவை நிகழ வாய்ப்புண்டு. இவை வாழ்நாளில் நீடிப்பது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றாலும் சிசேரியனுக்கும் இவற்றுக்குமான தொடர்பு இருக்கலாம் என்றும் இப்போதைய தகவல்கள் சொல்கின்றன. சிசேரியன் என்பது பிரச்னைகள் அற்ற பிரசவம் என்பது தவறான புரிதல்...”

- ‘லான்ஸெட்’ மருத்துவ இதழ்

அன்னம் அரசு