மாநில அரசே OTT தளத்தை தொடங்கலாம்!



சிறு முதலீட்டில் தயாரிக்கப்படும் மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்கு, கேரள அரசே ஒரு ஓடிடி தளத்தை தொடங்கப் போவதாக வெளியாகியிருக்கும் செய்தி எட்டு திசைகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘அமேசான்’, ‘நெட்பிளிக்ஸ்’ உள்ளிட்ட பகாசுர நிறுவனங்கள்தான் ஓடிடி தளங்களை நடத்த முடியும் என்ற பொதுக் கருத்தை இது மாற்றி யிருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக 20க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் இருக்கின்றன. போதும் போதாததற்கு ‘சோனி’ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் ஓடிடி தளங்களை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில்தான் கேரள அரசின் இந்த அறிவிப்பு பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மாநில அரசால் தன் மக்கள் சார்ந்த நலன்களை பூர்த்தி செய்தபடியே வணிகத்தளமான ஓடிடி போன்றவற்றையும் நடத்த முடியுமா என்ற கேள்வி பிறந்துள்ளது.இதையே இப்படியும் கேட்கலாம். யார் வேண்டுமானாலும் ஓடிடி தளத்தை தொடங்க முடியுமா..?
முடியும் என்பதுதான் இதற்கான பதில்.

ஆந்திராவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்தின் மகன் தொடங்கியிருக்கும் ‘ஆஹா’ ஓடிடி தளம் தெலுங்கு மொழியில் உருவாகும் சிறு - நடுத்தர - மெகா பட்ஜெட் படங்களை திரைக்கு வந்த பிறகும் திரையரங்குக்கு வருவதற்கு முன்பும் தன் தளத்தில் ஒளிபரப்பி கணிசமாக லாபம் சம்பாதித்து வருகிறது.

இப்படி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல... பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்ல... பொது மக்களும் கூட ஓடிடி தளத்தை தொடங்கலாம்.

ரைட். இதற்கு என்ன செய்ய வேண்டும்..?
ஒரு ஓடிடி தளத்தை தொடங்க 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தால் போதும். வீடியோக்களை இணையதளத்தில் வலையேற்றி வைக்க, மேகக்கணினி சேமிப்புக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வரை தொடர் செலவு இருக்கும். நிறைய வசதிகளோடு செய்ய வேண்டும் என்றால் இன்னொரு 25 லட்சம் ரூபாய் ஆகலாம்.

ஆக, இத்தொகை இருந்தால் போதும் ஓடிடி தளத்தை தொடங்கி விடலாம். ஆனால், தொடர்ந்து அத்தளத்தை இயக்க கூடுதலாக பணம் தேவை.ஆமாம். தொடங்கிய ஓடிடி தளத்தை நிர்வாகம் செய்வதற்கும், தொடர் வடிவமைப்பு, மேம்படுத்தல் ஆகியவற்றைச் செய்யவும் திறமையான பணியாளர்கள் தேவை. அவர்களுக்கு மாதா மாதம் ஊதியம் வழங்க வேண்டும்.

அடுத்து புதிய வெப் சீரிஸ்களையோ, திரைப்படங்களையோ தயாரிக்க முதலீடு தேவை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வாங்க தகுதி வாய்ந்த வணிகப் பிரிவு தேவை. கதைகளைக் கேட்டு முடிவு செய்வதற்கு உரிய ஆசிரியர் குழு தேவை.எல்லாவற்றுக்கும் மேல் ஓடிடி தளங்களில் வருமானம் வருவது, அதன் சந்தா தொகையின் மூலமாகவே.
எனவே, சந்தா செலுத்துவோரது எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். சந்தா செலுத்தி வருபவர்கள் நம்மை விட்டு விலகாமல் தக்க வைக்க வேண்டும். போட்டி ஓடிடி தளத்தினர் பக்கம் வாடிக்கையாளர்கள் போய் விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பலரும் வீட்டிலேயே முடங்கினர். எனவே ஓடிடி தளங்களைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்தது. இதனையடுத்து ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் பெருகியது. ஆனால், இந்த ஆண்டு அப்படியில்லை. சந்தா செலுத்திய பலர் அந்தந்த தளங்களில் உள்ள சினிமாக்களையும் வெப் சீரிஸ்களையும் பார்த்து முடித்து விட்டனர். இவர்களுக்கு புதிய உள்ளடக்கம் தேவை. எனவே சந்தாவை புதுப்பிக்க யோசித்து வருகின்றனர்.அதேபோல் பொது முடக்கம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் இந்த ஆண்டு வெளியே வந்துவிட்டனர்; தங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டனர். இப்பிரிவினரும் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்கவில்லை.

சமீபத்தில் வெளியான ஆய்வின்படி ஏற்கனவே இருக்கும் ஓடிடி தளங்கள் லாபமே சம்பாதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஆக, ஓரளவு வசதி படைத்தவர்கள் ஓடிடி தளத்தை தொடங்கலாம். அதாவது யானையை வாங்குவது எளிது. ஆனால், அதற்கு தீனி போடுவது கடினம். இந்த எதார்த்தத்துக்கு மத்தியில்தான் கேரள அரசு சிறு முதலீட்டில் தயாரிக்கப்படும் மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு ஓடிடி தளத்தை தொடங்கப் போவதாகஅறிவித்துள்ளது.

சரி. மக்கள் நலன் சார்ந்த ஓர் அரசு, வணிகத்தில் இறங்கலாமா..?
இறங்கலாம். காரணம் வரி வருவாய். என்டர்டெயின்மென்ட் டாக்ஸ் வழியாக மாநில - ஒன்றிய அரசுகளுக்கு கணிசமான அளவில் வரி கிடைத்து வருகிறது. இப்பொழுது கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் திரையரங்குகள் இயங்காமல் இருக்கின்றன. இதனால் மாநில - ஒன்றிய அரசுகளுக்கு கிடைத்து வந்த பொழுதுபோக்கு வரி தடைப்பட்டிருக்கிறது.இதற்கு ஒரு தீர்வாகத்தான் கேரள அரசு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இது ஒன்றும் புதிது அல்ல. முன்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்துக்குள் அதுவும் தங்கள் மொழியில் தயாராகும் படத்துக்கு மானியம் வழங்கி ஊக்குவித்ததல்லவா..? தங்கள் மாநிலத்துக்குள் ஸ்டூடியோ நிறுவியதல்லவா..? இதன் வழியாக திரையுலகை வாழ வைத்து அதன் வழியாக வரி வருவாயை ஈட்டியதல்லவா..? அப்படித்தான் இந்த முயற்சியும்.
இது வெற்றிபெற்றால் ஒவ்வொரு மாநிலமும் களத்தில் இறங்கும். மாநிலத்துக்கு ஒரு ஓடிடி தளத்தை அரசே உருவாக்கும். படத் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கும். அந்தந்த மொழியைச் சேர்ந்த திரையுலகம் செழிக்கும். அரசுக்கும் வரி வருவாய் தடையின்றி கிடைக்கும்!

என். ஆனந்தி